பாகிஸ்தான் நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் இந்திய படங்களில் நடிக்க தடை
சினிமா துறையில் பாக்கிஸ்தானிய நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் நடிக்க தடை என அனைத்து இந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
பிப்ரவரி 14 ஆம் தேதி ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநில புல்வாமா மாவட்டத்தின் அவந்திப்பூரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 44 இந்திய துணைப்படை வீரர்கள் பலியாகினர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பையும், துயரத்தையும், வேதனையையும் ஏற்ப்படுத்தி உள்ளது. இந்தியா முழுவதும் இறந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தபட்டு வருகிறது.
இந்த சம்பவத்தால், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உறவு மீண்டும் ஒரு முறை மோசமானதாகி உள்ளது. இதற்கு முக்கிய காரணம், இந்த துயர சம்பவத்தை பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு பொறுப்பேற்று உள்ளது. இதனால் உலக நாடுகளிடம் இருந்து பாகிஸ்தானை தனிமை படுத்தும் செயலில் இந்தியா ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், இந்திய படங்களில் பாகிஸ்தானை சேர்ந்த நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் யாரும் பணியாற்றக் கூடாது என அவர்களுக்கு தடை விதித்து அறிவித்தது அனைத்து இந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கம். அதுக்குறித்து AICWA பொதுச்செயலாளர் ரோனக் சுரேஷ் ஜெயின் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியாதவது,
பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு அனைத்து இந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவிக்கிறது. அதேவேளையில் தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்துக்கொள்கிறோம். பாகிஸ்தானை சேர்ந்த நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் இந்திய படங்களில் நடிக்கவும், பணியாற்றவும் தடை விதிக்கப்படுகிறது. இந்த தடையை மீறி யாரவது பாகிஸ்தானை சேர்ந்தவர்களை தங்கள் படங்களில் நடிக்க வைத்தால், அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
எங்களுக்கு நாடு தான் முதலில், நாங்கள் நாட்டுக்காக துணை நிற்போம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது