17 வயது சிறுவனுக்கு திருமண ஏற்பாடு; கிராம பஞ்சாயத்துக்கு CWC நோடீஸ்!
17 வயது சிறுவனும், 13 வயது சிறுமியும் நீண்ட நேரமாக போனில் பேசிக்கொண்டு இருந்ததால், கிராம பஞ்சாயத்து சார்பில் திருமணம் செய்து வைக்கப்பட்டது!
17 வயது சிறுவனும், 13 வயது சிறுமியும் நீண்ட நேரமாக போனில் பேசிக்கொண்டு இருந்ததால், கிராம பஞ்சாயத்து சார்பில் திருமணம் செய்து வைக்கப்பட்டது!
ஜார்கண்ட் மாநிலம் லோஹர்தகாவில், தனது உறவினர் வீட்டில் வசிக்கும் 17 வயது சிறுவன் அங்கு இண்டர்மீடியேட் படித்து வருகிறார். அதே பகுதியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியுடன் அவர் தொடர்ந்து நீண்ட நேரமாக போனில் பேசியுள்ளார். இதனையடுத்து அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க கிராமப் பஞ்சாயத்து சார்பில் தீர்ப்பு வழங்கப்பட்டதை தொடர்ந்து, அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றன. பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை அவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இருவரின் குடும்பத்தினரும் அந்த விழாவில் கலந்து கொண்டனர். அதன்பிறகு சிறுமி, தன் கணவரின் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த திருமணத்தில் இரு குடும்பத்தினரும் மகிழ்ச்சியாக இருப்பதாக ஊர் மக்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த திருமணத்திற்கு எதிராக குழந்தைகள் நல வாரியம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த அமைப்பின் தலைவர் ராஜ் குமார் வர்மா இதுகுறித்து பேசிய போது “ இந்த விவகாரத்தில் நாங்கள் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். இதுதொடர்பாக குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அலுவலருக்கு தகவல் கொடுத்துள்ளோம். தகவல்களை சரிபார்த்த பின் FIR பதிவு செய்யப்படும்” என்று தெரிவித்தார்.