நடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரி நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் விஷால் தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகர் சங்கத்தின் தேர்தல் தொடர்பான வழக்குகளை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கல்யாணசுந்தரம் விசாரித்து வருகிறார். இந்த நிலையில், தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் தனி அதிகாரியாக பத்திரப்பதிவுத்துறை உதவி ஐ.ஜி. கீதா என்பவரை தமிழக அரசு நியமித்துள்ளது.


தமிழக அரசின் இந்த உத்தரவை எதிர்த்தும், இந்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரியும் நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் நடிகர் விஷால் வழக்கு தொடர முடிவு செய்தார். மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக இன்றே விசாரிக்க வேண்டும் என்று நடிகர் விஷால் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஆதிகேசவலு முன்பு முறையிடப்பட்டது.


இதற்கு பதில் அளித்த நீதிபதி, ‘ஏற்கனவே தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கல்யாணசுந்தரம் விசாரித்து வரும் நிலையில், நடிகர் சங்கத் துக்கு தனி அதிகாரி நியமனம் தொடர்பாக அவரிடம் தான் முறையிட வேண்டும்’ என்று குறிப்பட்டார். பின்னர் இந்த வழக்கை நீதிபதி கல்யாணசுந்தரம் முன்பு விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்று பொறுப்பு தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்து நீதிபதி ஆதிகேசவலு உத்தரவு பிறப்பித்துள்ளார்.