யுவராஜ் தயாளன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த், ஸ்ரீ உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள படம், ‘இறுகப்பற்று’. இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் டீசர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றிருந்தது. படம், வரும் 5ஆம் தேதி வெளியாகிறது. பத்திரிக்கையாளர்களுக்கான ஸ்பெஷல் ஸ்க்ரீனிங் நடந்தது. Spoiler ஆக வேண்டாம் என்று விரும்புபவர்கள், கடைசி லைனை மட்டும் படிக்கவும்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதாங்க கதை..


“கல்யாணம்-காதல் உறவுன்னா ஆயிரம் பிரச்சனை வரத்தான் செய்யும், அதை தாண்டி லவ் ஜெயிக்கிதா இல்லையா, அதுதான் மேட்டர்” இந்த சுருக்கமான கருத்தை இரண்டரை மணி நேர படமாக ரசிகர்களுக்கு புரிய வைத்திருக்கிறார் இயக்குநர். இறுதியில் இறுக்கையை விட்டு எழுந்து செல்ல முடியாத அளவிற்கு ரசிகர்களின் வாழ்வுடன் தன் படத்தையும் இணைத்துவிட்டார். இறுகப்பற்று கதையின் முழு கதை என்ன? விரிவாக பார்ப்போம். 


“எதற்கெடுத்தாலும் சண்டை, முன்பு போல் காதல் இல்லை” போன்ற பல பிரச்சனைகளுடன் தன்னிடம் வந்து நிற்பவர்களுக்கு ‘Couples Therapy’ கொடுக்கிறார் மித்ரா (ஷ்ரத்தா). இவரிடம் தெரபிக்கு வரும் ஒரு ஜோடி, அர்ஜூன்-திவ்யா. காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்குள் இப்போது காதல் இல்லை. அது ஏன்? எதனால் அவர்களின் உறவுக்குள் பிளவு என்பதை புரிய வைக்க முயற்சிக்கிறார் மித்ரா. இருப்பினும் இவர்களுக்குள் இருக்கும் விவாதங்கள் விவாகரத்து வரை செல்கிறது. மித்ராவிடம் வரும் இன்னொரு ஜோடி, ரங்கேஷ்-பவித்ரா. குழந்தை பிறந்த பிறகு பவித்ரா வெயிட் போட்டதால் ரங்கேஷ், பவித்ராவை பிடிக்கவில்லை என்கிறார், விவாகரத்தும் கேட்கிறார். இந்த இரு ஜோடிகளின் வாழ்வை நினைத்து குழம்பும் மித்ரா, இது போன்ற சண்டை தன் வாழ்விலும் வந்து விட கூடாது என தன் கணவர் மனோவிடம் (விக்ரம் பிரபு) சண்டையே போடாமல் வாழ்கிறார். இதனால் இவரது வாழ்விலும் புயலடிக்கிறது. இறுதியில் என்ன ஆனது? பிரிந்தவர்கள் சேர்ந்தார்களா? தொலைந்த காதலை மீண்டும் கையில் பிடித்தார்களா? என்பதே மீதி கதை. 


காதலை கற்பிக்கும் படம்..! 


நவீன கால உலகில், திருமண உறவில் இருப்போர், மனதிற்குள் இருக்கும் காதலை எந்த அளவிற்கு வெளிப்படுத்தாமல் இருக்கிறார்கள் என்பதை அப்பட்டமாக காண்பித்திருக்கிறார் இயக்குநர். இதனால் ஏற்படும் விளைவுகள், விரிசல்கள் என அனைத்தையும் அக்கு வேறு ஆணி வேறாய் திரையில் பார்க்கும் ரசிகர்கள் கொஞ்சம் வாயடைத்துதான் போகின்றனர். 


தனது அன்புக்குரியவர் செய்யும் சின்ன சின்ன செயல்களும் அவர்களை சார்ந்த இன்னொருவருக்கு எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும், இதனால் அந்த உறவுக்குள் என்ன நடக்கும் என்பதை ரசிகர்களுக்கு எடுத்துரைத்திருக்கும் திரைக்கதைக்கு ஆயிரம் பாராட்டுகள். 


மேலும் படிக்க | Pass மார்க் வாங்கியதா ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம்..? ட்விட்டர் விமர்சனம் இதோ..!



அளவான நடிப்பு..அம்சமான கதாப்பாத்திரங்கள்..


படம் நன்றாக வந்திருப்பதற்கு முதல் காரணம் கதை என்றால் அடுத்த காரணம், காட்சியமைப்புகளும் கதாப்பாத்திரங்களின் இயல்பான நடிப்பும்தான். தெரபி கொடுப்பவராக அந்த மனோதத்துவ நிபுணர் பாத்திரத்தில் பொருந்தி போகிறார், ஷ்ரத்தா. விக்ரம் பிரபுவிற்கு பெரிதாக வேலை இல்லை என்றாலும், கொடுத்த வேலையை செவ்வனே செய்து கொடுத்திருக்கிறார். ஈகோ பிடித்த கணவராக ஸ்ரீ, அவரது பாவமான மனைவியாக சானியா ஐப்பன், அற்புதமான தேர்வு. 


சமூகத்தில் அடிக்கடி நாம் கடந்து செல்லும் சாமானியனாகவும், சபலப்பட்ட கணவனாகவும் வருகிறார் விதார்த். இவரது மனைவியாக பவித்ரா கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பவருக்கு தனி பாராட்டுகள். படம் இந்த மூன்று ஜோடியை சுற்றி மட்டுமே சுற்றினாலும், “அடுத்தது என்ன..” என்ற ஆர்வத்துடனேயே படத்தை பார்க்கின்றனர் ரசிகர்கள். 


கொஞ்சம் நீ….ளம்


இறுகப்பற்று படத்தின் முதல் பாதி, “கல்யாணமே வேண்டாம் சாமி..” என யோசிக்க வைத்தாலும், இடைவேளைக்கு பிறகான காட்சிகள் “அடடா..கல்யாணம் பண்ணிக்கிட்டு ஜாலியா சண்டை போடலாம் போலிருக்கே..” என்ற எண்ணத்தை மனதில் விதைக்கிறது. 


படம் முழுவதும் பல டைலாக்குகள், அதில் சில வசனங்கள் ரசிகர்களின் மனதை தொட, ஒரு சில வசனங்கள் சொன்னதையே திரும்ப சொன்னது போன்ற உணர்வினை தருகின்றன. இந்த அதிகமான வசன காட்சிகளாலேயே பலர், திரையை விட்டு திரும்பி திரும்பி பார்க்கும் நிலை. க்ளைமேக்ஸில் வரும் சில ஸ்லோ மோஷன் காட்சிகளை கொஞ்சம் கத்தரித்து இருக்கலாம். பாடல்கள் பெரிதாக மனதில் ஒட்டாதது சிறிதளவு ஏமாற்றத்தை தருகிறது. மற்றபடி, குறை என்று கூறும் படி படத்தில் ஒன்றுமில்லை. 


மொத்தத்தில் சொல்ல வந்ததை சுருங்க சொல்லி, ரசிகர்களின் மனங்களில் “காதலிப்பவர்களை இறுகப்பற்றிக்கொள்ளுங்கள்” என்ற கருத்துடன் நிறைவடைகிறது திரைப்படம். இந்த படத்தினால் பிளவு பட இருக்கும் பல காதல்களும் திருமணங்களும் இணைவது உறுதி. நல்ல feel good படம் பார்க்க நினைப்பவர்கள், இப்படத்தை கண்டிப்பாக திரையரங்கிற்கு சென்று பார்க்கவும். 


மேலும் படிக்க | Chandramukhi 2 Review: சந்திரமுகி 2 படம் எப்படி இருக்கு? முதல் விமர்சனம் இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ