விக்ரம் வேதா படம் எப்படி?- சினிமா விமர்சனம்
படத்தின் தலைப்புக்கு ஏற்றவாறே விக்ரமாதித்யன் - வேதாளம் கதைதான் இப்படம். விக்ரமாதித்யன் வேதாளத்தை தனது பின்புறத்தில் சுமந்துகொண்டு செல்லும்போது வேதாளம் ஒரு புதிர்கதையைச் சொல்லி அதற்கான விடையைக் கேட்கும். சரியான பதில் சொன்னவுடன் வேதாளம் பறந்து சென்றுவிடும்.
மீண்டும் விக்ரமாதித்யன் வேதாளத்தை துரத்திச் சென்று பிடிப்பான். இந்த பாணியை பின்னணியாக வைத்து தான் விக்ரம் வேதா படம் எடுக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் விக்ரம் ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரி அதேசமயம் வேதா என்ற 14 கொலைகளைச் செய்த கேங்ஸ்டர்.
கேங்ஸ்டரராக இருக்கும் வேதா தானாக முன்வந்து விக்ரமிடம் சரணடைவான். வேதா தானாக முன்வந்து சரணடைந்தது ஏன் என்ற கேள்விக்கு பதிலைத் தேட ஆரம்பிக்கிறான் விக்ரம்.
இப்படி பலமுறை விக்ரமின் கையில் சிக்கும் வேதா ஒவ்வொரு முறையும் ஒரு புதிரை முன்வைக்கிறார்.
இப்பட்டின் கதை த்ரில்ளாக எடுக்கப்பட்டுள்ளது. ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரி மற்றும் குற்றக்கும்பல் தலைவன் என்று மிகச் சாதாரணமாகத்தான் துவங்குகிறது படம். ஆனால், சற்றும் அவசரப்படாமல் ரசிகர்களுக்கு அழகாக உணர்த்தும் கதையாக இருக்கிறது இந்தப் படம். கடைசிக் காட்சி வரைக்கும் இந்த ஆச்சரியத்தைத் தக்கவைத்து இருக்கிறார்கள்.
நேர்மையான போலீஸ் மாதவன் வடசென்னையின் தாதாயிசத்தைக் கட்டுக்குள் கொண்டுவர, தாதா விஜய் சேதுபதியின் கேங்கை சுற்றி வளைப்பதில் ஆரம்பிக்கிறது கதை. தானாக சரண்டராகும் விஜய் சேதுபதி, மாதவனுக்கு ஒரு கதை சொல்கிறார். அங்கே ஆரம்பித்து ஒவ்வொரு முறை மாட்டும்போதும் கதை சொல்வதும், அந்தக் கதையின் முடிச்சை அவிழ்க்க மாதவன் முயலும்போது அவருக்கு வேறு சில கேள்விகளுக்கு பதில் கிடைப்பதுமாகச் செல்கிறது திரைக்கதை. இறுதியில் ஒவ்வொரு கேள்விக்கும் புதிர் தேடும் விக்ரம் வேதாவைப் பிடிக்கிறாரா? என்பதே கதை!
வழக்கமான திருடன் போலீஸ் கதை இல்லாமல் வித்தியாசமான முறையில் புஷ்கர் - காயத்ரிக்கு சபாஷ் போட வைக்கிறது.
ஒவ்வொரு முறை வேதாளமான விஜய் சேதுபதி விக்கிரமான மாதவனிடம் மாட்டிக்கொள்வதும் பின்னர் விக்ரமுக்கு வேதா கதை சொல்வதும் அதற்கு விடை சொல்லும்போதே வேறு பல விடைகள் மாதவனுக்குக் கிடைப்பதுமாய் கொளுத்துகிறது கதை.
படத்தில் பெண் பாத்திரங்களாக வரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி சரத்குமார் ஆகியோரின் பாத்திரங்கள் சவாலானவையல்ல. தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். திரைக்கதைக்கு அடுத்தபடியாக இந்தப் படத்தின் ஒளிப்பதிவும் பின்னணி இசையும். சாமின் பின்னணி இசை, படத்தின் தரத்தை பல மடங்கு உயர்த்துகிறது.
மொத்தத்தில் "விக்ரம் - வேதா" படம் ஒரு நல்ல திரைப்படத்தைப் பார்த்த உணர்வை அளிக்கிறது.