பத்திரிகையாளர் மீது தாக்குதல் - வருத்தம் தெரிவித்த ஷங்கர்
![பத்திரிகையாளர் மீது தாக்குதல் - வருத்தம் தெரிவித்த ஷங்கர் பத்திரிகையாளர் மீது தாக்குதல் - வருத்தம் தெரிவித்த ஷங்கர்](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2017/03/22/114375-shankar.png?itok=8Ds7wf1Q)
2.0 படப்பிடிப்பு தளத்தில் செய்தியாளர் தாக்கப்பட்டதற்கு இயக்குனர் ஷங்கர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஷங்கர் இயக்கி வரும் 2.0 படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னை திருவல்லிக்கேணியில் நடந்தது. அந்த இடத்தில் பொது மக்களுக்கு இடையூறு தரும் வகையில் வாகனங்கள் ஏராளமாக நின்றன. இதை பார்த்த முன்னணி நாளிதழின் செய்தியாளர் ஒருவர் வாகனங்களை புகைப்படம் எடுத்துள்ளார். இதை பார்த்த படக்குழுவினர் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் செய்தியாளர் தரப்பில் ஐஸ்ஹவுஸ் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் ஷங்கரின் உறவினர் பப்புவை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதையடுத்து இயக்குநர் ஷங்கர் சேப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் அவர் கூறியதாவது:-
படப்பிடிப்பு தளத்தில் நடந்த தாக்குதல் சம்பவம் பற்றி எனக்கு தெரியாது. அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காது. நான் எப்போதும் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என படக்குழுவினரிடம் கூறுவது உண்டு என்று ஷங்கர் தெரிவித்தார்.
ஷங்கர் வருத்தம் தெரிவித்ததை அடுத்து வழக்கை வாபஸ் பெறுவதாக செய்தியாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் எங்களுக்கு யாரையும் கைது செய்து சிறையில் வைக்க வேண்டும் என்ற நோக்கம் இல்லை என செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.