முதியோர்கள் பிரச்னைகளை தெரிவிக்க இலவச உதவி எண் அறிவிப்பு: TN Govt
தமிழகத்தில் முதியோர்கள் பிரச்னைகள் மற்றும் குறைகளை தெரிவித்து உதவிகள் பெற கூடுதல் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது!
தமிழகத்தில் முதியோர்கள் பிரச்னைகள் மற்றும் குறைகளை தெரிவித்து உதவிகள் பெற கூடுதல் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது!
முதியோர்களின் அனைத்துத் தேவைகள் மற்றும் குறைகளைத் தெரிவிப்பதற்கு தமிழக அரசு உதவி எண்களை அறிவித்துள்ளது. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழக அரசு, சமூக நலத்துறை மூலம் மூத்த குடிமக்கள் பாதுகாப்புடனும் மரியாதையுடனும் வாழத் தேவையான அடிப்படை வசதிகளைப் பூர்த்தி செய்து மூத்த குடிமக்கள் பயனடையும் வகையில் முதியோர் ஓய்வூதியம், முதியோர் இல்லங்கள், ஒருங்கிணைந்த வளாகங்கள், நடமாடும் மருத்துவ மையங்கள், பிசியோதெரபி கிளினிக் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது.
மூத்த குடிமக்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம் 2007 தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு அதற்கேற்ப விதிகளும் வகுக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. மேலும், முதியோர்களுக்குத் தேவையான உதவிகளைப் பெற கட்டணமில்லா உதவி எண்ணாக சென்னைக்கு மட்டும் 1253 என்ற எண்ணும் மற்றும் சென்னை தவிர பிற மாவட்டங்களுக்கு 1800-180-1253 என்ற எண்ணும் பொது சேவை எண்ணாக 'ஹெல்ப் ஏஜ் இந்தியா' என்ற தொண்டு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஏற்கனவே, செயல்படும் உதவி எண்களுடன் கூடுதலாக 044-2435-0375, 9361272792 என்ற எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், முதியோர் ஓய்வூதியம், முதியோர் இல்லங்கள் போன்ற திட்டங்களின் விவரங்களையும் உதவி எண்ணில் கேட்டு பெறலாம் என்றும், முதியோர்களின் அனைத்து தேவைகள் மற்றும் குறைகளை தெரிவிக்க உதவி எண்களை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் அரசு தெரிவித்துள்ளது.