பேச்சிலர்கள் எளிதாக மீல் மேக்கர் கிரேவி செய்வது எப்படி? புரோட்டீன் அதிகம் இருக்கு பசங்களா!
Soya Chunks Gravy Recipe: பேச்சிலர்கள் வீட்டில் இருக்கும் சில எளிய பொருள்களை வைத்து செய்யக் கூடிய மீல் மேக்கர் (Soya Chunks) கிரேவி குறித்து இங்கு காணலாம்.
Soya Chunks Gravy Easy Recipe In Tamil: கல்வி மற்றும் வேலை காரணமாக பலரும் தங்களின் சொந்த ஊரை விட்டுவிட்டு வெளியூரில் தங்கியிருக்க வேண்டிய சூழல் வரும். நம் தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டோமானால் திருநெல்வேலி, மதுரை, திருச்சி, ராமநாதபுரம் என பல ஊர்களில் இருந்து சென்னையில் வேலைக்காக பல இளைஞர்கள் வந்திருப்பார்கள். அவர்களுக்கு இங்கு ஏற்படும் முதல் பிரச்னையே உணவாகதான் இருக்கும்.
சொந்த ஊரில் கிடைப்பது போன்ற உணவுதான் வேண்டும் இல்லை, என்ன கிடைக்கிறதோ சாப்பிடலாம் என்ற மனநிலைக்கு ஒருவர் வந்துவிட்டாலும் கூட தினமும் ஹோட்டலில் சாப்பிடுவது என்பது சற்று கடினமானதுதான். பணம் ஒருபுறம் என்றால் உடல்நிலையும் கவனிக்க முடியாத அளவிற்கு ஆகிவிடும். எனவே, வீட்டிலேயே சமைத்துவிடலாம் என்ற மனநிலைக்கு கொஞ்ச நாளிலேயே பேச்சிலர்கள் வந்துவிடுவார்கள். இன்டக்ஷன் ஸ்டவ்வில், பாத்திரம், தட்டு முட்டு பொருள்கள் எல்லாத்தையும் வாங்கிவிட்டாலும் கூட அங்கு யாருக்கும் பெரிதாக சமைக்க தெரியாது. மிஞ்சி மிஞ்சி போனால் இன்ஸ்டன்ட் நூடூல்ஸ் மட்டுமே பலருக்கும் செய்ய தெரியும் எனலாம்.
அப்படிப்பட்ட இளைஞர்கள் குறைவான நேரத்தில் ரெடியாகும் உணவுகளை சமைக்க நினைப்பார்கள். வீட்டில் அம்மா, அப்பா, அக்கா, அண்ணன், தம்பி, வெளியூர் நண்பன் என சமைக்க தெரிந்த அனைவரிடமும், கஷ்டமே படாமல் எளிதாக சமைக்கக் கூடிய உணவுகளை கேட்டு தெரிந்துகொள்வார்கள். அந்த வகையில், வீட்டில் இருக்கும் சில எளிய பொருள்களை வைத்து செய்யக் கூடிய மீல் மேக்கர் (Soya Chunks) கிரேவி குறித்து இங்கு காணலாம். இந்த மீல் மேக்கர் கிரேவி என்பது எளிமையாக செய்யக்கூடியது மட்டுமின்றி, உடலுக்கும் மிகுந்த நல்லதாகும்.
மேலும் படிக்க | மன நலம் முதல் உடல் நலம் வரை... பயணம் செய்வதால் ஏற்படும் எக்கச்சக்க நன்மைகள்..!!
ஒருவேளை நீங்கள் ஜிம் சென்று உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க நினைப்பவர் என்றால் இந்த மீல் மேக்கர் கிரேவி மிகுந்த பயனளிக்கும். 100 கிராம் மீல் மேக்கரில் மட்டும் 52 கிராம் புரதம் உள்ளதாக கூறப்படுகிறது. புரதம் மட்டுமின்றி கால்சியமும் இருக்கிறது. இதனால் உங்களின் எலும்பின் கனிம அடர்த்தியும் அதிகமாகும். உடல் எடை குறைப்பவர்களுக்கும் இது பயனளிக்கும், கார்ப்போஹைட்ரேட்ஸ் மிக மிக குறைவாகும்.
மீல் மேக்கர் கிரேவி: தேவையான பொருள்கள்
மீல் மேக்கர் - 100 கிராம்
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
தக்காளி - 1
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1 டீ ஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீ ஸ்பூன்
மல்லித் தூள் - 1/4 டீ ஸ்பூன்
சீரகத் தூள் - 1/4 டீ ஸ்பூன்
தனி மிளகாய் தூள் - 1 டீ ஸ்பூன்
மீல் மேக்கர் கிரேவி செய்முறை...
- மீல் மேக்கர் உங்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். 100 கிராம் அளவு இங்கு பரிந்துரைக்கப்படுகிறது. அதன்படி நீங்கள் 100 கிராம் மீல் மேக்கரை எடுத்துக்கொள்ளுங்கள். தண்ணீரை மிதமான அளவில் சூடுபடுத்திக்கொள்ளுங்கள். அதாவது அந்த தண்ணீரில் கைவைத்தால் சுடக்கூடாது, அந்தளவிற்கே தண்ணீரை சூடு செய்ய வேண்டும்.
- அதன்பின், சூடுபடுத்திய தண்ணீரில் 10 நிமிடங்கள், அந்த 100 கிராம் மீல் மீக்கரை ஊற வையுங்கள். மீல் மேக்கர் 10 நிமிடங்கள் ஊறிய பின், அவை அனைத்தையும் அப்படியே கையால் எடுத்து நன்கு பிழிந்து தனியாக எடுத்துவைத்துக்கொள்ளவும்.
- இப்போது ஒரு பேனை எடுத்துக்கொண்டு, அதில் தேவையான அளவு எண்ணெயை ஊற்றி, தனியாக எடுத்துவைத்த மீல் மேக்கரை 10 நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் வறுக்கவும். நீங்கள் உடல் எடை குறைப்பில் இருப்பவர் என்றால் எண்ணெயை மிக குறைந்த அளவிற்கு பயன்படுத்துங்கள். அந்த மீல் மேக்கர் பாத்திரத்தில் ஒட்டிவிடக்கூடாது என்பதால் அடுப்பையும் மிதமான சூட்டிலேயே வைத்துக்கொள்ளுங்கள்.
- இப்போது, வறுபட்ட மீல் மேக்கரை தனியாக வைத்துவிடுங்கள். நீங்கள் கிரேவி வைக்கப்போகும் பாத்திரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் சிறிது அளவு எண்ணெய் சேர்த்துக்கொண்டு, எண்ணெய் சூடான பின்னர் பொடி பொடியாக நறுக்கப்பட்ட வெங்காயத்தை சேர்த்துக்கொள்ளுங்கள். நன்கு பொன் நிறமாக வதக்கிய பின்னர் பச்சை மிளகாய் சேர்த்துக்கொண்டு சற்று நேரம் வதக்கவும்.
- அடுத்து, பொடி பொடியாக வெட்டிய தக்காளியை போட்டு நன்கு வதக்கவும். வதங்கிய பின்னர், வறுத்து எடுத்துவைத்த மீல் மேக்கரை சேர்த்துக்கொள்ளவும். நன்கு கிளறிவிட்ட பின்னர், இஞ்சி பூண்டு பேஸ்ட், கரம் மசாலா, மல்லித் தூள், சீரகத் தூள், தனி மிளகாய் தூள் ஆகியவற்றை மேலே சொன்ன அளவிற்கு போட்டு நன்கு கிளறிவிடவும்.
- எண்ணெய் பிரிந்துவரும் போது உங்களுக்கு தேவையான அளவிற்கு தண்ணீர் சேர்த்துக்கொள்ளுங்கள். இதனை சப்பாத்தி, புரோட்டா உடனும் சாப்பிடலாம். சாதத்திற்கும் சேர்த்து சாப்பிடலாம் என்பதால் உங்கள் தேவைக்கு ஏற்ப அந்த கிரேவியை கட்டியாகவோ அல்லது தண்ணீராகவோ வைத்துக்கொள்ளலாம். அதன்பின் தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொண்டு அதனை 5-10 நிமிடங்களுக்கு கொதிக்கவிட்டால் மீல் மேக்கர் கிரேவி ரெடி.
இது உடலுக்கு மிகவும் நல்லது என்றாலும் அதிகமான அளவிற்கு எடுத்துக்கொள்ளக்கூடாது. அதிகமாக சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு, செரிமான பிரச்னை மற்றும் அலர்ஜி ஆகியவை ஏற்படவும் வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க | இந்த பிரச்சனை உள்ளவர்கள் முல்தானி மிட்டியை பயன்படுத்த வேண்டாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ