மகளிர் தின வாழ்த்துகளைப் பரிமாறிய அனைவருக்கும் என் அன்பின் வணக்கம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உங்களோடு ஒரு நிமிடம்... 


பூக்கள் தனக்காகப் பூப்பதில்லை... மரங்கள் தனக்காக வளர்வதில்லை... பெண்களும் அப்படித்தான்... பெண்கள் இந்த வானத்தின் பாதியைத் தாங்கிக் கொண்டிருக்கிறார்கள்... நதியோ, நாடோ எதுவாக இருந்தாலும் பெண்ணின் பெயர்தான். தாய் நாடு, தாய் மண், கங்கா, யமுனா, காவிரி. எதை எடுத்துக்கொண்டாலும் பெண்தான்.  ஏனென்றால் பெண் என்பவள் பேரன்பின் உரு, பொறுமையின் சிகரம், தேவதை, சக்தி, தெய்வம்...


இப்படித்தான் மகளிர் தினம் என்ற பெயரில் எல்லோரும் வாழ்த்துகள் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். என் குரலைக் கேட்பதற்கு நீங்கள் தயாரா? வெறும் வாழ்த்துகள் மட்டும் எங்களுக்குப் போதுமா? தினங்களைக் கொண்டாடுவதை விட்டுவிட்டு ரத்தமும் சதையுமாய் உங்களுடன் இணைந்தே இயங்கும் எங்களை எப்போது கொண்டாடப் போகிறீர்கள்? 


அதுவும் திரைப்படங்கள் என்ற பெயரில் நீங்கள் செய்யும் அட்டகாசத்தை எங்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அது ஏன் சொல்லிவைத்தாற்போல் எல்லோரும் பெண்களையே மட்டம் தட்டி வசனம், காட்சி அமைப்புகளை வைக்கிறீர்கள்? அது எங்களுக்கு வலிக்கும் என்று தெரியாதா? சினிமா சமூகத்தை இடித்துரைப்பது என் உள்நோக்கமில்லை. எங்கள் தரப்புக் கருத்துகளை எடுத்துரைக்கவே இதைச் சொல்கிறேன். 


மேலும் படிக்க | மகளிர் தினத்தில் இந்த ராசி பெண்கள் இதை செய்தால் அதிஷ்டம் நிச்சயம்!


‘பிகில்’ படம் சிங்கப் பெண்ணின் பெருமை பேசும் படம் என்று ஊர் முழுக்க போஸ்டர் ஒட்டி, காசு பார்த்து கல்லா கட்டினீர்கள். மகிழ்ச்சி. ஆனால், அது எப்படி எங்களைப் பெருமைப்படுத்தும் படம் என்று சொல்கிறீர்கள் என்றுதான் புரியவில்லை. சிங்கப் பெண் பாடலும், அதன் கதைக் கருவும் பெண்கள் சாதிக்க வேண்டும் என்பதைத்தான் உணர்த்துவதாகக் கூறுகிறீர்கள். அதேசமயம், பாண்டியம்மா என்ற கதாபாத்திரத்தை குண்டம்மா என்று சொல்லி உச்ச நடிகர் விஜய் திட்டுகிறார். அப்படிச் செய்தால்தான் அந்தக் கதாபாத்திரம் உணர்ச்சிவசப்பட்டு ஆவேசப்பட்டு எதிராளியைக் களத்தில் வீழ்த்த முடியுமாம். ஆனால், இது எவ்வளவு பெரிய உருவ கேலி, உளவியல் தாக்குதல் என்று அந்தப் படக்குழுவுக்குத் தெரியாதா? ஒருவரை இப்படி உசுப்பேற்றிதான் வெற்றி பெற வேண்டுமா? இயல்பான வெற்றி எங்கள் வசமாகாது என்று இயக்குநர் அட்லியும், நடிகர் விஜய்யும் சொல்ல வருகிறார்களா? 


‘கொம்பு வச்ச சிங்கம்டா’ படத்தில் தயாரிப்பாளர் இந்தர் குமார் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார். அரசியல் பற்றிப் பேசும்போது, சோறு சமைக்கும்போது அரிசியில் எவ்வளவு உப்பு போடணும், காபியில் எவ்வளவு சர்க்கரை போடணும்னு மட்டும் செய்யுங்க. வீட்டை நீங்க பார்த்துக்குங்க, நாட்டை நாங்க பார்த்துக்குறோம், இங்கே இருக்குற எல்லா பெண்களுக்கும் இதைத்தான் சொல்றேன் என்று முழங்கினார். இந்தக் காட்சியைத் திரையில் பார்த்த சிலர் கைதட்டியும் வரவேற்றதை எப்படி எடுத்துக்கொள்வது எனத் தெரியவில்லை. முதல்வர், பிரதமர் உள்ளிட்ட அனைத்துப் பெரிய பதவிகளிலும் பெண்கள் தங்களை நிரூபித்துவிட்ட காலகட்டத்தில் எவ்வளவு பிற்போக்குத்தனமான வசனம் இடம்பெற்றுள்ளது. 


மேலும் படிக்க | பெண்களுக்கு தேவையான முக்கியமான 5 சாதனங்கள்!


‘புஷ்பா’ படம் பான் இந்தியா படம், 200 கோடி ரூபாயைத் தாண்டிய வசூல் என்று படக்குழு வெற்றிக் களிப்பில் மிதந்தது. ஆனால், அந்தப் படமும் முத்தம் கொடுக்கப் பணம் என்று பெண் கதாபாத்திரத்தை இழிவு செய்தது. படத்தின் வில்லன் தவறாக நாயகியை அணுக, நாயகி அதே தவறை நாயகனுடன் செய்ய விரும்பி வருவதாகத் திரைக்கதையைக் கட்டமைத்து எங்களை எந்த அளவுக்கு கண்ணியக்குறைவாக நடத்த முடியுமோ அதை இம்மி பிசகாமல் செய்கிறார்கள். 


வேண்டாம், ஒதுங்கிப் போ என்று சொன்னால் கேட்காமல், எங்கள் எண்ணங்களுக்கு மதிப்பு கொடுக்காமல், சுதந்திரமாய் இருக்கவிடாமல் விரட்டி விரட்டி காதலிக்கிறேன் பேர் வழி என்று பின் தொடர்தல் என்னும் ஸ்டாக்கிங் குற்றத்தையே தமிழ் சினிமா கதாநாயகர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். இவர்கள் எப்போது மனம் வருந்தி, திருந்தி, மாறப் போகிறார்கள்? 


எங்களை நீங்கள் கொண்டாட வேண்டாம், தாய், சகோதரி, தோழி, மனைவி, மகள் என்று புனித பிம்பங்களைச் சுமக்க வைத்து ஒதுக்கிவைக்க வேண்டாம், சக மனுஷியாய், மனிதநேயத்துடன் நடத்துங்கள். அதுவே எங்களுக்குப் போதும்.  சம உரிமை, சம மதிப்பு, சம கல்வி, சம ஊதியம், சம பிரதிநிதித்துவம் ஆகிய அனைத்தும் கிடைக்கச் செய்வதையே மகளிர் தின உறுதிமொழியாக எடுத்துக்கொள்ளுங்கள். அதுவே எங்களுக்கு வலிமை, வல்லமை என அனைத்தும் கொடுக்கும். 


இப்படிக்கு, 
உங்களில் ஒருத்தி...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR