இன்று தை கிருத்திகை: தை மாதத்தில் வரும் கிருத்திகைக்கு என்ன விசேஷம்
மனக் கவலைகளை தீர்க்கும் முருகனாய், அனைத்தையும் அறிந்து அருள் புரியும் ஆறுமுகனாய், காலங்களை வென்ற கார்த்திகேயனாய், கர்ம வினைகளை போக்கும் கந்தனாய், வீண் பேச்சு வேந்தர்களை வீழ்த்தும் வேலவனாய் இருக்கும் அந்த ஈசன் புதல்வன் அருள் கிடைக்க தை கிருத்திகை நன்னாளில் பிரார்த்திப்போம்!!
தமிழ்க்கடவுள் முருகனுக்கு விசேஷமான நாட்கள் வருடம் முழுதும் பல உள்ளன. சொல்லப்போனால், ஒவ்வொரு நாளும் அழகன் முருகனுக்கு உகந்த நாள்தான். ஆனால் சில நாட்களில் முருகனை மனம் முழுக்க நிரப்பி, விரதம் இருந்து மனமுருக வேண்டினால், அன்று நம் பிரார்த்தனைகளுக்கு கார்த்திகேயன் கண்டிப்பாக செவி மடுப்பான் என்பது நிச்சயம். அப்படிப்பட்ட புனித நாட்களில் ஒன்றுதான் தை மாதம் கிருத்திகை நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் தை கிருத்திகை திருநாளாகும்.
முருக பக்தர்களுக்கு தை கிருத்திகை மிகவும் உகந்த நாளாகும். உலகுக்கே அம்மையப்பனான சிவபெருமானுக்கும் உமையாளுக்கும் அன்பு மகனாகப் பிறந்த முருகரை ஆறு கார்த்திகைப் பெண்கள் அன்போடும் பாசத்தோடும் கவனித்துக்கொண்டனர். அவர்கள் முருகன் மீது கொண்ட பாசத்திற்கும் அன்புக்கும் பரிசாக அவர்களுக்கு சிவபெருமான் நட்சத்திர நிலையை வழங்கினார். கிருத்திகை நட்சத்திரம் ஒவ்வொரு மாதமும் வந்தாலும், ஆடி கிருத்திகை மற்றும் தை கிருத்திகைக்கு (Thai Krithigai) சிறப்பம்சம் உண்டு. இந்த நாட்களில் முருகனையும் கார்த்திகைப் பெண்களையும் வணங்கினால், நமக்காக கார்த்திகைப் பெண்களும் முருகனிடம் சிபாரிசு செய்வார்கள் என்று கூறப்படுகிறது. இந்த நாட்களில் செய்யப்படும் வேண்டுதல் நிறைவேறுவது உறுதி.
தை கிருத்திகையின் வரலாறு:
ஸ்கந்த புராணத்தின் படி, முருக பகவான் சிவனின் (Lord Shiva) மூன்றாவது கண்ணிலிருந்து ஆறு தீப்பிழம்புகளாகத் தோன்றினார். அக்னி பகவானும் வாயு பகவானும் ஆறு தீப்பிழம்புகளாய் அவதரித்த முருகனை சரவணப் பொய்கைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஆறு தாமரை மலர்களில் ஆறு பிள்ளைகளாய் தோன்றிய முருகரை கன்னிப்பெண்களான ஆறு கார்த்திகைப் பெண்களும் கவனித்துக் கொண்டனர்.
உலகம் முழுதும் உள்ள தமிழர்களின் இஷ்ட தெய்மாக முருகர் இருக்கிறார். கிருத்திகை நாட்களில் முருகனை வணங்கினால் அவரது பக்தர்களின் பிரார்த்தனை நிச்சயம் நிறைவேறும் என்று சிவபெருமான் முருகருக்கு உறுதி அளித்ததாக நம்பப்படுகிறது.
ALSO READ: கந்த சஷ்டி தரிசனம்: மூலவராக வேலாயுதம் வீற்றிருக்கும் இலங்கை நல்லூர் கந்தசாமி கோயில்!!
தை கிருத்திகையன்று வீடுகளில் உள்ள முருகர் படத்திற்கு சந்தன, குங்குமம் இட்டு, மலர் சூட்டி, முருகனுடைய திருப்புகழ், போற்றிகள், கந்த சஷ்டி கவசம் ஆகிய மந்திர பாடல்களை பாடி முருகனை வழிபட வேண்டும். ஆறு விதமான பூக்களைக் கொண்டு முருகனுக்கு அர்ச்சனை செய்தால் விசேஷ்ம. பின்னர் தூப, தீப, ஆராதனைகள் காண்பித்து, நம்மால் ஆன பதார்த்தங்களை நைவேத்தியம் செய்து சூடம் ஏற்றி வழிபட வேண்டும்.
இந்த நாளில் விரதமிருந்து முருகனை வணங்குவது விசேஷமாகக் கருதப்படுகின்றது. எனினும், நம் இந்து மதத்தைப் பொறுத்தவரை, உடலை வருத்திக்கொண்டுதான் ஒருவர் கடவுளை வணங்க வேண்டும் என எங்கும் குறிப்பிடப்படவில்லை. அவரவர் சக்தி, உடல் நிலைக்கேற்ப பிரார்த்தனைகளை மேற்கொள்ளலாம். மனதில் நம்பிக்கையும் பக்தியும் இருந்தால் போது.
தை கிருத்திகை விரத பயன்கள்:
குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகவும், வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கவும், மன நிம்மதி கிடைக்கவும் தை கிருத்திகை விரதம் உதவும். தீராத சிக்கல்களை தீர்த்து வைக்கும் அருமருந்தாகவும் இந்த விரதம் இருக்கிறது. நாமோ அல்லது நமக்கு வேண்டியவர்களோ தீராத நோயினால் துன்பப்பட்டால், இந்த நாளில் முருகப்பெருமானிடம் மனம் உருக வெண்டினால், வந்த நோய் பஞ்சாகப் பறந்து போகும்.
நம் மனக் கவலைகளை தீர்க்கும் முருகனாய், அனைத்தையும் அறிந்து அருள் புரியும் ஆறுமுகனாய், காலங்களை வென்ற கார்த்திகேயனாய், கர்ம வினைகளை போக்கும் கந்தனாய், வீண் பேச்சு வேந்தர்களை வீழ்த்தும் வேலவனாய் இருக்கும் அந்த ஈசன் புதல்வன் அருள் கிடைக்க தை கிருத்திகை நன்னாளில் பிரார்த்திப்போம்!!
ALSO READ: ஈசன் மகன் முருகன் இலங்கையில் அழகாய் வீற்றிருக்கும் ஆலயங்கள்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR