கஜா, நிவர் உட்பட தமிழகத்தை தாக்கிய அதிதீவிர புயல்கள் என்னென்ன?
வங்கக்கடலில் தீவிர புயலாக உள்ள நிவர் புயல் அதி தீவிர புயலாக நண்பகலுக்குள் வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!
வங்கக்கடலில் தீவிர புயலாக உள்ள நிவர் புயல் அதி தீவிர புயலாக நண்பகலுக்குள் வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!
தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் செவ்வாய்க்கிழமை காலை நிவர் புயலாக (Nivar Cyclone) உருவெடுத்து, இரவில் தீவிர புயலாகவும் வலுவடைந்துள்ளது. இது அதி தீவிர புயலாக வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, காரைக்கால்-மாமல்லபுரம் இடைப்பட்ட பகுதி, குறிப்பாக புதுச்சேரி (Puducherry) அருகில் இன்று மாலை கரையைக் கடக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் கூறுகையில்., புயல் காரணமாக, தமிழகம் (Tami Nadu), புதுச்சேரியில் வரும் வெள்ளிக்கிழமை (நவ.27) வரை மழை தொடரும். புதன்கிழமை கடலோரப் பகுதிகளில் பரவலாகவும், உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும் மழை பெய்யக்கூடும். திருவண்ணாமலை, மயிலாடுதுறை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை அதி பலத்த மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, சேலம், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை முதல் மிக பலத்த மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
ALSO READ | அதி தீவிர புயலாக உருவெடுத்த “நிவர்” இன்று இரவு கரையை கடக்கிறது..!
தமிழகத்தை இதுவரை தாக்கிய அதிதீவிர புயல்கள்:
* 1994 அக்., 31: வங்கக்கடலில் உருவான அதிதீவிர புயல், சென்னை அருகே, 130 கி.மீ., வேகத்தில் கரையைக் கடந்தது. கன மழைக்கு, 60 பேர் பலியாகினர். 2004க்கு முன் புயலுக்கு பெயர் நடைமுறை இல்லை.
* 2008 நவ., 26: 'நிஷா' புயல், நாகபட்டினம் - காரைக்கால் இடையே மணிக்கு, 80 கி.மீ., வேகத்தில் கரையைக் கடந்தது.
* 2010 நவ., 1: 'ஜல்' புயல், சென்னை அருகே மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் கரையைக் கடந்தது; பாதிப்பு இல்லை.
* 2011 டிச.,: 'தானே' புயல் புதுச்சேரி - கடலுார் இடையே மணிக்கு, 135 கி.மீ., வேகத்தில் கரையைக் கடந்தது. பயிர்கள், மரங்கள், மின்கம்பங்கள் நாசமாகின
* 2012 அக்., 31: 'நீலம்' புயல் மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்தது; 85 கி.மீ., வேகத்தில் காற்று வீசியது
* 2016 டிச., 12: 'வர்தா' புயல் அதி தீவிர புயலாக மாறி, சென்னை அருகே கரையைக் கடந்தது. 130 கி.மீ., மேல் காற்று வீசியது; 10 பேர் பலியாகினர்; 10 ஆயிரம் மின் கம்பங்கள்
சேதமடைந்தன
* 2017 நவ., 30: அரபிக்கடலில் உருவான, 'ஒக்கி' புயலால் ஏற்பட்ட கன மழையால், தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த சேதம் ஏற்பட்டது
* 2018 நவ., 18: 'கஜா' புயல் வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. மணிக்கு, 110 கி.மீ., வேகத்தில் காற்று வீசியது. டெல்டா மாவட்டங்களில் பெரிதும் பாதிக்கப்பட்டன
* 2020 நவ., 25: வங்கக்கடலில் உருவாகியுள்ள, 'நிவர்' புயல், காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.