கர்நாடக தமிழ் பத்திரிக்கையாளர் சங்கத்தின் தமிழ் புத்தக திருவிழா: வாசிக்க, யோசிக்க பெங்களூரு தமிழர்களே வருக!!
கர்நாடக தமிழ் பத்திரிக்கையாளர் சங்கத்தின் சார்பில் இரண்டாமாண்டு தமிழ் புத்தக திருவிழா நாளை தொடங்கி 10ம் தேதி வரை நடக்கிறது.
கர்நாடக தமிழ் பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் இரண்டாம் ஆண்டு தமிழ் புத்தக திருவிழா வரும் டிசம்பர் 1 (நாளை) தொடங்கி வரும் 10ம் தேதி வரை நடக்கிறது. விழாவை கர்நாடக மாநில சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் தினேஷ்குண்டுராவ் தொடங்கி வைக்கிறார்.
இது குறித்து புத்தக திருவிழா பொறுப்பாளர்கள் பேராசிரியர் கு.வணங்காமுடி, கோ.மாணிக்க வாசகம், புலவர் கார்த்தியாயினி, இலக்கிய எழுத்தாளர் தி.சு.இளங்கோவன் மற்றும் இம்மாக்குலேட் அந்தோணி ஆகியோர் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறும்போது, கடந்தாண்டு தமிழ் பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் 8 நாட்கள் நடைபெற்ற தமிழ் புத்தக திருவிழா வெற்றியுடன் முடிந்தது. அதன் வெற்றியை தொடர்ந்து இரண்டாமாண்டு தமிழ் புத்தக திருவிழா வரும் டிசம்பர் 1 முதல் 10ம் தேதி வரை பத்து நாட்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றனர்.
பெங்களூரு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் சாலையில் உள்ள இன்ஸ்டிடூட் ஆப் இன்ஜினியர்ஸ் வளாகத்தில் நடக்கும் புத்தக திருவிழாவில் 30க்கும் மேற்பட்ட பதிப்பங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்கிறார்கள். கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு, பொது அறிவு, அறிவியல், இலக்கியம், இலக்கணம், ஆன்மீகம், புராணம், நாடகம், வரலாற்று சிறப்புமிக்க நாடகங்கள், நாவல்கள், ஓவியம் சிறுவர்களின் அறிவு வளர்ச்சி மற்றும் விளையாட்டுகளை ஊக்கப்படுத்தும் வகையிலான புத்தகங்கள் இடம் பெறுகிறது.
புத்தக திருவிழா நடக்கும் நாட்களில் தினமும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் பங்கேற்கும் பங்கேற்கும் வினா-விடை போட்டிகள், நாட்டுபுற கலை போட்டிகள், கவிதை, கட்டுரை போட்டிகள் நடத்தப்படுகிறது. சமூக முற்போக்கு நாடக அரங்கேற்றம், தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள், விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் எழுதியுள்ள நூல்கள் வெளியிடு, பட்டிமன்றம், கருத்தரங்கம், கவியரங்கம் ஆகியவை நடக்கிறது. புத்தக திருவிழாவில் சிறந்த நூல்களுக்கு ரூ.25 ஆயிரம் பரிசும், போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு ரூ.1 லட்சம் வரை பரிசுகள் வழங்கப்படுகிறது.
புத்தக திருவிழாவில் நமது தமிழ் பாரம்பரிய விளையாட்டுகள், உணவுகள் குறித்தும் மக்களுக்கு எடுத்துரைக்கப்படுகிறது. தமிழர்களின் 150க்கும் மேற்பட்ட பாரம்பரிய விளையாட்டுகள் நடத்தி காட்டுவதுடன் அதை எதிர்கால தலைமுறையினர் தெரிந்து கொள்ள வசதியாக பயிற்சியும் கொடுக்கப்படுகிறது.
புத்தக திருவிழாவின் முதல்நாள் துவக்க விழா டிசம்பர் 1ம் தேதி மாலை 3 மணிக்கு நடக்கிறது. கர்நாடக மாநில சுற்றுலா துறை இயக்குனர் டாக்டர் ராம்பிரசாத் மனோகர் தலைமையில் நடக்கும் விழாவில் கர்நாடக மாநில சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் தினேஷ்குண்டுராவ் தொடங்கி வைக்கிறார். சிறப்பு அழைப்பாளர்களாக மக்களவை உறுப்பினர் பி.சி.மோகன், சிவாஜிநகர் தொகுதி பேரவை உறுப்பினர் ரிஜ்வான் அர்ஷத், இன்ஸ்டிடூட் ஆப் இன்ஜினியர் தலைவர் லட்சுமண், பத்திரிக்கையாளர் பா.தேனமுதன், முன்னாள் மேயர்கள் ஆர்.சம்பத்ராஜ், ஜி.பத்மாவதி, முன்னாள் மாநகராட்சி உறுப்பினர்கள் எஸ்.அனந்தகுமார், பி.தன்ராஜ் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். சிறப்பு அழைப்பாளராக அறிஞர் குணா, தமிழ்நாடு ஐஎன்டியூசி செயல்தலைவர் ஆர்.குப்புசாமி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
மேலும் படிக்க | மழை பாதிப்பு: அமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
புத்தக திருவிழா நோக்கம் குறித்து பேராசிரியர் கு.வணங்காமுடி கூறிய போது, "பத்து நாட்கள் நடக்கும் விழாவில் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை எழுதியுள்ள பெரியாரும் அறிவியலும், இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழக விஞ்ஞானி டெல்லி பாபு எழுதிய கையறுகே கிரிடம், எழுத்தாளர் பி.சிவசுப்ரமணியம் எழுதியுள்ள வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் என்ற ஆங்கில நூல், பத்திரிக்கையாளர் எம்.எஸ்.மணி எழுதியுள்ள கவிகார்மா என்ற கன்னட நூல், எழுத்தாளர் அ.சௌரி எழுதியுள்ள திராவிடத்தால் எழுவோம், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழ் பரப்பும் நடையில் நின்றுயர் நாயகன், அறிஞர் குணா எழுதியுள்ள தமிழரின் தொன்மை நூல் திறனாய்வு, பத்திரிக்கையாளர் இரா.வினோத் எழுதியுள்ள தோட்டக்காட்டீ ஆகிய நூல்கள் வெளியிடப்படுகிறது." என்றார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய முன்னாள் விஞ்ஞானிகள் மயில்சாமி அண்ணாதுரையிடன் மாணவர்கள் பங்கேற்கும் நேருக்கு நேர் நிகழ்ச்சி நடக்கிறது. இஸ்ரோவின் திரவ உந்துவிசை மைய இயக்குனர் நாராயண், கவிஞர் அறிவுமதி, நெல்லை ஜெயந்தா, பேராசிரியர் அப்துல்காதர், பார்த்திபராஜா உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். விழாவின் இறுதி நாளில் தமிழறிஞர் குணாவுக்கு தமிழ் பெருந்தகை விருதும், 25பேருக்கு கர்நாடக தமிழ் ஆளுமை விருதும் வழங்கப்படுகிறது. இதில் தமிழ்நாடு முன்னாள் அமைச்சரும் வேலூர் தொழில்நுட்ப நிகர்நிலை பல்கலைகழக வேந்தர் ஜி.விஸ்வநாதன் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். புத்தக திருவிழாவின் சிறப்பு போற்றும் சிறப்பு மலர் வெளியிடப்படுகிறது.
மேலும் படிக்க | சென்னையில் தேங்கிய மழை நீர்: வாகன ஓட்டிகள் அவதி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ