HBD Shankar: பிரம்மாண்டத்தின் காதலன், எந்திர மனிதன், இயக்குனர் ஷங்கரின் பிறந்த நாள் இன்று!!
இந்திய சினிமாவின் `ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்` என்று அன்பாக குறிப்பிடப்படும் இயக்குனர் ஷங்கர் தனது 57 வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார்.
சென்னை: தமிழ் சினிமாவின் ‘எந்திர’ மனிதன், பல திறமைகளைத் தன்னகத்தே கொண்ட உண்மையான ‘இந்தியன்’, ‘அந்நியனாகவும்’ ‘முதல்வனாகவும்’ வந்து மக்கள் மனங்களைக் கொள்ளைக் கொண்ட ‘காதலன்’…. மொத்தத்தில் ஒரு பர்ஃபெட் ‘ஜெண்டில்மேன்’ ஷங்கரின் 57-ஆவது பிறந்த நாள் இன்று.
இந்திய சினிமாவின் 'ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்' என்று அன்பாக குறிப்பிடப்படும் இயக்குனர் ஷங்கர் (Director Shankar) தனது 57 வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார்.
உலகெங்கிலும் உள்ள பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இயக்குனரின் பிறந்த நாளுக்கு அவருகக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.
இந்திய சினிமாவின் (Indian Cinema) மிக பிரம்மாண்டமான, வித்தியாசமான படங்களை எடுக்கும் ஒரு சில இயக்குனர்களின் ஷங்கரும் ஒருவர். இவரது திரைப்படங்களில் இவர் வழங்கும் அற்புதமான காட்சிகள் மற்றும் தொழில்நுட்ப அம்சங்களுக்காக இவர் ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்குடன் ஒப்பிடப்படுகிறார். உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் அவரது படைப்புகளை கொண்டாடுகிறார்கள்.
இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர்களில் ஒருவராகக் கருதப்படும் ஷங்கரின் திரைப்படங்கள் பொதுவாக சமூகப் பிரச்சினைகளைச் சுற்றி எடுக்கப்படுகின்றன. மக்கள் நலனில் அக்கறை காட்டும் கருத்தோடு, விஷுவல் எஃபெக்ட், புரோஸ்தெடிக் ஒப்பனை மற்றும் அதிநவீன தொழில்நுட்பம் ஆகியவை இணையும் போது, அது அந்த படத்தை மிக பிரம்மாண்டமாக்கி விடுகின்றது.
கும்பகோணத்தைச் சேர்ந்த ஷங்கர் முதலில் ஒரு நடிகராக விரும்பினார். ஆனால் இயக்குனர்களான எஸ் ஏ சந்திரசேகர் மற்றும் பவித்ரன் ஆகியோரின் கீழ் பணிபுரிந்த பின்னர் அவரது விருப்பம் மாறியது.
அர்ஜுன், மதுபாலா மற்றும் மறைந்த நடிகர் நம்பியார் ஆகியோர் நடித்த 'ஜென்டில்மேன்' திரைப்படத்தின் மூலம் ஷங்கர் தமிழ் திரைத் துறையில் அறிமுகமானார். முதல் படமே அவருக்கு முத்தாய்ப்பாய் அமைந்தது. லஞ்சம் என்ற நஞ்சினால் சமூகத்தில் விளையும் கொடூரங்களை விளக்கிக்காட்டியது அப்படம். ஒரே படத்தில் ஷங்கர் தன் வருகையை பிரம்மண்டமாய் உலகிற்கு அறிவித்தார்.
அடுத்தடுத்து அவர் எடுத்த அனைத்து படங்களும் பிரம்மாண்ட வெற்றியடைந்தன. ‘அந்நியன்’ படத்தின் மூலம், சமூகத்தில் நடக்கும் அட்டூழியங்களைத் தட்டிக் கேட்டார். எந்திரன்-2-வில் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் ஏற்படும் அபாயங்களை அம்பலப்படுத்தினார். ‘இந்தியன்’ படம் மூலம் நம் அரசாங்க அமைப்பில் உள்ள ஓட்டைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தார், ‘முதல்வன்’ படத்தில் அரசியலை சற்று உரசிப்பார்த்தார்.
‘காதலன்’, ‘பாய்ஸ்’ போன்ற முழு நேர காதல் படங்களிலும் ஷங்கர் பெரும் வெற்றி கண்டார். படங்களை இயக்குவதைத் தவிர பல வெற்றிப்படங்களை தயாரித்துள்ளார் ஷங்கர்.
தற்போது, 1996 ஆம் ஆண்டு வெளியான 'இந்தியன்' படத்தின் தொடர்ச்சியாக "இந்தியன் -2" (Indian-2) படத்தை சங்கர் இயக்குகிறார். இப்படத்தில் உலக நாயகன் கமலஹாசன் மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர், அனிருத் ரவிச்சந்தர் இசை அமைத்திருக்கிறார்.
இத்தனை சாதனைகளை செய்தும் பழகுவதற்கு மிகவும் அமைதியாகவும் ஆர்ப்பாட்டம் இல்லாமலும் இருக்கும் இயக்குனர் ஷங்கர் உண்மையிலேயே தளும்பாத ஒரு நிறை குடம்!!
இன்று பிறந்தநாள் காணும் ‘ஜெண்டில்மேன்’ இயக்குனர் ஷங்கருக்கு நம் வாழ்த்துக்கள்!!
ALSO READ: மிஹீகா பஜாஜை திருமணம் செய்துக் கொண்டார் ராணா டகுபதி