நடிகர் ஜெய்க்கு ரூ.5,200 அபராதமும், ஆறு மாதம் ஓட்டுநர் உரிமம் ரத்து
குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் ஜெய்க்கு ரூ.5,200 அபராதம் விதித்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் ஜெய் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படுவதாகவும், 6 மாதங்களுக்கு கார் ஓட்டவும் தடை விதித்து நீதிபதி ஆப்ரஹாம் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த மாதம் 21-ம் தேதி நடிகர் ஜெய், மது அருந்தி விட்டு, போதையில் காரை ஓட்டி வந்துள்ளார். அப்போது அவர் ஓட்டி வந்த கார் அடையாறு மேம்பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதுசம்பந்தமாக அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் ஜெய் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு சைதாப்பேட்டை பெருநகர 4 வது கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. கடந்த 3 ந் தேதி கோர்ட்டில் ஆஜரான ஜெய் குற்றப்பத்திரிகை நகலை பெற்றுக் கொண்டார்.
பின்னர் நேற்று முன்தினம் வழக்கு விசாரணைக்கு ஜெய் ஆஜராகவில்லை. இதனால் வருகிற 10 ந் தேதிக்குள் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தக்கோரி பிடிவாரண்டு பிறப்பித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு மாஜிஸ்திரேட்டு ஆபிரகாம் லிங்கன் உத்தரவிட்டார்.
இந்நிலையில் நடிகர் ஜெய் இன்று கோர்டில் ஆஜர் ஆனார். விசாரணையில் தான் குடித்துவிட்டு போதையில் கார் ஒட்டி விபத்து ஏற்பட்டுள்ளதை ஒத்துக்கொண்டார்.
நடிகர் ஜெய்க்கு 5,200 ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம், 6 மாதங்களுக்கு கார் ஓட்டவும் தடை விதித்து நீதிபதி ஆப்ரஹாம் உத்தரவிட்டுள்ளார்.