உச்சத்தை தொடும் பெட்ரோல், டீசல் விலை: கமல், ஸ்டாலின் கண்டனம்!
நாள்தோறும் உச்சத்தை தொடும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல் விரைவில் உரிய தீர்வு காண வேண்டும் என்று கமல், ஸ்டாலின் உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர்!
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் கடந்த ஓராண்டாக தினசரி அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலையை உயர்த்தியும், குறைத்தும் வருகின்றன.
முக்கியமாக, கர்நாடக தேர்தலுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஏழை எளிய நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விலை உயர்வால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடந்த 4 வாரங்களாக ஏறுமுகமாக உள்ளது.
இதனால், சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 34 காசு உயர்த்தப்பட்டு ரூ.79.47 ஆக நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோன்று, ஒரு லிட்டர் டீசல் விலையானது 28 காசு உயர்ந்து ரூ.71.32 ஆக நிர்ணயிக்கப்பட்டு விற்பனையானது. இதனால், வாகன ஓட்டிகள் அதிக பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.
இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கமல்ஹாசன்..! பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல் கவனிக்க வேண்டும், அயல் நாடுகள் மீது பழி சுமத்தக்கூடாது என்றார்.
அதேபோன்று, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.