நண்பகல் நேரத்தில் 20 நிமிட தூக்கம் மனிதனின் உடலையும், மூளையையும் சுறுசுறுப்பாக்குவதாக மருத்துவர் ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மனிதர்களுக்கு தூக்கம் என்பது வாழ்நாள் முழுவதும் கண்டிப்பாக தேவையான ஒரு ஓய்வு நிலை. பெரும்பாலும் இரவு நேரம் என்பதே தூக்கத்துக்காக ஒதுக்கப்பட்டது தான். ஆனால் இப்பொழுதெல்லாம் இரவு நேரப் பணிகளைப் பார்த்து விட்டு பகலில் தூங்குகிறவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இவ்வளவு நேரம் தான் தூங்க வேண்டும் என்று ஒரு அளவு கோல் இருந்தாலும், தூக்கம் அவரவரின் பழக்கத்தைப் பொறுத்தே அமைகிறது. 


இரவில் மிக சீக்கிரமாக உறங்கி காலையில் தாமதமாக எழுந்திருப்பவர்கள் உண்டு. இரவு எவ்வளவு தாமதமாக படுத்தாலும் காலையில் வெகு சீக்கிரமாக அதிகாலையிலேயே எழுந்து விடுபவர்களும் உண்டு. சரியாக தூங்காதவர்களை கண்களை பார்த்தே கண்டுபிடித்து விடலாம். மனிதனின் மனதைக் கட்டுப்படுத்த, கெட்ட எண்ணங்களை சீர்படுத்த, கோபம், ஆத்திரத்தைக் குறைக்க இயற்கையாக படைக்கப்பட்ட ஒரு செயல் தூக்கம். நம்மில் பலர் "பகலில் உறங்கினால் உடல் பருமன் கூடும்" என மற்றவர் சொல்லி கேட்டிருப்போம். அனால் அது உண்மை இல்லை. மதிய நேரத்தில் 20 நிமிட தூக்கம் மனிதனின் உடலையும், மூளையையும் சுறுசுறுப்பாக்குவதாக இங்கிலாந்து மருத்துவர் ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளார்.


நீல் ஸ்டேன்லி (Dr Neil Stanley) என்ற மருத்துவர் தூக்கத்தைப் பற்றிய ஆய்வு மேற்கொண்டார். போதிய உறக்கமின்றி தவிப்பதும், நன்றாக குடித்து விட்ட வாகனம் ஓட்டுவதும் ஒன்று என ஏற்கெனவே குறிப்பிட்ட அவர் தற்போது மதிய நேர தூக்கம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். தன்னார்வலர்களை அழைத்து குறிப்பிட்ட இடைவெளிகிளில் மாறி மாறி ஒளிரும் மின் விளக்கை அணைக்கச் சொல்லும் விளையாட்டில் அவர்களை ஈடுபடுத்தினார். பின் அவர்களை இருட்டு அறையில் தூங்கச் செய்து, பின் எழுப்பி மீண்டும் அதே விளையாட்டை ஆடச் செய்தார். அதன்படி 20 நிமிடம் நன்றாகத் தூங்கியவர், எதிர்வினையாற்றும் நேரம் அதிகரித்திருந்ததும், அவர்களின் உடலும், மூளையும் சுறுசுறுப்படைந்திருந்ததையும் கணக்கிட்டுள்ளார்.


ஆனால் 20 நிமிடத்துக்கும் மேல் உறங்கியவர்கள் மந்தமாக இருந்ததையும் அந்த ஆய்வில் மருத்துவர் நீல் ஸ்டேன்லி சுட்டிக்காட்டுகிறார். காஃபி அருந்தினால் 30 நிமிடம் சுறுசுறுப்படையும் மனிதர், உடல் சோர்வுறும் மதியம் 2 மணி முதல் 3 மணி வரைக்குட்பட்ட நேரத்தில் 20 நிமிடம் மட்டும் தூங்கி எழுந்தால் அடுத்த 3 முதல் 4 மணி நேரம் வரை சுறுசுறுப்போடு பணியாற்றுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.