சென்னை: சசிகலாவின் அவசரத்தால்தான் எம்ஜிஆரின் கட்சி உடையும் நிலை ஏற்பட்டுள்ளது, இதே நிலை நீடித்தால் அதிரடி முடிவு எடுக்க தயங்கமாட்டேன் என நடிகை லதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது தொடர்பாக நடிகை லதா வெளியிட்டுள்ள அறிக்கையில்:-


அதிமுக-வில் நடந்துகொண்டிருக்கும் சம்பவங்கள் மிகுந்த மனவேதனையை தருகிறது. எம்.ஜி.ஆர். கட்சியை உருவாக்கும் போது உடனிருந்து அவர் பட்ட கஷ்டங்களை நான் பார்த்தவள். 


இப்பொழுது அதெல்லாம் வீணாகிவிடுமோ என்ற கவலை மேலோங்கி உள்ளது. கட்சியை அவர் உருவாக்கியது மக்கள் சேவைக்காக மட்டுமே. ஆனால் அதை செய்யாததே இந்த நிலைமைக்கு காரணம்.


ஜெயலலிதா மறைவிற்குப்பின் பொதுச்செயலாளர் யார் என்ற குழப்பம் இருந்தாலும், ஆட்சி என வந்தபோது அவர் வழிகாட்டிய ஓ.பன்னீர்செல்வம் திறம்பட செயல்பட்டார்.


இப்படி ஆட்சி நடந்து கொண்டிருக்கும் போது அவரை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்து, அவருக்கு முதல்வராக அவசரப்படுவதற்கு என்ன காரணம்? அதற்கு அவசியம் என்ன? அதன் விளைவு தான் இன்று கட்சி உடையக்கூடிய சூழ்நிலையில் உள்ளது.


இதனால் தமிழகம் உலகமே நம் கட்சியினை கேலிக்கூத்தாக பார்க்கும் நிலையை உருவாக்கிவிட்டார்கள். இதை என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை. இந்த கட்சியை காப்பாற்றும் கடமை எனக்கு உள்ளது. இதே நிலை நீடித்தால் அதிரடி முடிவினை எடுக்கவும் தயங்க மாட்டேன்.


இவ்வாறு நடிகை லதா அதில் குறிப்பிட்டுள்ளார்.