பாகிஸ்தானை சேர்ந்த பெண் திருமணமாகி 34 வருடத்திற்கு பின்னர் இந்திய குடியுரிமை பெற்றுள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவரை திருமணம் செய்து இந்தியாவில் வசித்து வரும் பாகிஸ்தான் பெண்ணுக்கு சுமார் 34 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய குடியுரிமை கிடைத்தது. கடந்த 1960 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் ஐதராபாத் நகரில் பிறந்தவர் ஜூபைதா பேகம் என்ற பெண். இவர், உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த முசாபர் நகரின் யோகேந்தர்பூரில் வசிக்கும் சையத் முகமது ஜாவேத் என்பவரை 1985 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 


இதையடுத்து, இவர் இந்தியாவில் வசிக்க அனுமதி கேட்டு, நீண்ட கால விசாவுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் விண்ணப்பித்தார். ஆனால், இவருக்கு தொடர்ந்து 10 ஆண்டுகள் வசிக்கும் விசாவை மத்திய அரசு வழங்கியது. பின்னர் 1994 ஆம் ஆண்டு ஜூபைதா, மீண்டும் நீண்ட கால விசா கேட்டு உள்துறை அமைச்சகத்திடம் விண்ணப்பம் செய்தார். தொடர்ந்து விசா நீட்டிக்கப்பட்டது. 


இந்நிலையில், தற்போது ஜூபைதாவுக்கு இந்திய குடியுரிமை கிடைத்துள்ளது. இதன் மூலம் அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் எண், ரேசன் கார்டு ஆகியவற்றை அவரால் பெற முடியும். ஜாவேத் - ஜூலைதா தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது.



இது குறித்து ஜூபைதா ANI-இடம் கூறுகையில்; ஜாவேத்தை 34 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டேன். இந்திய குடியுரிமை கேட்டு, லக்னோ முதல் டில்லி வரை பல அரசு அதிகாரிகளை சந்தித்தேன். ஆனால், குடியுரிமை கிடைக்காததற்கான காரணம் தெரியவில்லை. இதனை காரணம் காட்டி விசா கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. தற்போது இந்திய குடியுரிமை கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது, என்றார்.



உளவுத்துறை இன்ஸ்பெக்டர் நரேஷ் குமார் கூறுகையில்; ஜூபைதாவுக்கு 1985-ல் திருமணம் நடந்தது. 1994-ல் குடியுரிமை கேட்டு விண்ணப்பித்தார். நீண்ட கால விசா அடிப்படையில், 7 ஆண்டுகள் இந்தியாவில் தங்கியிருந்ததை தொடர்ந்து, அவருக்கு குடியுரிமை அளிப்பதற்கான நடவடிக்கைகள் துவங்கின. அவரின் நன்னடத்தை அடிப்படையில், கடந்த வாரம் அவருக்கு இந்திய குடியுரிமை கிடைத்தது என அவர் தெரிவித்துள்ளார்.