காந்தியவாதியான ஆடுகளம் நரேன் தன் மகனுக்கு காந்தி மகான் (விக்ரம்) என்று பெயர் வைத்து வளர்க்கிறார். அப்பாவின் வளர்ப்பில் காந்தியக் கொள்கைகளை உள்வாங்கும் காந்தி மகான் காமர்ஸ் ஆசிரியராகப் பணியைத் தொடர்கிறார். 40 வயது வரை சிக்கலில்லாமல் வாழ்க்கை சென்றாலும் அந்த அடையாளம் அவருக்குப் பிடிக்காமல் போகிறது. பிடிப்பில்லாத சாதாரண வாழ்க்கையிலிருந்து விட்டு விலக நினைக்கிறார் காந்தி மகான். மனைவியும், மகனும் ஒரு நாள் ஊருக்குச் செல்ல தனக்குச் சுதந்திரம் கிடைத்ததாக மகிழ்ச்சி கொள்கிறார். தனக்குப் பிடித்ததை எல்லாம் செய்கிறார். அப்படி அந்த நாளில் தன் பழைய மாணவரையும், பழைய நண்பனையும் சந்திக்கிறார். அந்தச் சந்திப்பின் ஊடாக நடக்கும் செயல்கள் அவரது ஒட்டுமொத்த வாழ்க்கையையே புரட்டிப்போடுகிறது. மகனை அழைத்துக்கொண்டு மனைவி வடநாட்டுக்குச் சென்றுவிடுகிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | FIR படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!


இதனால் தனித்துவிடப்படும் காந்தி மகான் பழைய நண்பனின் உதவியுடன் வேறு ஒரு வாழ்க்கைக்குள் ஐக்கியமாகிறார். அந்த வாழ்க்கையின் தொழில் போட்டிகள், அடிதடு, வெட்டுக்குத்து ஆகியவை அவரை உச்சத்துக்குக் கொண்டு சென்று வசதிமிகுந்த மனிதராக மாற்றுகிறது. எல்லாம் இருந்தும் தன் மகன் அருகில் இல்லையே என்ற ஏக்கம் காந்தி மகானுக்குள் ஏற்பட, தந்தையாகத் தன் வாழ்க்கை முழுமை பெறவில்லை என்பதை உணர்கிறார். அந்தத் தருணத்தில் ஆபத்துகளின் ஒட்டுமொத்தக் கலவையாக காந்தி மகானின் மகன் தாதாபாய் நௌரோஜி (துருவ் விக்ரம்) வந்து நிற்கிறார். 



காந்தி மகான் ஏன் நேர்மையின் பாதையிலிருந்து விடுபட்டார், அவரால் அவரது நண்பர்களுக்கு நிகழும் பிரச்சினைகள் என்ன, நட்பு - அறம் - பாசம் என்ற மும்முனைப் பிரச்சினைகளில் காந்தி மகான் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார், காந்தி மகானின் மகனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதை துப்பாக்கியும் தோட்டாவுமாக பதில் சொல்கிறது திரைக்கதை. மீண்டும் ஒரு கேங்ஸ்டர் படத்துடன் வந்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். காந்தியவாதி குடும்பத்திலிருந்து வந்த ஒருவர் எப்படி தடம் மாறுகிறார் என்பதைக் கொஞ்சம் தடுமாறி தனது பாணியில் சொல்லியிருக்கிறார். 


விக்ரமுக்கு கம்பேக் படம், கமர்ஷியல் அளவில் முக்கியமான படம் என்றுகூட சொல்லலாம். ஸ்டைலாக நடப்பது, கெத்தாகப் பேசுவது, ஐடியாக்களை உதிர்ப்பது, போதையில் சலம்புவது, மகன் மீதான பாசத்தில் செய்வதறியாமல் திகைப்பது, நட்பா - பாசமா எனத் தவிப்பது என அக்மார்க் நடிப்பை அச்சு பிசகாமல் கொடுத்திருக்கிறார். மகனைத் தூக்கிவிடுவதற்காக அவர் ஸ்கோர் செய்வதற்காக அம்பி மாதிரி தன் கதாபாத்திரத்துக்கு பின்னடைவு ஏற்படுத்திய விதத்தில் மட்டும் சறுக்கல்.



துருவ் விக்ரமின் உடலமைப்பும், தொனியும் கம்பீரத்துக்கான சான்று. ஆனால்,ஆதித்யா வர்மா தாக்கத்திலிருந்து இன்னமும் துருவ் வெளியே வரவில்லை. மனிதர் இன்னும் நடிக்க மெனக்கெட வேண்டும். க்ளோசப் காட்சிகளில் நடிக்கத் திணறுவது அப்பட்டமாகத் தெரிகிறது. கார்த்திக் சுப்புராஜ் படம் என்றாலே பாபி சிம்ஹா தனி டிசைனில் நடிக்கிறார். கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்துக்குரிய பக்குவமான நடிப்பில் மிளிர்கிறார். வேட்டை முத்துக்குமாரின் தேர்ந்த நடிப்பு அட்டகாசம். சிம்ரன் நடிப்பதற்குரிய காட்சிகள் குறைவுதான் என்றாலும் தான் தோன்றும் காட்சிகளில் அசால்ட்டாக ஸ்கோர் செய்கிறார். கஜராஜ், சனந்த், சுபத்ரா ஆகியோர் போகிற போக்கில் கவனிக்க வைக்கிறார்கள். 


காந்தி மகானாக விக்ரம், தாதாபாய் நௌரோஜியாக துருவ், சத்யவானாக பாபி சிம்ஹா, நாச்சியாராக சிம்ரன், ராக்கியாக சனந்த். கதாபாத்திரங்களுக்கு இயக்குநர் தேர்வு செய்திருக்கும் பெயர் குறியீடுகளுடன் உள்ளன. மது வியாபாரத்தில் பாபியும், விக்ரம் உச்சம் தொடும் காட்சிகள் சில சுவாராஸ்யமாக இருந்தாலும் தமிழ் சினிமாவின் கிளிஷேக்களாகவே இருக்கின்றன. லம்பாடி என்று குறிப்பிட்ட சமூக மக்களின் பெயரைக் குறிப்பிட்டுப் பாடல் எழுதியதைத் தவிர்த்திருக்கலாம். ஒடுக்கப்பட்ட மக்களை ஏன் இழிவுபடுத்த வேண்டும்? இயக்குநருக்கு அந்தப் பொறுப்புணர்வு அவசியம். 


மேலும் படிக்க | கார்த்திக் சுப்புராஜ் கதையில் உருவாகும் இயக்குநர் சங்கர் திரைப்படம்


இரண்டாம் பாதியில் துருவ்வும் விக்ரமும் மோதிக்கொள்ளும் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யம் கூட்டியிருக்கலாம். மேலும், பாபிக்கும், தனது மகனுக்கும் இடையில் மாட்டிக்கொள்ளும் விக்ரம், துணை முதலமைச்சரை நேரில் சென்று சந்திக்கும் சிம்ரன், சிம்ரனிடம் துருவ் குறித்துப் பேசும் விக்ரம் என இரண்டாம் பாதியின் உணர்வுப்பூர்வமான காட்சிகளில் தளபதி திரைப்படத்தின் நியாபகம் எட்டிப் பார்ப்பதைத் தவிர்க்க முடியவில்லை. பீமா, அறிந்தும் அறியாமலும், அந்நியன் படங்களின் சாயலும் படத்தில் தெரிகிறது. 


சந்தோஷ் நாராயணனின் இசை, பின்னணி, ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு, விவேக் ஹர்ஷனின் எடிட்டிங் என தொழில்நுட்ப அம்சங்களும், நடிகர்கள் தேர்வும் மிகச்சரியாகக் கைவரப்பெற்றும் திரைக்கதையில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ஏன் கோட்டை விட்டார் என்பதுதான் புரியாத புதிர். மது வீட்டுக்கு நாட்டுக்கு உயிருக்கு கேடு எனப் படம் ஆரம்பிக்கும் முன் போட வேண்டியதை 2.30 மணி நேர சினிமாவாக எடுத்திருக்கிறார்கள். ஊகிக்கக்கூடிய திரைக்கதை, கவனம் ஈர்க்காத வசனங்கள், கார்த்திக் சுப்புராஜ் படத்திற்கென்று இருக்கும் வாழ்க்கை முறை எனப் படம் சில சமயம் சலிப்பைத் தருகிறது.


மேலும் படிக்க | மேலும் படிக்க | மகான் திரைப்படத்தின் மிஸ்ஸிங் மி பாடல்; பாடகரான துருவ் விக்ரம்


தவறு செய்ய அனுமதிக்காத சுதந்திரம் சுதந்திரமே அல்ல என்ற மகாத்மா காந்தியின் வாசகங்களுடன் தொடங்கும் படம் அப்படியே முடிகிறது. கார்த்திக் சுப்புராஜுக்குக் கிடைத்த சுதந்திரத்தை அவரும் கொஞ்சம் எல்லை மீறிய தவறுகளுடன் அனுபவித்து நமக்கும் கொடுத்திருக்கிறார். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்த்தால் மகான் ஒரு முறை ரசிக்க வைப்பார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR