வெயில் காலத்தில் பெட்ரோல் டேங்க் புல் செய்தால் வண்டி வெடித்துவிடுமா?
Fuel Tank Full In Summer: இந்த வெயில் காலத்தில், உங்கள் வாகனங்களில் பெட்ரோலை, டேங்க் முழுவதும் நிரப்பினால் வண்டி வெடித்துவிடும் என தகவல் பரவி வருகிறது.
Fact Check, Fuel Tank Full In Summer: முன்பெல்லாம் ஒவ்வொரு சீசனுக்கும் ஒவ்வொரு பழங்கள் கிடைக்கும். வெயில் காலம் என்று வந்துவிட்டால், நம் கண்களில் தர்பூசணி பழங்கள் தட்டுப்படத் தொடங்கிவிடும். இப்போதெல்லாம், அவை வருடம் முழுவதும் கிடைக்கிறது என்பது வேறு கதை.
வாட்ஸ்அப் வகையறா வைரல்கள்
அதேபோல், இணைய யுகத்திலும் ஒவ்வொரு சீசனுக்கும் ஒவ்வொரு விஷயம் டிரெண்ட் ஆகும். அதுவும், வெயில் காலம் என்று வந்துவிட்டால், நம் வாட்ஸ்அப் வகையறாக்களை கையில் பிடிக்க முடியாது அந்த அளவிற்கு, வாட்ஸ்அப் முழுவதும் 'பயன்தரக்கூடிய செய்தி'களை நிரப்பி, அதை வைரலாக்குவதை ஒரு வேலையாகவே வைத்திருப்பார்கள்.
அந்த வகையில், தற்போது இணையத்தில் அதிகமாக ஒரு புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது. ஒரு பெட்ரோல் பங்கில் வைக்கப்பட்டுள்ள பேனரின் புகைப்படம்தான் அது. வாடிக்கையாளர்களுக்கான அறிவுரைகளை கொண்ட அந்த பேனரை 'பாரத் பெட்ரோல் எச்சரிக்கிறது' என்ற தலைப்பில் வைக்கப்பட்டுள்ளது.
அந்த பேனரில்,"வரும் நாட்களில் வெப்பநிலை உயரும் என்பதால் அதிகபட்ச வரம்பிற்குள் உங்கள் வாகனத்தில் பெட்ரோலை நிரப்ப வேண்டாம். இது எரிபொருள் தொட்டியில் வெடிப்பை ஏற்படுத்தும். தயவு செய்து உங்கள் வாகனத்தில் பாதி எரிபொருளை நிரப்பி, காற்று வருவதற்கு இடமளிக்கவும். இந்த வாரம் அதிகபட்சமாக பெட்ரோல் நிரப்பியதால் 5 வெடி விபத்துகள் நடந்துள்ளன" என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பேனர் வைக்கப்பட்ட இடம் குறித்த சரியான தகவல்கள் கிடைக்கவில்லை. எனவே, இதனை உறுதிசெய்ய இயலவில்லை.
5 வெடி விபத்துகள்?
மேலும், அந்த பேனரில்,"தயவு செய்து பெட்ரோல் டேங்கை ஒரு நாளைக்கு ஒருமுறை திறந்து உள்ளே உள்ள வாயுவை வெளியே வர விடுங்கள்" என ஹைலைட் செய்து குறிப்பிட்டுள்ளது. மேலும, முக்கிய குறிப்பாக, இந்த செய்தியை படிப்பவர்கள், தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் அனுப்பி, விபத்தை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த பேனர், கடந்த ஒரு வாரமாக வாட்ஸ்அப், பேஸ்புக் என இணையத்தில் வலம் வந்துகொண்டிருக்கிறது. இருப்பினும், இந்த புகைப்படம் எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. மேலும், 5 வெடி விபத்துகள் ஏற்பட்டதாக கூறுவதற்கும் முறையான சான்றுகள் இல்லை.