கனரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற 8-ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும் என நிபந்தனை இனி இல்லை என தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய மோட்டார் வாகன சட்டப்படி கனரக வாகனங்களை இயக்க விரும்புவோர் 'ஓட்டுநர் உரிமம்' பெற குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு கல்வி சான்றிதழை விண்ணப்பத்துடன் இணைப்பது கட்டாயம். இந்நிலையில் தற்போது கனரக வாகனங்களின் தேவை அதிகரித்துள்ள நிலையில் 8-ஆம் வகுப்பு கூட படிக்காதவர்கள் தான் கனரக வாகனங்களை ஓட்டும் நிலை உள்ளது. இதன் காரணமாக ஓட்டுனர் பற்றாக்குறை நீடிக்கிறது. 


எனவே கனரக வாகன உரிமையாளர்கள் 'கனரக வாகன ஓட்டுனர் உரிமம் பெறும் கல்வித்தகுதியை நீக்க வேண்டும்' என மத்திய அரசிடம் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் புதிய மோட்டார் வாகன சட்டத்தில் கனரக வாகன ஓட்டுனருக்கான கல்வித் தகுதியை நிர்ணயிக்கும் சட்ட விதியை நீக்கி கடந்த செப்டம்பர் 23-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இதைத்தொடர்ந்து தமிழக போக்குவரத்து துறை கமிஷனர் சமயமூர்த்தியும் 'கனரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற கல்வித்தகுதி சான்றிதழ்களை கேட்க வேண்டாம்' என உத்தரவிட்டுள்ளார்.


இதை பொது மக்களுக்குத் தெரியும் வகையில் அறிவிப்பு பலகையில் ஒட்டும் படியும் வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.


கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்துள்ளது. புதிய மோட்டார் வாகனங்கள் சட்டத்தின் படி பல அதிரடி அறிவிப்புகள் அவ்வப்போது வெளியாகி வாகன ஓட்டிகளை பரபரப்பில் ஆழ்த்தி வருகிறது. அந்த வகையில் முன்னதாக, காலாவதியான ஓட்டுநர் உரிமங்களை புதுப்பிப்பதற்கு கால அவகாசம் 5 ஆண்டுகளில் இருந்து 1 ஆண்டாக குறைக்கப்பட்டது. 


மேலும் இந்த கால அவகாசத்திற்குள் ஓட்டுநர் உரிமைத்தை வாகன ஓட்டிகள் புதுப்பிக்காத பட்சத்தில் அவர்கள் புதிய ஓட்டுநர் உரிமத்திற்கே விண்ணப்பிக்க வேண்டியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது மத்திய மோட்டார் வாகன சட்டப்படி கனரக வாகனங்களை இயக்க விரும்புவோர் 'ஓட்டுநர் உரிமம்' பெற குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு கல்வி சான்றிதழை விண்ணப்பத்துடன் இணைப்பது கட்டாயம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.