இன்றுடன் நிறைவடைகிறது சபரிமலை மகரவிளக்கு பூஜை!!
சபரிமலை பூஜைகள் இன்றுடம் நிறைவடைகிறது. நாளை முதல் நடையடைப்பு.
சபரிமலை ஐயப்பசாமி கோயிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைகள் இன்றுடன் நிறைவடைகிறது. நாளை கோயில் நடை அடைக்கப்படுகிறது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கேரள மாநிலம், சபரிமலை ஐயப்பசாமி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் 1-ம் தேதி முதல் தொடர்ந்து 60 நாள்கள் சிறப்பு மண்டல பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
இந்த நாள்களில் பல மாநிலங்களில் இருந்தும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து ஐயப்பனை தரிசனம் செய்துவிட்டுச் செல்வார்கள். இந்த ஆண்டு மண்டல பூஜை மற்றும் மகரவிளக்குப் பூஜையை முன்னிட்டு கடந்த நவம்பர் 15-ம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. இந்த ஆண்டுக்காக தேர்வு செய்யப்பட்ட புதிய மேல்சாந்தி உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி கோயில் நடையைத் திறந்து வைத்துப் பூஜை நடத்தினார்.
16-ம் தேதி காலை முதல் பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த பூஜை நாள்களில் தினமும் அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம் பூஜைகளைத் தொடர்ந்து காலை 11.30 மணி வரை நெய் அபிஷேகம் மற்றும் உச்சிக்கால பூஜைக்கு பின் மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.
தொடர்ந்து, மாலை 4 மணிக்கு நடை மீண்டும் திறக்கப்பட்டு மாலை 6.30 மணிக்கு சிறப்பு பூஜை , இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம் மற்றும் அத்தாள பூஜைக்குப் பின் இரவு 10.30 மணிக்கு "ஹரிவராசனம்" பாடல் இசைக்கப்பட்டு நடை அடைக்கப்பட்டது. பக்தர்களின் வருகை எண்ணிக்கையைப் பொறுத்து நடை அடைப்பு நேரம், பூஜை நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
கடந்த டிசம்பர் 26-ம் தேதி மண்டல பூஜையும், ஜனவரி 14-ம் தேதி மகரவிளக்கு பூஜையும் நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான மண்டல பூஜைகள் மற்றும் மகர பூஜைகள் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இரவு 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவர்.
நாளை பந்தள மன்னர் பிரதிநிதி ராஜராஜ வர்மா, ஐயப்பசாமி கோயிலில் தரிசனம் செய்த பின்னர், நிறைவு பூஜைகள் செய்யப்பட்டு நடை அடைக்கப்படுகிறது. மாசி மாத பூஜைகளுக்காக வரும் பிப்ரவரி 12-ம் தேதி மீண்டும் நடை திறக்கப்படும் என தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.