தொற்றின் தூதன் என தெரியாமல் mask-ஐ எடுத்துச் செல்லும் அப்பாவி பறவையின் Viral Photo!!
நாம் பொறுப்பில்லாமல் அங்கும் இங்கும் வீசும் மாஸ்குகள் ஐந்தறிவு படைத்த மிருகங்களையும் பறவைகளையும் கூட சென்றடையலாம். அவையும் தொற்றுக்கு ஆளாகலாம்.
நாம் எங்கு சென்றாலும், வீட்டை விட்டு வெளியே காலடி எடுத்து வைத்தாலே முகக்கவசம் அணிய வேண்டும் என்பது காலத்தின் தேவையாகிவிட்டது. இருப்பினும், கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கையாள்வதில், நாம் ஏற்கனவே இருக்கும் சிக்கல்களை மறந்துவிட முடியாது. மாஸ்கை அணிவது மட்டும் முக்கியமல்ல, அதை சரியாக அப்புறப்படுத்துவதும் மிக முக்கியமாகும். ஒழுங்கான முறையில் அப்புறப்படுத்தப்படாவிட்டால், அதனால் இன்னும் பலருக்கு தொற்று பரவும் வாய்ப்புள்ளது.
மனிதர்களுக்கு இந்த சூழலைப் பற்றி தெரிந்திருந்தும் பலர் அஜாக்கிரதையால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால், இதைப் பற்றி தெரியாத விலங்குகள், பறவைகள் போன்ற மற்ற உயிரினங்களைப் பற்றி யோசித்துப் பாருங்கள். நாம் பொறுப்பில்லாமல் அங்கும் இங்கும் வீசும் மாஸ்குகள் ஐந்தறிவு படைத்த மிருகங்களையும் பறவைகளையும் கூட சென்றடையலாம். அவையும் தொற்றுக்கு ஆளாகலாம்.
தற்போது நாம் கொரோனா தொற்றுநோயுடன் (Corona Pandemic) போராடிக்கொண்டிருப்பதால், ஏற்கனவே உள்ள பிரச்சனைகளை மறந்து விட முடியாது. இந்த பூமி மனிதர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல. மற்ற ஜீவ ராசிகளுக்கும் இதில் உரிமை உண்டு என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இதை வலியுறுத்தும் விதமாக உள்ளது தற்போது ட்விட்டரில் வைரலாகி வரும் ஒரு புகைப்படம்.
ஒரு பறவை ஒரு முகக்கவசத்தை அதன் அலகால் பிடித்து எடுத்துச் செல்லும் ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இது ட்விட்டரில் அனைவரது சீற்றத்தையும் தூண்டியுள்ளது.
புகைப்படத்தில் ஒரு பறவை அதன் அலகில் ஒரு மாஸ்கை (Facemask) பிடித்தபடி ஒரு நீர் நிலையிலிருந்து வெளியே வருவதைக் காண முடிகிறது. முகக்கவசங்கள் முறையாக அகற்றப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில் இப்படம் உள்ளது.
இந்த புகைப்படத்தை இந்திய வன சேவைகள் (IFS) அதிகாரி சுசாந்தா நந்தா ட்வீட் செய்துள்ளார்.
"மனித முகத்தை மறைக்க உதவும் முகக்கவசம், அவை கழற்றப்படும் போது நம் உண்மையான குணத்தையும் காட்டுகிறது… (தயவுசெய்து அவற்றை அப்புறப்படுத்துவதில் பொறுப்பாக இருங்கள். உலகில் அனைத்து ஜீவராசிகளுக்கும் சமமான உரிமை உண்டு)” என்று நந்தா ட்விட்டரில் எழுதினார்.
மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டரில் வைரலாகிவிட்ட இந்த புகைப்படம், நெட்டிசன்களை ஆத்திரத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஒரு பயனர், "இது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகவும் கடினம்" என்று எழுதியுள்ளார். மற்றொருவர் " 'இந்த கிரகம் உங்களுக்கு மட்டும் அதாவது மனிதர்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல’ என்ற எண்ணங்களுடன் உங்கள் நாட்களைத் தொடங்குங்கள். காலப்போக்கில், நல்ல மாறுதலைக் காண்பீர்கள்” என்று எழுதியுள்ளார்.
"மனிதர்களின் உணர்வற்ற தன்மைக்கு, பொறுப்பற்ற தன்மைக்கு ஒரு அளவே இல்லை. முன்னர் பிளாஸ்டிக் கவர்கள், இப்போது முகக்கவசங்கள்" என்று மற்றொருவர் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
"செயல்களைச் செய்வதை விட சக மனிதர்களைக் குறை கூறுவது எளிது. கழிவுகளை அகற்றுவது இந்தியாவில் ஒரு பெரிய பிரச்சினையாகும். அனைத்து வகையான கழிவுகளும் நிலப்பரப்புகளில், ஆறுகள் மற்றும் கடலில் வீசப்படுகின்றன. பொறுப்பற்ற தன்மை இதில் ஒரு பகுதியாகும். அரசுக்கும் அதிகாரிகளுக்கும் இதில் பங்கு உள்ளது” என்று குற்றம் சாட்டினார்.
கடந்த ஆண்டு, புளோரிடாவில் ஒரு கடற்கரையில் ஒரு தாய் பறவை தனது குழந்தைக்கு சிகரெட் துண்டு ஒன்றை ஊட்டும் புகைப்படம் வைரலாகியது. இது அனைவர் மனதையும் புண்பட வைத்தது. படத்தை பினெல்லாஸ் கவுண்டியில் உள்ள செயின்ட் பீட்ஸ் கடற்கரையில் லார்கோ குடியிருப்பாளர் கரேன் மேசன் எடுத்திருந்தார்.
ALSO READ: WATCH: ஹிந்தி பாடலுக்கு நடுரோட்டில் நடனமாடி பட்டைய கிளப்பிய பாட்டிகள்...
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR