சேலம் சிறுமிக்கு நியாயம் கிடைக்குமா? ஆதரவாக களமிறங்கிய நெட்டிசன்கள்...
சேலம் சிறுமியை கழுத்தை வெட்டித் துண்டாக்கி கொன்ற கொடூரன் தினேஷ்குமாரை கடுமையாக தண்டிக்க வேண்டும், சிறுமிக்கு நீதி கிடக்க வேண்டும் என சமூக வலைதளத்தில் ஒலிக்கும் குரல்கள்.
சேலம் மாவட்டம் ஆத்தூருக்கு அருகில் சுந்தரபுரத்தில் வசிக்கும் விவசாயி சாமிமுத்து. அவரது மனைவி சின்னப்பொண்ணு தம்பதியரின் இளைய மகளை, அவரது வீட்டுக்கு அருகில் 27 வயது தினேஷ்குமார் என்பவர் தனது மனைவியுடன் வசித்து வந்தார். பக்கத்து வீடு என்பதால், சிறுமி அடிக்கடி தினேஷ்குமார் வீட்டிற்கு சென்று வருவது வழக்கம். அப்படி அந்த சிறுமி செல்லும்போதெல்லாம், அவருக்கு பாலியல் சீண்டல் கொடுத்துள்ளான் தினேஷ்குமார்.
கடந்த 22 ஆம் தேதி தினேஷ்குமாரின் மனைவி அழைத்ததால், சிறிது நேரம் கழித்து அவரது வீட்டுக்கு சிறுமி சென்றுள்ளார். ஆனால் அப்போது அங்கு தினேஷ்குமாரின் மனைவி இல்லை. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட தினேஷ்குமார் சிறுமியை பாலியல் உறவுக்கு கட்டாயப்படுத்தி உள்ளார். அவனிடம் இருந்து எப்படியோ தப்பித்து, தன் வீட்டிற்கு சென்று தாயிடம் நடந்ததை கூறியுள்ளார்.
அதேசமயத்தில் தினேஷ்குமாரின் செயல், அவரது மனைவிக்கு தெரிந்தது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரமடைந்த தினேஷ்குமார் அரிவாளை எடுத்துக்கொண்டு சிறுமியின் வீட்டுக்குச் சென்று முதலில் அவரது தாயாரைத் தாக்கியுள்ளார். பிறகு சிறுமியின் கழுத்தை வெட்டித் துண்டாக்கி சாலையில் வீசியுள்ளார். இதுக்குறித்து தகவலை போலீசாரிடம் தெரிவிக்கப்பட்டு, தினேஷ்குமாரை காவல் துறையினர் கைது செய்தனர்.
13 வயதே ஆன பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடுமையைப் பார்த்து அக்கம்பக்கத்தினர் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர். தினேஷ்குமாரின் இந்த வெறிச்செயலுக்கு தலைவர்கள் மிகுந்த கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.
அந்த சிறுமி தலித் என்பதால் அவருக்கு நீதி கிடைப்பதில் கால தாமதம் ஆகிறது. மேலும் அவரைக் குறித்து எந்த ஊடகமும் பேசவில்லை என சமூக வலைத்தளங்களில் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் #JusticeforRajalakshmi என்ற ஹேஸ்டேக் மூலம் சிறுமிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.