தனுஷூக்கு எதிரான வழக்கு; தனுஷுக்கு ஆதரவாக தீர்ப்பு
நடிகர் தனுஷ் தங்களது மகன் என மேலூர் தம்பதி தொடுத்த வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம், மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன் (60), அவரது மனைவி மீனாட்சி (55). இவர்கள் தங்களின் மூத்த மகன் கலைச்செல்வன்தான் நடிகர் தனுஷ் என பல ஆண்டுகளாக உரிமை கொண்டாடி வருகின்றனர்.
தங்களுக்கு மாதம் ரூ.65 ஆயிரம் பராமரிப்புச் செலவு வழங்க நடிகர் தனுஷுக்கு உத்தரவிடக்கோரி, மேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கதிரேசன் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றக் கிளையில் தனுஷ் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் கடைசியாக தனுஷ் கடந்த ஏப்ரல் 11-ல் நேரில் ஆஜரானார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பி.என்.பிரகாஷ் தீர்ப்பை ஒத்திவைத்தார்.
இந்நிலையில், இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பி.என். பிரகாஷ், "மேலூர் நீதிமன்றத்தில் தனுஷூக்கு எதிராக கதிரேசன் தம்பதியினர் தாக்கல் செய்த வழக்கு ரத்து செய்யப்படுகிறது. தனுஷின் மனுவை ஏற்று மேலூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கும் ரத்து செய்யப்படுகிறது" என்றார்.
மேலூர் தம்பதி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் டைட்டஸ் கூறும்போது, "தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம். தனுஷுக்கு மரபணு சோதனை நடத்துவதற்கு எங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை" என்றார்.
தற்போது தனுஷுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.