போலி குக்கர்கள் வெடிக்கும் ஆபத்து - மக்களே உஷார்
Premier Cooker: பெங்களூரு சுற்று வட்டார பகுதியில் பிரீமியர் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி பிரியா இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனம் போலி குக்கர்களை தாயரித்து விற்பதாக புகார்கள் வந்தன.
சென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்ததை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் சிவநேசன் அண்ட் கோ. இந்த நிறுவனம் கடந்த 48 ஆண்டுகளாக பிரீமியர் என்ற பெயரில் குக்கர்,மிக்ஸி, கிரைண்டர், நான்ஸ்டிக் தவா உள்ளிட்ட பல்வேறு வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்து மக்களின் நன் மதிப்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில் பெங்களூரு சுற்று வட்டார பகுதியில் பிரீமியர் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி பிரியா இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனம் போலி குக்கர்களை தாயரித்து விற்பதாக புகார்கள் வந்தன. அதனை தொடர்ந்து பிரீமியர் நிறுவனம் பெங்களூரு காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தது. அந்த புகாரின் பேரில் பார்க் டவுன் பகுதியில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சோதனை செய்து தேஜ் சிங் என்பவரை கைது செய்தனர். அவரது வீடு மற்றும் கிடங்கில் சோதனை செய்ததில் பிரீமியர் உட்பட பல்வேறு நிறுவனங்களின் பெயரில் தயாரிக்கப்பட்ட பல லட்சம் மதிப்பிலான போலிப் பொருட்களை போலீஸார் கைப்பற்றினர்.
இது தொடர்பாக பிரீமியர் பொருட்களை தயாரித்து வரும் சிவநேசன் அண்ட் கோ நிறுவனத்தின் சட்ட ஆலோசகர் முகுந்தன் ஜீ தமிழ் நியூஸ்க்கு அளித்துள்ள நேர்காணலில், பிரீமியர் பெயரில் போலி குக்கர்கள் தயாரிக்கப்பட்டு விற்கப்படுவதாகவும், வாடிக்கையாளர்கள் விழிப்போடு இருக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார். முன்பு கோவை பிரீமியர், பிரசாந்த் பிரீமியர் போன்ற பெயர்களில் போலி குக்கர்கள் தயாரிக்கப்பட்ட நிலையில் தற்போது பவர் பிரீமியர் என்ற பெயரில் போலி குக்கர் விற்கப் படுவதாகவும், பிரீமியர் நிறுவனத்தின் பொருட்களுக்கு முன் SS என்ற அடையாள குறியீடு இருக்கும் என்றும் அதை வாடிக்கையாளர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | இந்த உணவுகளை பிரஷர் குக்கரில் சமைக்கவே கூடாது!
போலி குக்கர்கள் தரமற்ற பொருட்களால், இந்திய தர நிர்ணய ஆணையத்தின் (ISI) விதிமுறைகளை கடைப்பிடிக்காமல், எந்த ஒரு லேப் பரிசோதனையோ, தர பரிசோதனையோ இல்லாமல் தயாரிக்கப்படுவதாகவும் அவற்றில் சமைக்கும் உணவே விஷமாகும் அபாயம் உள்ளதாகவும், போலி குக்கர்களால் எரிவாயு செலவினமும் அதிகரிக்கும் என்பதோடு போலி குக்கர்கள் வெடிக்கும் ஆபத்து நிறைந்தது எனவும் எச்சரித்துள்ளார்.