நடிகை பாவனா கடத்தல் விவகாரம்: திலீப்க்கு 14 நாள் நீதிமன்ற காவல்
நடிகை பாவனா கடத்தல் மற்றும் பாலியல் வழக்கில் பிரபல மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டுள்ளதாக கேரளா போலீஸ் தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் நடிகை பாவான மர்ம நபர்களால் காரில் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார்.
இந்த வழக்கில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார் டிரைவர் மார்ட்டின், முன்னாள் கார் டிரைவர் 'பல்சர்' சுனில், வினீஸ் உட்பட 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் மலையாள நடிகர் திலீப், தூண்டுதலின் பேரில் பாவனாவை கடத்தியது தெரியவந்தது.
இதையடுத்து நடிகர் திலீப், அவரது மனைவி காவ்யா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பின்னர் அவர்களை தேடப்பட்டு வந்த நிலையில், இன்று காலை முதல் நடிகர் திலீபிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் பாவனா பாலியல் துன்புறுத்தல் வழக்கில் ஈடுபட்டது தெரியவந்ததையடுத்து நடிகர் திலீப்பை போலீசார் கைது செய்தனர்.
இதனையடுத்து, அங்கமாலி கோர்ட் நீதிபதி இல்லத்தில் நடிகர் திலீப் உடனடியாக ஆஜர்படுத்தப்பட்டார். தீலீப்புக்கு எதிராக 19 ஆதாரங்களை போலீசார் தாக்கல் செய்தனர். மேலும், கடத்தல் மற்றும் தாக்குதலுக்கு சுமார் ரூ.1.5 கோடி கொடுத்ததாக போலீசார் தெரிவித்தனர்.
பின்னர், திலீப்புக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனையடுத்து ஆலுவா துணை சிறைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். இதனிடையே அவர் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.