PCOD, PCOS உள்ள பெண்கள் இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்!
பாலி சிஸ்டிக் ஓவரி சின்றோம், பாலி சிஸ்டிக் ஓவரி டிசீஸ் எனப்படும் சினைப்பையில் ஏற்படும் நீர் கட்டிகள் 10ல் ஒரு பெண்ணுக்கு இருக்கிறது. மாதவிடாயில் சிக்கல் வரும்வரை நீர்கட்டிகள் இருப்பது குறித்து பெண்கள் பலருக்கு தெரிவதேயில்லை.
பலருடைய உடலில் இந்த நீர் கட்டிகள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. வெகு சிலருக்கே பாதிப்புகளை இவை ஏற்படுத்துகின்றன. நீர்கட்டியுள்ள பெண்கள் கரு தரிப்பது கடினம் என்று கூறப்படுவது தவறான கருத்து என மருத்துவர்கள் வவலியுறுத்துகின்றனர். பல்லாயிரம் பெண்கள் சினைப்பை நீர்கட்டிகளுடன் ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்று எடுக்கின்றனர். சினைப்பையிலிருந்து கருமுட்டை வெளியேறும் சுழற்சி நடைபெறும்வரை பெண்களின் கருதரிப்பு என்பது சாத்தியமான விஷயம் தான் என பிரபல குழந்தைபெறு மருத்துவர்கள் கூறுகின்றனர். தீவிரமாக பாதிப்படைந்த சினைப்பை நீர்கட்டிகளையும் உடலிடை குறைத்து கட்டுப்படுத்த முடியும் என்பதே கருதரிப்பு நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
இந்த நீர்கட்டிகளை குறைக்கவோ, கரைக்கவோ ஆங்கில மருத்துவத்தில் மருந்துகள் இல்லை. ஆனால், கட்டுப்படுத்த முடியும், மேலும் நீர்கட்டிகளின் தாக்கத்தை முற்றிலும் நிறுத்த முடியும். சினைப்பை நீர்கட்டிகள் சீரற்ற மாதவிடாய் மட்டுமல்லாமல் உடல் பருமன், உடல் எடை குறைக்க முடியாத நிலை, முகப் பருக்கள், உடலில் தேவையற்ற இடத்தில் முடி முளைப்பது என பல பிரச்சனைகளை உருவாக்குகின்றன.
உடல் பருமனை பொருத்தவரை, இந்த சினைப்பை நீர்கட்டிகள் உள்ள பெண்களின் உடலில் ஹார்மோன் சுரப்பது சீரற்று காணப்படும். இதனால் உடலில் கொழுப்பு சேர்வதை கட்டுப்படுத்தும் இன்சுலீன் தனது வீரியத்தை இழந்து காணப்படும். இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் எனப்படும் இந்த நிலையினால் பொதுவாக உடலில் இருந்து வெளியேற்றப்படும் கொழுப்பின் அளவு குறைந்து விடுகிறது. இதனால், உணவிலிருந்து சர்க்கரை, கொழுப்பு அதிக அளவில் உடலில் தேங்குகின்றன. இப்படி உடல்நிலையிருக்க, டயட்டிங் செய்து மட்டும் உடலிடையைக் குறைப்பது நீர்கட்டியுள்ள பெண்களுக்கு சற்று கடினமான ஒன்று தான்.
தீர்வுகள்
இதற்கு உணவு பழக்கத்தில் மாற்றம் மற்றும் உடலெடை குறைப்பு மட்டுமே நற்பலன் தரும் பாதுகாப்பான தீர்வாகும். பிஎம்ஐ கணக்கின்படி அதிக எடையுள்ள பெண்கள் தங்களது உயரத்திற்கு ஏற்றதுபோல் எடையை குறைத்தால் இந்த நீர்கட்டிகளின் தாக்கம் வெகுவாக குறைந்து மாதவிடாய் சீரான முறையில் ஏற்படும். கருதரிப்பதும் எளிதில் நடைபெறும். நீர்கட்டியற்ற பெண்கள் உடல் எடையைக் குறைக்க தினசரி 1 மணிநேரம் மிதமான உடற்பயிற்சி செய்யவேண்டும் என்றால், நீர்கட்டியுள்ள பெண்கள் 1.30 மணி நேரம் கடுமையான உடற்பயிற்சி செய்ய வேண்டியுள்ளது. முக்கியமாக உடலெடையைக் குறைக்க விரும்புபவர்கள் உணவில் சர்க்கரை, கொழுப்பு, கார்போஹைரேட்ஸ் ஆகியவற்றைக் குறைத்துக்கொண்டு உடற்பயிற்சியும் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
மாதவிடாய் சில நாட்கள் முன்னும் பின்னுமாக இருந்து, லேசான பாதிப்பு மட்டும் இருக்கும் பெண்கள் தினசரி கழற்ச்சிகாய் சூரணம், செம்பருத்தி பூவின் இதழ் டீ, மலை வேம்பு இலை & பூ சாறு ஆகியவற்றை அவ்வப்போது எடுத்து வந்தால் நீர்கட்டிகளின் தாக்கம் குறையும், ஆரம்பக்கட்டத்தில் உள்ள கட்டிகள் அளவில் குறைய வாய்ப்புள்ளது என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.