தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான வெற்றிநடை போட்டு வரும் அசுரன் திரைப்படம், பாராட்டி வரவேற்கப்பட வேண்டிய திரைப்படம் என CPIM அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது., "கட்டப்பட்ட சாதிப்படிநிலை, ஏற்படுத்தப்பட்ட சாதி ஏற்றத்தாழ்வுகள், தொடுக்கப்பட்ட சாதிக் கொடுமைகள் இரண்டாயிரம் ஆண்டுகளாக நீடித்து வருகின்றன. பல சாம்ராஜ்யங்களை இந்தியா சந்தித்திருக்கிறது. கடைசியாக, ஆங்கிலேயர்கள் 200 ஆண்டு காலம் நம்மை ஆண்டார்கள். அந்த ஆட்சியாளர்களெல்லாம் சாதி அமைப்பைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்களேயன்றி அதனைத் தகர்ப்பதற்கோ, மாற்றுவதற்கோ எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.


மாறாக, தங்களது அதிகாரத்தைத் தொடர்வதற்கான ஒரு அரணாகப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதே உண்மை. பிறப்பால் மனிதர்களைப் பாகுபடுத்தும் சாதியத்தை ஒழிப்பதற்கான போராட்டம் வரலாறு நெடுக நடந்து வந்துள்ளது.


புத்தர், வள்ளலார், ஜோதிபா பூலே, அயோத்திதாசர், அம்பேத்கர், பெரியார், கம்யூனிஸ்ட் இயக்கத்தினர் உள்ளிட்டோர் நால் வர்ண, சனாதன, சாதி முறையை ஒழிப்பதற்காக குரல் எழுப்பினார்கள். களத்தில் இறங்கியும் போராடினார்கள். அந்தப் போராட்டங்களின் விளைவாகக் குறிப்பிடத்தக்க சில மாற்றங்கள் ஏற்பட்டதும் உண்மை. ஆயினும் சாதிப் பாகுபாடு என்ற மானுட இழிவு இன்னமும் முடிவின்றி நீடிக்கிறது.


“தீண்டாமைக் கொடுமை ஒழிக்கப்பட்டுவிட்டது, அவ்வாறு செயல்படுவது தடை செய்யப்பட்டது” என இந்திய அரசமைப்புச்சட்டம் கூறுகிறது. இதனை அமலாக்குவதற்கு மேலும் பல சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. ஆனாலும் போதிய பலனை அது கொடுத்ததா என்றால் இல்லை.


இந்த நிலைமைகளையும் மாற்றத்திற்கான தேவைகளையும் மக்கள் மனங்களில் பதியவைக்கிற கலை-இலக்கியப் படைப்புகளுக்கும் ஒரு வரலாறு இருக்கிறது. அந்த வரலாற்றின் தொடர்ச்சியாக, சாதிக் கொடுமைகளையே ஒரு கருவாக்கி எழுத்தாளர் பூமணி படைத்தளித்த நாவல் ‘வெக்கை’. அதனை மையமாக வைத்து, திரைக்கான கதையாக்கிப் படமாக்கியதில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன்.


தலித் மக்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட பஞ்சமி நிலத்தை மற்றவர்கள் அபகரிப்பதும், கொஞ்சநஞ்ச நிலம் சம்பாதித்து வைத்திருந்தாலும் பொறுத்துக்கொள்ள முடியாமல் தட்டிப்பறிப்பதும், தலித் மக்கள் செருப்பு அணிந்து நடக்கக் கூடாது என நிர்ப்பந்திப்பதும், சுடுகாடு கிடையாது, அப்படியே இருந்தாலும் பாதை கிடையாது, சாதி ஆதிக்க எண்ணம் உடையவர்கள் என்ன சொன்னாலும் அதற்கு அடங்கி நடக்க வேண்டும், கேள்வி கேட்கக் கூடாது என்பன போன்ற பல வடிவங்களில் இப்போதும் தமிழகத்தில் தீண்டாமை அக்கிரமங்கள் தொடர்வதை வெற்றிமாறன் நுட்பமாக காட்சிப் பதிவாக்கியிருக்கிறார். அதேநேரத்தில் வெறும் போதனையாக இல்லாமல், தொடக்கத்திலிருந்து, இறுதிக்காட்சி வரையில் விறுவிறுப்பாகப் படம் நகர்கிறது. படத்திற்கும், பார்வையாளர்களுக்கும் சற்றும் இடைவெளி வராத வகையில் அதனைச் செய்திருக்கிறார் இயக்குநர்.


குறு விவசாயி சிவசாமி (தனுஷ்) தன்னுடைய மகன் சிதம்பரத்துடன் (கென் கருணாஸ்) கிராமத்திலிருந்து இரவோடு இரவாக ஆற்றையும் காட்டையும் கடந்து தப்பித்து ஓடுவது ஏன்? சாதி அடிப்படையிலும் தனிப்பட்ட முறையிலும் அவமானங்களுக்கு உள்ளாகிற சிவசாமி மனைவியும் பிள்ளைகளும் குத்திக்காட்டிய போதும் அடங்கிப்போவது ஏன்? இந்த வினாக்களுக்கான விடைகளை நோக்கிப் படம் பயணிக்கிறபோது, அந்த ஊரின் வழியாக, தமிழகத்தின், ஏன் இந்திய நாட்டின் சாதி ஆதிக்க வன்மங்களைக் காண முடிகிறது.


சாதி ஆதிக்க எண்ணமுடைய பணக்கார சாராய வியாபாரியின் “அன்புக்குரிய” விசுவாசத் தொழிலாளி சிவசாமி. அவன் யாரைப் பரிந்துரைத்தாலும் வேலை கிடைக்கும் என்கிற அளவுக்கு அந்த முதலாளியிடம் செல்வாக்கு உள்ளவன் சிவசாமி. ஜில்லாவிலேயே வேறு யாரும் கிடையாது என்கிற அளவுக்கு சாராயம் காய்ச்சுவதில் சரியான பதம் அறிந்த அவனுடைய திறமைதான் அந்த அன்புக்கும், செல்வாக்குக்கும் அடிப்படை.


ஆனால் அந்த அன்பும் செல்வாக்கும் சாதி வரப்புக்கு உட்பட்டதுதான் என்பதை அனுபவப்பூர்வமாக உணர்கிற இடம் – அப்பப்பா எவ்வளவு அழுத்தமானது. தன்னை நேசிக்கும் முறைப்பெண் பள்ளிக்குச் செல்வதற்காக, அவளுடைய காலுக்குச் செருப்பு வாங்கித்தருகிறான் அவன். அதனைத் தொடர்ந்து வரும் நிகழ்வுகள் எந்த ஊரில், எந்தத் தெருவில் நடக்கவில்லை?


காதல் பிரச்சனை சார்ந்த மோதல் கதையாக முடிந்துவிடவில்லை. அதே கிராமத்தில் தலித் மக்களிடமிருந்து வஞ்சகமாகப் பஞ்சமி நிலங்கள் கைப்பற்றப்பட்ட பிரச்சனை வழக்கறிஞர் வேணுகோபால் சேஷாத்ரி (பிரகாஷ் ராஜ்) மூலமாக வெளிப்படுத்துகிறது படம். ஒரு இயக்கமாகவே ஊர் ஊராய்ச் செல்கிற அந்தக் கதாபாத்திரம், தலித் உரிமைப் போராட்டங்களில் தலித் அல்லாதவர்கள் பங்களிப்பையும் சொல்லாமல் சொல்கிறது. அந்த ஊரில் பஞ்சமி நில மீட்புக்கு முன்முயற்சி எடுப்பது சிவசாமியின் அண்ணன். கூட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுக்கும் போலீஸ் அதில் கலந்துகொள்ள வந்துகொண்டிருந்த வழக்கறிஞர் வேணு கோபாலைக் கைது செய்கிறது. கூட்டத்தில் சாதி ஆதிக்கவாதிகளின் ஆட்களும் ஊடுருவுவது, அதேநேரத்தில் தலித் மக்கள் வாழக்கூடிய குடிசைகளைக் கொளுத்துவது, சிவசாமியின் முறைப்பெண் உள்ளிட்டோர் உயிரோடு கருகுவது… நம் மனதில் அந்தக் கணத்தில் கீழ்வெண்மணி தோன்றுகிறது.


வேறு ஊரைச் சென்றடையும் சிவசாமிக்கு முருகேசன் (பசுபதி) குடும்பம் உதவுவது, அவனுடைய பின்னணி தெரிந்த பின்னும் முருகேசனின் தங்கை பச்சையம்மாள் (மஞ்சு வாரியர்) அவனை மணந்துகொள்வது இவை அடுத்த அத்தியாயமாக மலரும் பசுமைகள். அந்தக் கிராமத்திலும் சாதி ஆணவக்காரர்களுடன் மோத வேண்டிய சூழல் தொடர்கிறது. பச்சையம்மாளை அடித்தவர்களை மூத்த மகன் தாக்கியதற்காக கட்டப்பஞ்சாயத்து கூட்டப்பட்டு சிவசாமி வீடுவீடாய்ச் சென்று தலித் அல்லாதவர்களின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்கக் கட்டாயப்படுத்தப்படுவது அண்மையில் கூட தமிழகத்தில் நடந்த நிகழ்வு பற்றிய செய்தியை நினைவூட்டுகிறது. இப்போதும் பல இந்திய கிராமங்களில் இத்தகைய கொடுமைகள் தொடர்வதை யாரும் மறுக்க முடியாது.


சிவசாமியும், சிதம்பரமும் ஊரை விட்டு வெளியேறி நீதிமன்றத்தில் சரணடைய முயற்சிக்கின்றனர். அதை அறியும் சாதி ஆணவக்காரர்களும் அவர்களுக்கு சாதகமான போலீசும் அங்கேயே அவர்களைத் தாக்கத் தயாராக இருக்கின்றனர். உண்மை நிலைமைகளை எவ்வளவு நெருக்கமாகக் காட்டுகிறது அந்தக் காட்சி.


மகனைக் காப்பாற்றுவதற்காக, சாதி ஆணவக்காரர்கள் கேட்டபடி, தன் நிலத்தை எழுதிக் கொடுக்கிறான் சிவசாமி. ஆனாலும், சிதம்பரத்தை சாதி ஆணவக்காரர்கள் கொலை வெறியுடன் தாக்குகின்றனர். அவர்களின் நோக்கம் நிலத்தை அபகரிப்பது மட்டுமல்ல, தங்களை எதிர்க்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை நசுக்குவதும்தான். அவர்களிடமிருந்து மகனைக் காக்க சிவசாமி ஆவேசத்துடன் வருகிறபோது, திரையரங்கமே ஆர்ப்பரித்து வரவேற்கிறது. அது வெறும் நட்சத்திர நடிகர் மீதான அபிமானத்திலிருந்து மட்டுமல்ல. சாதி ஆணவத்துக்கு எதிரான உணர்விலிருந்தும்தான்.


இங்கு இத்தகைய சூழலை எப்படி சந்திக்க வேண்டுமென்று 1940களில் கீழத்தஞ்சையில் பி.சீனிவாசராவ் பேசுவதை குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். “உங்களுக்கும், பண்ணையார்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது, நீங்களும் தாயின் வயிற்றிலிருந்து இரண்டு கை, கால்களுடன் பிறந்த மனிதர்கள்தானே? அடித்தால் திருப்பி அடியுங்கள், பண்ணையாளை சவுக்கல் அடிப்பதும், சாணிப்பால் குடிக்க வைப்பதும் சட்டவிரோதம், பண்ணையார்கள் இப்படிப்பட்ட தண்டனை தந்தால், பதிலடி கொடுங்கள். எதிர்த்து நின்று அவரை விரட்டுங்கள். குண்டர்கள் தாக்க வந்தால் அவர்களை மரத்தில் கட்டிப்போடுங்கள். உங்களில் ஒருவன் தாக்கப்பட்டாலும், முழு கிராமமும் ஒன்றுசேர்ந்து பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றப் போராடுங்கள்” என களப்பால் கிராமத்தில் பி.சீனிவாசராவ் பேசியிருக்கிறார்.


அசுரன் படத்தில் சண்டைக் காட்சிகள் கதையோட்டத்தின் தேவையிலிருந்தே வந்துள்ளன என்றாலும், மோதலில் ஈடுபட வேண்டிய கட்டாயத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் தள்ளப்படுகிறார்கள் என்பது சரியாக சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதுவே இறுதித் தீர்வாகிவிடாது.


மாறாக, பழிவாங்கல், திருப்பிப் பழிவாங்கல் என்று பகைமையும் வன்முறையும் தலைமுறைகளுக்குக் கடத்தப்படும். ஆகவே சாதியத்திற்கு எதிராக கீழத்தஞ்சை அனுபவம் காட்டுவதுபோல, தலித் மக்கள், தலித் அல்லாதவர்கள் இருவரும் ஒன்றுபட்டு நிற்கிற மக்களின் பெருந்திரட்சிதான் சரியான தீர்வுக்கு இட்டுச்செல்லும்.


இத்தகைய படங்களை வழங்க முன்வந்துவிட்ட இளம் தலைமுறை இயக்குநர்கள் இந்தச் செய்தியையும் இனி வலுவாகப் பதிவு செய்ய வேண்டும் என்பதே நம் விருப்பம். மேலும் சாதிப்படிநிலை, ஏற்றத்தாழ்வு, சாதிக்கொடுமை ஆகியவற்றை கருத்தியல் ரீதியில் எதிர்க்கக்கூடிய சில அம்சங்களையும் படத்தில் கொண்டு வந்திருக்கலாம்.


நீதிமன்ற வளாகத்தில் சிதம்பரத்திடம், சிவசாமி கடைசியாக சொல்லும் வசனம் ஆழப்பதிகிறது. படத்திலேயே முத்தாய்ப்பாக அமைவது அது. “நம்ம கிட்ட காடு இருந்தா எடுத்துக்கிடுவானுங்க; ரூபா இருந்தா பிடிங்கிக்கிடுவானுங்க; படிப்பை மட்டும் நம்மகிட்ட இருந்து எடுத்துக்கவே முடியாது…”.


பஞ்சமி நிலத்தை சிவசாமியிடமிருந்து பறிக்கும்போது, அதனை இன்னொரு தலித் பெயருக்கே மாற்றம் செய்து பெறுகின்றனர் சாதி ஆதிக்க சக்திகள். நிலப்பறிப்பு நடைமுறையில் எத்தனை நுட்பமாக நடக்கிறது என்பது எடுத்துக்காட்டப்படுகிறது. தனுஷ், மஞ்சுவாரியர், இயக்குநர் பாலாஜி சக்திவேல், பசுபதி உள்ளிட்ட கலைஞர்களின் நடிப்பு கச்சிதமாக அந்த ஊராரின் முகங்களைக் காட்டுவதாக அமைந்துள்ளது.


நாவல்களைத் திரைப்படமாக்குகிற முயற்சி ஒரு பெரிய சவால். இலக்கிய வாசிப்பாளர்களிடையே பூமணியின் நாவல் ஏற்படுத்திய அதே தாக்கத்தை இந்தப் படம் லட்சக்கணக்கான பார்வையாளர்களுக்கு ஏற்படுத்தியிருப்பது பாராட்டி வரவேற்கப்பட வேண்டியது. மேலும் சாதி ஆணவ சக்திகளின் சாதி என்ன என்பதைக் குறிப்பிடாமல் பேசுவது இப்படத்தின் வெற்றிக்கு துணையாக அமைந்திருக்கிறது. கதை நிகழும் கிராமம், வீடுகள், குடிசைகள், காடுகள், காவல்நிலையம், நீதிமன்றம் அனைத்தும் தத்ரூபமாக அமைந்திருப்பது படத்தின் செய்திக்குத் துணையாகிறது.


படம் பார்ப்பவர்கள் மனங்களில் சாதியம் குரூரமானது, சாதிக் கொடுமைகள் நடக்கக்கூடாது, சாதிப்பாகுபாடு ஒழிக்கப்பட வேண்டும், அதற்கு நாமும் ஏதாவது செய்தாக வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுத்தப்படுகிறது. அவ்வகையில் படத்தின் நோக்கம் நிறைவேறியுள்ளது." என குறிப்பிட்டுள்ளார்.