சென்னை: உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு, நீரின்றி அமையாது உலகு என்ற வாக்கியத்திற்கு ஏற்ப "நீருக்கு ஒரு பாடல்" என்ற தலைப்பில் ஒரு புதுமையான புகைப்படப் போட்டியை இக்பால் அகமது மற்றும் லைட் அன்ட் லைஃப் அகாடமி ஏற்பாடு செய்திருந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த போட்டியில் கலந்துக்கொண்ட புகைப்படங்கள் அனைத்தும் நீரின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளவும், உணர்த்து வகையிலும் கண்காட்சியாக வைக்கப்பட்டது. இந்த கண்காட்சியில் விற்பனை மூலம் கிடைத்த நிதியை ஏரிகளை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டு வரும் இ.எப்.ஐ (EFI) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்படுகிறது.


"நீருக்கு ஒரு பாடல்" போட்டியைக் குறித்து முன்னணி புகைப்படக் கலைஞரான இக்பால் முகமது கூறியது, 


நீரின் முக்கியத்துவத்தையும், மகத்துவத்தையும் உணர்த்தும் வகையில் "நீருக்கு ஒரு பாடல்" என்ற தலைப்பில் இன்ஸ்டாகிராம் வாயிலாக போட்டிக்கு அறைகூவல் விடுக்கப்பட்டது. வழக்கமான பரிசுகள் அறிவிக்கப்படும் போட்டி அல்ல இது. நீரின்றி அமையாது உலகு என்ற நம் மூத்தோர் சொல்லை இன்றைய தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்வதும், உணர்த்துவதும் தான் இதன் பரிசு. 


இந்தியா முழுமையும் இருந்து 2000-க்கும் மேற்பட்டோர் தலைப்புக்கு தக்க புகைப்படங்களை அனுப்பி வைத்தனர். இயற்கையின் வரப்பிரசாதமான நீரின் அத்தனை சாத்தியக் கூறுகளையும் உள்ளடக்கியதாக இருந்தன அந்த புகைப்படங்கள். இதில் எதை எடுப்பது, எதை விடுப்பது என்று கத்தி முனையில் நடப்பது போல் நுண்மையாக தேர்வு செய்து 50 புகைப்படங்கள் கண்காட்சிக்கு தேர்வு செய்யப்பட்டன. அவை கடந்த 16-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை சென்னை அண்ணா சாலையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ-வில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. காரணம் என்னவெனில், ஆகஸ்ட் 19-ந் தேதி தான் உலக புகைப்பட தினமாகும்.



கண்காட்சியின் நிறைவு விழாவில் பங்கேற்றுப் பேசிய லைட் அன்ட் லைஃப் அகாடமியின் நிறுவனரும், முன்னணி புகைப்படக் கலைஞருமான இக்பால் முகமது, கூறியது, "ஒரு உயரிய நோக்கத்திற்காக லாப நோக்கின்றி அருமையான புகைப்படங்களை இந்தியா முழுவதும் இருந்து பார்ப்பது என்பதே நெஞ்சை நெகிழச் செய்தது என்றார். நீரை இப்படியெல்லாம் புகைப்படங்களாக பதிவு செய்ய முடியுமா என்று வியந்து போகுமளவுக்கு அட்டகாசமான புகைப்படங்களை கண்டு பார்வையாளர்கள். ஆச்சர்யப்பட்டு போனதாகவும் அவர் குறிப்பிட்டார். 


பொதுவாக புகைப்பட கண்காட்சிகள் என்பது தனியான அரங்கில் நடைபெறும். ஆனால் எக்ஸ்பிரஸ் அவென்யூ போன்ற ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் ஒரு இடத்தில் இத்தகைய கண்காட்சியை நடத்தியபோது மக்கள் காட்டிய ஆர்வமும், ஒரு புகைப்படத்தோடு ஒன்றிப்போய் தியானம் போல அதனை பார்த்து மகிழ்ந்ததும் புகைப்படக் கலைக்கு கிடைத்த வெற்றியாக பார்ப்பதாகவும் இக்பால் அகமது தெரிவித்தார்.


செயல் தான் ஆகச் சிறந்த சொல் என்பார்கள். அதுபோல வெறும் புகைப்பட கண்காட்சி என்பதாக மட்டுமல்லாமல் கடந்த 18-ந் தேதி சிறுவர்களுக்கு நீர் நாயகர்கள் என்ற தலைப்பில் போட்டி ஒன்றும் நடத்தப்பட்டது. தண்ணீரை எப்படி சிக்கனமாக பயன்படுத்துவது மற்றும் சேமிப்பது என்பதே இந்த போட்டியின் கருவாகும். 200-க்கும் மேற்பட்ட சிறார்கள் இதில் பங்கேற்று எக்ஸ்பிரஸ் அவென்யூ முழுவதும் சுற்றி பொதுமக்களின் நீர் சேமிப்பு முறைகளை பற்றி எடுத்துரைத்து வருங்கால தலைமுறை ஒரு அறிவார்ந்த தலைமுறை என்பதை நிரூபித்துக் காட்டினர். வருங்காலத்தில் நீரை சிக்கனமாக பயன்படுத்துவோம் என்று 200-க்கும் மேற்பட்ட சிறார்கள் உறுதிமொழி ஏற்றது பார்த்தவர்களுக்கு ஒரு பாடமாக இருந்தது. 



தனது ஒன்பதாவது ஆண்டு தினத்தை கொண்டாடும் இந்நேரத்தில் இந்த பூமிப்பந்தின் அமிர்தமான நீரின் முக்கியத்துவத்தை கூறும் நீருக்கு ஒரு பாடல் என்ற இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிப்பதாக எக்ஸ்பிரஸ் அவென்யூ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எக்ஸ்பிரஸ் அவென்யூ-வில் வர்த்தகம் மேற்கொள்ளும் நிறுவனங்களும் நீருக்கு ஒரு பாடல் நிகழ்ச்சியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். புகைப்படக் கலைஞர்களை பாராட்டியும், புகைப்படங்களை வாங்கியும் தங்கள் பங்களிப்பை அவர்கள் தெரியப்படுத்தினர்.


மழையின் ஒரு துளி நீர் தான் மாபெரும் கடல்களை உருவாக்கிறது என்பதை உணர்த்தும் வகையிலான ஆகச்சிறந்த புகைப்படங்கள் விற்பனைக்கும் வைக்கப்பட்டிருந்தன. வெறும் புகைப்படமாக மட்டுமல்லாமல், தபால் அட்டைகளாகவும், புத்தக அட்டைகளாகவும் அவர் பரிணமித்திருந்தன. இந்த புகைப்பட கண்காட்சியில் திரட்டப்பட்ட நிதியானது, இந்திய ஏரிகளை மீட்டெடுக்கும் பணிக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ள (E.F.I) என்ற அரசுசாரா தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்படுகிறது.


நீருக்கு ஒரு பாடல் என்ற இந்த புதுமையான முயற்சி நடைபெற்ற நான்கு நாளும், நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துச் சென்றனர். உயர்ந்த லட்சியத்திற்காக தங்கள் பங்களிப்பை ஆற்றிய புகைப்படக் கலைஞர்களுக்கும் பொதுமக்கள் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்துச் சென்றனர். சென்னையின் இளைஞர் பட்டாளமும், மூத்த புகைப்படக் கலைஞர்களும், புகைப்படக் கலை மீது ஆர்வம் கொண்டவர்களும் பெரும் படையென இங்கு வருகை தந்திருந்தனர். வெறும் புகைப்படங்களை பார்ப்பது மட்டும் என்றில்லாமல் அது உணர்த்தும் செய்தியினையும் அவர்கள் உள்வாங்கிச் சென்றதே இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சம்.



200-க்கும் மேற்பட்டோர் விலையைப் பற்றி கவலைப்படாமல் இயற்கையின் அற்புதத்தை படம்பிடித்த புகைப்படங்களை வாங்கிச் சென்றதே இதற்கு சாட்சி. இன்னும் ஒருசிலர் புகைப்படங்களுக்கு தக்க கவிதைகளை எழுதுவதாகவும் வாக்களித்துச் சென்றனர். 


பல்லாயிரம் மக்கள் வரக்கூடிய எக்ஸ்பிரஸ் அவென்யூ-வில் அதுவும் அதன் மையமான சென்ட்ரால் ஆட்ரியத்தில் இந்த கண்காட்சிக்கு இடம் வழங்கிய, அந்நிறுவனத்திற்கு இக்பால் முகமது மற்றும் லைட் அன்ட் லைஃப் அகாடமியும் பெரிதும் கடமைப்பட்டுள்ளனர். அந்த இடத்தில் நீருக்கு ஒரு பாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டதே அதன் வெற்றிக்கு அடிப்படை காரணமாகும். 


எக்ஸ்பிரஸ் அவென்யூவின் 9_வது ஆண்டு தினத்தில் இத்தகைய ஒரு முயற்சியில் பங்கேற்றதும் அதன் சிறப்பாகும். நீர் நாயகர்களாக நான்கு நாட்களும் வலம் வந்த 200-க்கும் மேற்பட்ட சிறார்களுக்கு இனிப்புகளை வழங்கிய க்ரிஸ்பி க்ரீம் நிறுவனத்திற்கும் தங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக இக்பால் முகமது கூறினார். 


சர்வதேச தரத்தில் புகைப்படக் கலையை பயிற்றுவிக்கும் ஓர் அமைப்பு தான் ஊட்டியில் செயல்பட்டு வரும் லைட் அன்ட் லைஃப் அகடாமி. 2001-ம் ஆண்டு இக்பால் முகமது மற்றும் விளம்பரத்துறை வல்லுநரான அனுராதா இக்பால் ஆகியோரால் இது துவக்கப்பட்டது. காலத்திற்கு தக்கவகையில் இந்த டிஜிட்டல் யுகத்திற்காக, இணையம் வழியாக எல்எல்ஏ ஆன்லைன் என்ற புகைப்படக்கலை பயிற்று முறையையும் இவர்கள் உருவாக்கி உள்ளனர். ஆங்கிலம் உட்பட 9 இந்திய மொழிகளில் இது பயிற்றுவிக்கப்படுகிறது. 


இதுபற்றி மேலும் விவரங்களுக்கு... www.llacademy.com , www.iqbalmohamed.com , www.llaonline.in  என்ற இணையதளங்கள் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.