கொலம்பியாவிலிருந்து புதுச்சேரிக்கு போதைப்பொருள் கப்பலில் சட்டவிரோதமாகக் கடத்தப்படுகிறது. அந்த கடத்தல் கும்பலிடமிருந்து இன்னொரு நெர்வொர்க் அதைக் கடத்தி சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கும் பிரித்து சப்ளை செய்கிறது. இதனைத் தொடர்ந்து செயன் பறிப்பு சம்பவங்கள், கொலைகள் அடுத்தடுத்து நிகழ்கின்றன. இதனைக் கண்டுபிடித்து குற்றவாளிகளைத் தண்டிக்கும் பொறுப்பு காவல்துறை உதவி ஆணையர் அர்ஜுனிடம் (அஜித் குமார்) ஒப்படைக்கப்படுகிறது. மேன்ஷனில் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் இளைஞரின் சடலத்தைப் பார்த்து விசாரணையைத் தொடங்கும் அஜித் அடுத்தடுத்து அதன் மர்ம முடிச்சுகள் அறிந்து அதிர்ச்சியடைகிறார். குற்றவாளிகளைக் கண்டறிந்து தண்டனை வாங்கித் தர முற்படும்போது சொந்த வாழ்க்கையில் அவர் குடும்பத்தில் சோதனைகள் எட்டிப் பார்க்கின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | வலிமை திரைப்படத்துக்கு ரசிகர்களின் டிவிட்டர் ரியாக்ஷன்..!


பாசமா, கடமையா என முடிவெடுக்கும் தருணத்தில் அஜித் என்ன செய்கிறார், ஒன்றன்பின் ஒன்றாக மூன்று குற்றங்களைச் செய்வது யார், அதன் நதிமூலம், ரிஷிமூலம் என்ன, எப்படி அந்த நெட்வொர்க் இயங்குகிறது, குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்தது யார் போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்கிறது திரைக்கதை.



குற்றத்தின் தன்மையை மிக விரிவாகவும், நுட்பமாகவும் பதிவு செய்வதில் கை தேர்ந்த இயக்குநர் ஹெச்.வினோத் வலிமை படத்திலும் தன் அக்மார்க் முத்திரையைப் பதித்திருக்கிறார். ஆனால், திரைக்கதையின் போக்கில் அவர் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால் வேற லெவல் அனுபவத்தைக் கொடுத்திருக்கலாம்.


அஜித் ஒட்டுமொத்தப் படத்தையும் தன் தோள்களில் தூக்கிச் சுமந்திருக்கிறார். அவரது பில்டப் காட்சிகள், பாசிட்டிவ் வசனங்கள், அறிவுரைப் படலங்கள் நன்றாகவே எடுபட்டுள்ளன. மாஸ் ஹீரோ இமேஜ் மட்டுமில்லாமல் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் நோக்கில் நடித்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆக்‌ஷன் காட்சிகளிலும், ரெக்கமண்ட் வேண்டாம்... ஒரு அப்பாவி பாதிக்கப்படுவான் என்று தம்பிக்கும், அம்மாவுக்கும் பதில் சொல்லும்போதும் தியேட்டரில் விசில் பறந்தது. அஜித்தின் சொந்த வாழ்க்கையில் இருந்த பல குணாம்சங்கள் படத்தின் ரீல் கதாபாத்திரத்துக்கும் பயன்பட்டிருப்பது அவரது ஆளுமைக்கான சான்றாக உள்ளது. இயக்குநர் ஹெச்.வினோத் அதை தனக்கே உரிய புத்திசாலித்தனத்துடன் மிகச் சரியாகப் பயன்படுத்தியுள்ளார். 



ஹீமா குரேஷி அஜித்தின் தோழியாக, சக காவல்துறை அதிகாரியாக, தொழில்நுட்பத் திறனில் தேர்ந்தவராக நடித்துள்ளார். கதையை நகர்த்துவதற்கு நன்றாக ஒத்துழைத்துள்ளார். அச்சுத குமாருக்குப் படத்தில் பெரிய வேலையில்லை. சுமித்ரா நீண்ட வருடங்களுக்குப் பிறகு நடிக்க வந்துள்ளார். அஜித்தின் அம்மாவாக பாசமுள்ள தாயின் பரிதவிப்பை நமக்கும் கடத்துகிறார். புகழ் ஓரிரு காட்சிகளில் மட்டும் வந்து போகிறார். பாவல் நவகீதனுக்கு மிக முக்கியமான வேடம். பொறுப்பை உணர்ந்து பக்குவமான நடிப்பை வெளிக்கொணர்ந்துள்ளார். காவல் ஆணையராக செல்வா ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். அனுபவம் பொருத்தமான பாத்திர வார்ப்புக்குக் கைகொடுத்துள்ளது. ஜி.எம்.சுந்தர் தேர்ந்த நடிப்பில் மிளிர்கிறார். ராஜ் ஐயப்பா சராசரி இளைஞனுக்கே உரிய குழப்ப மனநிலையைப் படம்பிடித்துக் காட்டுகிறார்.
கார்த்திகேயா பாடி பில்டராக தோற்றத்தில் மிரட்டுகிறார். ஆனால், அவரது நடிப்பு பலவீனம். எதற்கெடுத்தாலும் சிரிப்பதைத் தவிர்த்திருக்கலாம் அல்லது குறைத்திருக்கலாம். 


மேலும் படிக்க | வலிமை படம் ரிலீஸ்...! திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீச்சு...!


நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு, யுவன் ஷங்கர் ராஜாவின் இசை, ஜிப்ரானின் பின்னணி ஆகியவை படத்துக்குப் பெரிதும் பலம் சேர்த்துள்ளன. தினேஷ் சுப்பராயனின் ஆக்‌ஷன் காட்சிகள் ரசிகர்களுக்கான ட்ரீட். விக்னேஷ் சிவனின் வரிகளில் வேற மாதிரி பாடலும், தாமரையின் வரிகளில் தீயை ஆற்றுவேன், நீரை ஊற்றுவேன், பாதை மாற்றுவேன் வரிகளும் கதையின் தன்மைக்கு வலு சேர்த்துள்ளன. விஜய் வேலுக்குட்டி இயக்குநரின் ஒத்துழைப்புடன் இரண்டாம் பாதியில் சில இடங்களில் கத்தரி போட்டிருக்கலாம். 



 ‘‘வலிமைங்கிறது அடுத்தவனைக் காப்பத்தத்தான்... அழிக்க இல்லை,’’  ‘‘வறுமைன்னு சொல்லி தப்பு பண்ணாதே... அப்படி சொல்லி உழைச்சு சாப்பிடுற ஏழைகளைக் கேவலப்படுத்தாதே’’,  ‘‘தான் உண்டு தன் வேலை உண்டுன்னு இருக்கிறவன் சமநிலை தவறுனா, அவன் கோபம் எப்படி இருக்கும்னு காட்டுவேன்’’ போன்ற வசனங்கள் அஜித்தின் கதாபாத்திர செதுக்கலுக்கு உறுதுணை புரிந்துள்ளன. 


போதைப்பொருள் கடத்தல், சப்ளை செய்யும் விதம், நெட்வொர்க் வலைப்பின்னல் என விரிவாகப் பதிவு செய்த ஹெச்.வினோத் பாதிக்கப்பட்ட சாமானிய மக்கள் தரப்பை அழுத்தமாகப் பதிவு செய்யவில்லை. வெகுஜனத்தில் ஒருவராகவே அவரும் கடந்துபோய்விடுகிறார். கறுப்பு ஆடு யார், குற்றத்துக்குத் துணைபோவதற்கான காரணம் என்ன என்பது முன்பே ஊகிக்கக்கூடியதாக உள்ளது. அதனால் இரண்டாம் பாதி முழுக்க ரசிகர்களின் கணிப்பைத் தவறாமல் காட்சிப்படுத்திய விதம் சுவாரஸ்யமாக இல்லை. இயக்குநர் இதில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். இந்தக் குறையைப் போக்கி திரைக்கதையின் தொய்வைச் சரிசெய்திருந்தால் வலிமை அஜித்தின் கரியரில் மறக்கமுடியாத, ஆற்றல்வாய்ந்த படமாக இருந்திருக்கும். 


க.நாகப்பன்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR