தரையில் உண்டான விளைவு திரையில் இல்லை - ராக்கெட்ரி திரை விமர்சனம்
ராக்கெட்ரி திரைப்படத்தின் விமர்சனம்
விண்வெளியில் போட்டிப்போட ஆசைப்படும் ஒரு தேசத்துக்காக பல தேசங்களுக்கு சென்ற ஒருவரை ஒரு தேசமே சூழ்ந்து நின்று வஞ்சித்தது. இதுவரை புத்தகங்களிலும், நீதிமன்ற தீர்ப்புகளிலும், பாதிக்கப்பட்டவரின் பேட்டிகளிலும் தெரிந்துகொண்டதை; திரையில் காண்பிக்க முயன்றிருக்கிறார் மாதவன்.
நல்ல நடிகர் என்ற பெயர் எடுத்த மாதவன் இயக்குநராக அறிமுகமாகி நம்பி நாராயணனின் வலியை கடத்த நினைத்திருக்கிறார். நினைப்பு நல்லதுதான் ஆனால் பஞ்சாங்கம் போன்ற பிற்போக்குத்தனத்தை அறிவியல் எனும் முற்போக்குடன் இணைத்ததே மிகப்பெரிய அபத்தம்.
ஆனால் அறிவியலையும், அதையும் ஒன்றாக காட்சிப்படுத்தியதும், பஞ்சாங்கம் ஏற்கனவே பஞ்சர் ஆனதாலும்; விவரமாக அது சம்பந்தமான இடங்களில் ப்ளர் செய்தும், ம்யூட் செய்தும் தானொரு இயக்குநர் என்பதை உணர்த்த விரும்பியிருக்கிறார். ஆனால் அது அவ்வளவு ஒன்று ஒர்க் அவுட் ஆகவில்லை. விண்வெளியிலிருந்து கேமரா வைத்ததெல்லாம் ஓகே. ஆனால், சுப்ரபாதம் பாட்டோடு பூமிக்கு வந்ததுதான் நெருடல்.
ராக்கெட் பற்றிய புரிதலுக்கும் சாமானிய மக்களுக்குமான தூரம் மிக மிக அதிகம். அதை சாமானியர்கள் புரிந்துகொள்வதற்கு இயக்குநர் மாதவன் சில விஷயங்களையாவது திரையில் செய்திருக்க வேண்டும். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால்ரசிகர்களுக்காக மாதவன் படம் எடுத்தாரா இல்லை சைன்ட்டிஸ்ட்டுகளுக்காக படம் எடுத்தாரா என்பது அவருக்கே வெளிச்சம்.
நம்பியின் வாழ்க்கையில் நடந்ததை எடுப்பது எந்த விதத்திலும் தவறே இல்லை. அதற்காக அதே சைன்டிஃபிக் வார்த்தைகளோடு வசனங்களையும் வைத்ததெல்லாம் கொஞ்சம் ஓவர்தான்.
அறிவியலைப் பொறுத்தவரை எளிய மக்களுக்கு எளிதில்லை. அதனை கையில் எடுத்து அவர்களுக்காக படைக்கும்போது ஒரு படைப்பாளிக்கு மிகப்பெரிய பொறுப்பு உண்டு. அந்தப் பொறுப்பை இயக்குநர் மாதவன் ஒரு குறிப்பிட்ட தரப்புக்கு மட்டுமே காண்பித்திருக்கிறாரோ?.
மாதவனின் நடிப்பை பொறுத்தவரை தான் ஒரு கிங் என்று நிரூபித்துவிட்டார். பூஜை அறையிலிருந்து கோயிலுக்கு சென்று அங்கிருந்து சாக்கடையில் விழுந்து காவல் நிலையத்துக்கு சென்று கடைசிவரை மீளாத நம்பி நாராயணனின் உளவியலையும், உடல் மொழியையும் அச்சு பிசாகமல் கொண்டு வந்திருக்கிறார். அதேபோல் நடிப்பு குயின் சிம்ரன் தான் மகா நடிகை என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டார்.
முதல் பாதி முழுக்க ப்ரின்ஸ்டன் பல்கலைக்கழகம், ப்ரான்ஸ் என்று படம் சுற்றுகிறது. அங்கெல்லாம் நம்பி வாழ்ந்ததை எதார்த்தங்களை மீறாமல் காட்சிப்படுத்தியது மாதவனின் மேக்கிங்கில் தேறும் ரகம்.
முதல் பாதி அந்நியமாக தெரிகிறதே இரண்டாம் பாதியாவது நம்மை திருப்திப்படுத்துமென்ற எதிர்பார்ப்பில் அமர்ந்தால் இரண்டாம் பாதியிலும் 20 நிமிடங்களுக்கு மேல் நம் நினைவிலும் ஓடவில்லை, ரசிப்பிலும் ஒட்டவில்லை.
இசையமைப்பாளர் யார் என்ற பெயரை தேடும் அளவுக்கு இருக்கிறது இப்படத்தில் அவருடைய பங்களிப்பு. ஒரு சுயசரிதை படத்துக்கு இசையமைப்பாளர்தான் இரண்டாவது ஹீரோ. உதாரணம் சூரறைப் போற்று, ஜெய் பீம், தோனி போன்ற படங்களை சொல்லலாம். ராக்கெட்ரியில் ராக்கெட் சத்தத்துக்கு முக்கியத்துவம் கொடுத்த இயக்குநர் மாதவன் கொஞ்சம் இசைக்கும் அதே முக்கியத்துவத்தை கொடுத்திருக்கலாம்.
‘ராக்கெட் கவுந்தா எப்டி ரியாக்ட் பண்ணனும்னு தெரிஞ்ச சைன்ட்டிஸ்ட்டுகளுக்கு ஒரு மனுஷன் கவுந்தா எப்டி ரியாக்ட் பண்ணனும்னு தெரியல போல’ என்ற வசனத்தில் மாதவனின் பேனா ஈர்க்கிறது. இதே டோனில் பல வசனங்களை மாதவன் எழுதியிருந்தால் ராக்கெட்ரி: நம்பி விளைவு மிகப்பெரிய விளைவை ரசிகர்களுக்கு ஏற்படுத்தியிருக்கும்.
ஒரு தேசமும்,ஒரு தேசத்தின் விண்வெளி அலுவலகமும், அதன் அதிகாரமும் சேர்ந்துகொண்டு செய்த வஞ்சத்தால் சருகானது நம்பியின் வாழ்க்கை.
நிலைமை இப்படி இருக்க இயக்குநர் மாதவன், மக்களின் உணர்ச்சிகளையும், நம்பி வீட்டில் மக்கள் கல் எறிந்த நிகழ்வுகளில் மட்டுமே கவனம் செலுத்தியிருக்கிறார்.
அதிகார துஷ்பிரயோகத்தால் வீழ்த்தப்பட்ட நம்பியின் வாழ்க்கை சிபிஐயால் மட்டுமே மீண்டது. குறிப்பாக சட்ட போராட்டத்தால் மீண்டும் எழுந்தது. ஆனால், நம்பியின் சட்டப்போராட்டம் பற்றி ஒப்புக்குக்கூட படத்தில் காட்சி இல்லை.
அதேசமயம் சிறப்பு தோற்றத்தில் நடித்த சூர்யா; மக்கள் சார்பாக நம்பியிடம் மன்னிப்பு கேட்கிறார். எதற்காக மக்கள் நம்பியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கேட்கவேண்டியது அவரை வீழ்த்திய அதிகாரமும், வெறும் யூகத்தை மட்டுமே ஆதாரமாக கொண்டு விசாரணை என்ற பெயரில் இந்தியாவின் மிகப்பெரிய விஞ்ஞானியை கொடுமைப்படுத்தி, சிறுமைப்படுத்தியவர்களும்தான்.
அதிகாரத்தால் வீழ்ந்து, சுற்றத்தால் உளவியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு மனிதனின் வலியை இயக்குநர் மாதவன் இவ்வளவு மேம்போக்காக கடந்து சென்றிருக்கக்கூடாது. அது அறமும் இல்லை.
பொதுவாக ஒருவரின் வாழ்க்கையை படமாக்கும்போது அதுவும் அதிகாரத் திமிரினால் வீழ்த்தப்பட்ட ஒருவரின் வாழ்க்கையை படமாக்கும்போது அதற்கான உழைப்பு தேவைப்படுகிறது. ஆனால் அந்த உழைப்பை மாதவன் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதை ராக்கெட்ரி ஆணித்தரமாக உணர்த்துகிறது.
மேலும் படிக்க | கார் விபத்தில் சிக்கிக்கொண்ட கேஜிஎஃப் நடிகர்..ரசிகர்கள் அதிர்ச்சி!
குறிப்பாக தனது முதல் படம், அதுவும் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட ஒரு விஞ்ஞானியின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட படம். இதனை எவ்வளவு கவனத்தோடு, கனத்தோடு எடுத்திருக்க வேண்டும். ஆனால் முதல்முறையாக இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் மாதவன் தன் பரிசோதனை முயற்சிக்கு நம்பியின் வாழ்க்கையை பலிகடா ஆக்கிவிட்டாரோ என்று படம் முடியும்போது பலரிடம் தோன்றியதை உணர முடிகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYe