வன்முறையின் பரவசத்தைத் தந்ததா ? ‘சாணிக் காயிதம்’ - திரை விமர்சனம்
வன்முறையின் பரவசத்தை சரியாக அளித்ததா ? சாணிக் காயிதம்.!
முதலில், வன்முறையின் அழகியல் என்றெல்லாம் போட்டுக் குழப்பிக்கொள்ளத் தேவையில்லை. பழிவாங்கும் கதையில் சில கொலைகள் நடக்கிறது. ஒரு கட்டத்தில் கொலைகள் மட்டுமே நடக்கிறது. சாதிய அடக்குமுறை, உச்சக்கட்ட பாலியல் வன்கொடுமை, வர்க்க வேறுபாடுகள், பொருதாளார சிக்கல் என ஒரு சில இடங்களைத் தொட்டுவிட்டு, மீதம் முழுக்க கொலைக்குச் சென்றுவிடுகிறார்கள். அதுவும் எப்படி, வெறுமனே கொலை. கொலை. கொலை. இது எப்படி இருக்கிறதென்றால், கொலையை ரசித்து எடுக்க வேண்டும் என்று இயக்குநர் நினைத்துவிட்டு, அது எந்தவித பிரச்சனையும் ஏற்படுத்தாமல் இருக்க முன்பு சொன்ன சாமாச்சாரங்களை வேண்டுமென்றே வைத்திருப்பது போல் இருக்கிறது.
மேலும் படிக்க | எந்தப் பிரச்னைக்கும் வன்முறை தீர்வாகாது; விழிப்புணர்வுடன் இருங்கள்: ரஜினி அறிவுரை
கீர்த்தி சுரேஷ் மீதும், அவரது குடும்பத்தின் மீதும் நடந்த உச்சக்கட்ட கொடூர வன்முறை மற்றும் பாலியல் ரீதியான தாக்குதலின் கோபம், பார்வையாளர்களாகிய நமக்கும் தொற்றிக்கொண்டுவிடுகிறது. அதனால்தான், அனைவரையும் பழிவாங்குவதற்காக செல்வராகவனும், கீர்த்தி சுரேஷும் கிளம்பும் போது, பார்வையாளர்களாகிய நமக்கும் கிளர்ச்சியைத் தருகிறது. அவர்களின் வன்முறையான எண்ண ஓட்டங்களுடன் நாமும் பயணிக்கிறோம். முதல் நபர், கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவனால் கொடூரமாக கொல்லப்படும்போது, ‘அப்படிப் போட்டுத்தள்ளு’ என்ற வன்முறையின் ப்ளெஷர் நமக்கும் பரவுகிறது. சுப்ரமணியபுரம் படத்தில் கனகுவின் கழுத்தை அறுத்து தலையை மட்டும் கொண்டுவந்து அழகர் உயிரிழந்த இடத்தில் போடும்போது, பரமனுக்கு ஏற்படும் ஆசுவாசம் பார்வையாளர்களாகிய நமக்கும் ஏற்படுகிறது. கழுத்தை அறுக்கும் போது வன்முறையின் பரவசத்தில் ஒட்டுமொத்த தியேட்டரே ஆர்ப்பரிப்பில் கத்தியது நினைவிருக்கலாம். கிட்டத்தட்ட, வன்முறையின் முழு சுகம் அல்லது ப்ளெஷர். இந்த பரவசம், கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் ஆகியோர் செய்யும் முதல் கொலையில் நடக்கிறது. அதற்குப் பிறகு ?. மீதமுள்ளவர்களை இருவரும் தேடிச்சென்று, அதே மாதிரி கொடூரமாக கொல்கிறார்கள். இப்போது நமக்கு ‘ம். போட்டுத்தள்ளு’ என்று அந்தப் பரவசம் கொஞ்சம் குறைந்துவிடுகிறது. அடுத்தடுத்த கொலைகளில் எல்லாம் ‘டக்குனு போட்டுத்தள்ளிட்டு படத்த முடிங்க’ என்ற இடத்துக்கு நம்மை இட்டுச்செல்கிறார் இயக்குநர்.
மேலும் படிக்க | KGF 3 திரைப்பட படபிடிப்பு தொடங்கிவிட்டதா? எகிறும் எதிர்பார்ப்பு
சுருங்கச்சொன்னால், ஒருகட்டத்தில் இந்த ‘வன்முறை’ அலுக்கிறது. அந்த அலுப்பில் இருந்து கொஞ்சம் நம்மை விடுவித்து, கடைசிவரை படத்தை பார்க்க வைப்பதற்கான ஒரு சிறு சுவாரஸ்யத்தை கண்பாரவையற்ற மாற்றுத்திறனாளி சிறுவன் கதாபாத்திரமே தருகிறது. ‘ஆயிரம் பார்வைகள்’ என்ற தலைப்போடு கடைசியில் அவிழ்க்கப்படும் அந்தக் காட்சி அபாரமான இடம். முதல் கொலை நடப்பது வரையிலும், திரைக்கதையை வடிவமைத்த விதத்திலும், வன்முறையை காட்சிப்படுத்திய விதத்திலும் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் அட்டகாசம் செய்திருக்கிறார். அவருக்கு இந்த ‘டார்க்’ ஏரியா நன்றாக வருகிறது. அவரால் நிச்சயம் அற்புதமான ஒரு திரைப்படத்தைக் கொடுக்க முடியும் என்பது பல காட்சிகளில் உணரமுடிகிறது. குறிப்பாக, கீர்த்தி சுரேஷிடம், செல்வராகவன் வந்து தனது கதையை சொல்லும் இடம், அற்புதம்!. சாகும் தருவாயிலும் சாதிய ஆணவத்தைக் குறைத்துக் கொள்ளாமல் வீராப்புடனும், திமிருடனும் மரணிக்கும் வில்லன் கதாபாத்திரங்கள் உண்மைக்கு நெருக்கமானவர்களாக வருகிறார்கள்.
’பொட்டச்சி’ என்று வீராப்பு பேசும் மணி கதாபாத்திரம், ஒருகட்டத்தில் ‘டேய்...டேய்...அந்த குதிரைய (துப்பாக்கி) கொடுத்துட்டுப் போடா’ என்று பயந்து கெஞ்சும் இடம் அதகளம். அதேசமயம், நீதிமன்றத்தில் கீர்த்தி சுரேஷிடம் ஹார்டின் காட்டியபடியே செல்லும் நபரை, கீர்த்தி சுரேஷ் பக்கத்தில் அமர்ந்தபடி திட்டும் பெண் ஒருவர் அசலாக தெரிகிறார். அந்தக் காட்சியை ரசித்துக் கொண்டிருக்கும்போது, பக்கத்தில் கீர்த்தி சுரேஷ் சம்பந்தம் இல்லாம் உட்கார்ந்து கொண்டிருப்பதுபோல் ஒரு பிரமை வந்து போகிறது. ஆனாலும், இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷும், செல்வராகவனும் பல இடங்களில் தங்களது நடிப்பில் அசர வைத்திருக்கிறார்கள்.
மேலும் படிக்க | Top 10: கீர்த்தி சுரேஷ் முதலிடம், லேடி சூப்பர் ஸ்டாருக்கு இடமில்லையா?
ரசனை அடிப்படையில் சொல்வதென்றால், ஒளிப்பதிவாளர் யாமினி யாக்னா மூர்த்திதான் படத்தையே தாங்குகிறார். அட்டகாசமான கலர் வொர்க். அதுவும், வேனை வைத்து அனைவரையும் ஏற்றும் அந்த இருட்டுச் சந்துகளில் மனிதர் விளையாடிருக்கிறார். கரகரவென பி.ஜி.எம் போட்டுச் சாகடிக்காமல், பின்னணி இசையில் சாம் சி.எஸ் கச்சிதமாக வேலை செய்திருப்பது போல் தோன்றுகிறது. எந்த இடத்திலும் பின்னணி இசை உறுத்தவில்லை. பருத்திவீரனில், முத்தழகு பல பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சாகடிக்கப்பட்ட பின்பு, ‘ச்ச. பருத்திவீரனும், முத்தழகும் வாழ்ந்திருக்கலாம்’ என்ற எண்ணம் மேலிட்டதைப் போன்ற எந்தவித உணர்வும், கீர்த்திசுரேஷின் குடும்பத்தின் மீதோ, அவர் மீதோ வரவில்லை. அதை பிற்பாதியில் வரும் அலுக்கும் கொலைகள் மறைத்துவிடுகின்றன. சரி, அந்தக் கொலையாவது நமக்கு ப்ளெஷரைத் தருகிறதா என்றால் அதுவுமில்லை. இந்த இரண்டுக்கும் இடையில் எங்கோ சறுக்கியிருக்கிறது ‘சாணிக் காயிதம்’.!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR