காஞ்சிபுரம் வரதராஜர் கோயியில் உள்ள அத்திவரதரை தரிசனம் செய்து வழிபாடு நடத்திய நடிகர் ரஜினிகாந்த்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காஞ்சிபுரம் வரதராஜர் கோயிலுக்கு நள்ளிரவு 12.30 மணி அளவில் ரஜினிகாந்த், அவரது மனைவி லதா ரஜினிகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினருடன் சென்றனர். அத்திவரதர் முன்பு ரஜினியும் குடும்பத்தினரும் சில நிமிடங்கள் அமர்ந்து வழிபட்டனர். அப்போது கோயில் நிர்வாகம் சார்பில் ரஜினிக்கு மரியாதை செய்யப்பட்டது. ரஜினிகாந்த் வருகையை ஒட்டி நள்ளிரவு நேரத்திலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியில் வந்த ரஜினிகாந்தைப் பார்த்து, வரிசையில் காத்திருந்த பக்தர்கள் உற்சாகக் குரல் எழுப்பினர்.


காஞ்சிபுரத்தில் உள்ள பழமையான வரதராஜப் பெருமாள் கோயிலில் 1979ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த ஆண்டு கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் அத்திவரதர் வைபவம் நடைபெற்று வருகிறது. சயனகோலத்தைத் தொடர்ந்து, நின்ற திருக்கோலத்தில் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். அத்திவரதர் வைபவம் வரும் 16-ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், 17-ஆம் தேதி மீண்டும் அத்திவரதர் குளத்திற்குள் வைக்கப்பட உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.