நடனம் என்பது பொதுவாகத் தாளத்துக்கும் இசைக்கும் அமைவாக உடலை அசைத்து நிகழ்த்தப்படும் ஒரு கலை வடிவம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடனங்கள் சமயச் சார்பு நோக்கங்களுக்காக ஆடப்படுபவையாக அல்லது பிறருக்கு நிகழ்த்திக் காட்டும் ஒன்றாக அமையக்கூடும். நடனம் என்பது எவ்வெவற்றை உள்ளடக்கியது என்பது குறித்துச் சமூக, பண்பாட்டு, அழகியல், கலை, நெறிமுறைகள் போன்றவற்றின் எல்லைகளுக்குள்ளேயே விளக்கமுடியும். சில நாட்டுப்புற நடனங்கள் பயன்பாட்டுத்தன்மை கொண்ட அசைவுகளை உள்ளடக்கியிருக்க, பலே, பரதநாட்டியம் போன்ற நடனங்கள் பலவகையான கலை நுணுக்கங்களை உட்படுத்தியவையாக உள்ளன. 


துக்கமும் கொண்டாட்டமாக மாறும் கலை, நடனத்தில் மட்டுமே சாத்தியம். உலகம் முழுவதும் பல்வேறு நடனங்கள் இருக்கின்றன. அந்தந்த நாட்டுக்கான பாரம்பரிய மற்றும் நாட்டுப்புற நடனங்கள் ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்தவை. 


இந்திய பாரம்பரிய நடனங்கள்:-


பரத நாட்டியம்-தமிழ்நாடு
கதகளி-கேரளம் 
குச்சிப்புடி-ஆந்திர பிரதேசம்
மோகினி ஆட்டம்-கேரளம் 
ஒடிசி-ஓடிஸா
மணிப்புரி-மணிப்பூர்
கதக்-வட இந்திய மாநிலங்கள்
சத்ரியா-அசாம்


நடனங்கள் பல்வேறு பாணிகளில் உருவாகியுள்ளன. எனினும் எல்லா நடனங்களுமே தம்முள் சில பொது இயல்புகளைக் கொண்டுள்ளன. நடன அசைவுகளுக்கு ஏற்ப உடல் வளைந்து நெளிந்து கொடுக்கும் தன்மை கொண்டதாக இருப்பது மட்டுமன்றி, உடல் உறுதியும் முக்கியமானது. இதனாலேயே முறைப்படியாக நடனம் ஆடுபவர்கள் நல்ல நீண்டகாலப் பயிற்சி எடுத்துக்கொள்கிறார்கள். 


இந்நிலையில் நடனக் கலைஞர்களின் சேவையை கௌரவிக்கும் பொருட்டு யுனேஸ்கோ, சர்வதேச நடன கவுன்சிலுடன் இணைந்து உலக நடன தினத்தை ஏப்ரல் 29ம் தேதி கொண்டாடி வருகிறது. இது, நடனக் கலைஞர் ஜான் ஜார்ஜ் நூவர் என்பவரின் பிறந்த தினம் ஆகும். பிரெஞ்ச் நடனக்கலைஞரான இவர் பாலே நடனக் கலையில் சிறந்து விளங்கியவர்.