இந்தூர் - வாரணாசி இடையே வருகிறது மூன்றாவது Tejas Express!
IRCTC-ன் மூன்றாவது தனியார் ரயில் இந்தூர் மற்றும் வாரணாசி இடையே இயக்கப்படும் என தகவல்கள் கசிந்துள்ளது.
IRCTC-ன் மூன்றாவது தனியார் ரயில் இந்தூர் மற்றும் வாரணாசி இடையே இயக்கப்படும் என தகவல்கள் கசிந்துள்ளது.
இது தொடர்பாக ரயில்வே வாரியத் தலைவர் வினோத் குமார் யாதவ் தகவல் அளித்துள்ளார். இரவில் ஓடும் இந்த ரயிலின் பெட்டிகள் ஹம்ஸஃபர் எக்ஸ்பிரஸ் போல இருக்கும் எனவும், கடந்த சில மாதங்களில், IRCTC இரண்டு வழித்தடங்களில் தனியார் ரயில்களை இயக்கத் தொடங்கியுள்ள நிலையில் இந்த ரயில் ஆனது IRCTC-ன் மூன்றாவது ரயிலாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. குறித்த இந்த ரயில்களை இயக்க தனியார் நிறுவனங்கள் முன்வருவார்கள் என்று ரயில்வே வாரியத் தலைவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
டெல்லி-லக்னோ மற்றும் அகமதாபாத்-மும்பை ஆகிய இரு வழித்தடங்களில் ஏற்கனவே தனியார் ரயில்கள் இயக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையல் மூன்றாவது தனியார் ரயில் இந்தூர்-வாரணாசி பாதையில் இயக்கப்படும் என்று யாதவ் தெரிவித்துள்ளார். இந்த ரயில் வாரத்தில் 3 நாட்கள் இயங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இது லக்னோ வழியாக 2 நாட்களும் அலகாபாத் வழியாக ஒரு நாளும் இயங்கும் என கூறப்படுகிறது.
இந்த ரயில் வண்டியில் நாற்காளி பெட்டி இருக்காது என கூறப்படுகிறது. அதாவது, IRCTC-யால் இயக்கப்படும் இந்த வகையின் முதல் ரயிலாக இது இருக்கும், ஆனால் ஸ்லீப்பர் கோச் கூடுதலாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பிப்ரவரி 20-ஆம் தேதி தனது சேவையினை தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு செல்லும் நாட்டின் இரண்டாவது தனியார் ரயிலான தேஜாஸ் 2020 ஜனவரி 19-ஆம் தேதி இயக்கத் தொடங்கியது. நாட்டின் இரண்டாவது தனியார் ரயிலை ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி ஆகியோர் கொடியசைத்து துவங்கி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக நேற்றைய தினம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தனது இரண்டாம் நிதி நிலை அறிக்கையினை தாக்கல் செய்தார். தனது நிதி நிலை அறிக்கையின் போது அவர், முக்கிய சுற்றுலா தலங்களுக்கு இடையில் மேலும் அரை அதிவேக தேஜாஸ் போன்ற ரயில்கள் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது மூன்றாவது தேஜாஸ் ரயில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும் நிதி நிலை அறிக்கையில் நிர்மலா தெரிவிக்கையில்.,
ரயில்வேக்கு சொந்தமான நிலத்தில் ரயில் தடங்களுடன் ஒரு பெரிய சூரிய ஆற்றல் திறன் கொண்ட அமைப்பையும் அவர் அறிவித்தார். மேலும் பல ரயில் நிலையங்களை நவீனமயமாக்கவும், மறுவடிவமைக்கவும் அரசாங்கம் செயல்பட்டு வருவதாகவும், முக்கிய சுற்றுலா தலங்களை இணைக்க தேஜாஸ் போன்ற ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். மேலும் பெங்களூரு புறநகர் ரயில் தேவையான ஊக்கத்தை வழங்கும் என்று அவர் கூறினார். அதேப்போல் அழிந்துபோகக்கூடிய பொருட்களை நகர்த்துவதற்காக இந்திய ரயில்வே கிசான் ரெயிலை அமைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.