அனைவருக்கும் உதவுங்கள்.. `அறிவும் அன்பும்` பாடலை கமல்ஹாசன் வெளியீடு!!
அறிவும் அன்பும் என்ற தலைப்பில் லாக்டவுன் நேரத்தில் உதவி செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் பாடல் இன்று வெளியிடப்பட்டது.
கொரோனா வைரஸ் தொற்றுநோய் இந்தியத் திரையுலகில் படங்களின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியுள்ள நிலையில், பல கொரோனா விழிப்புணர்வு வீடியோக்கள் தற்போது செய்திதாள்களை நிறைத்துள்ளன.
கொரோனா முழு அடைப்பு காலத்தில் மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி நடிகர், நடிகைகள் மற்றும் திரை துறை பிரபலங்கள் வீடியோக்கள் வாயிலாக வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் அனைவரையும் வீட்டில் தங்குமாறு கேட்டு வீடியோ செய்தியை வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் அனைவரிடமும் அன்பு செலுத்தி உதவி தேவையானவர்களுக்கு நம்மால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஒரு பாடலை எழுதியுள்ளார். இந்த பாடல் இன்று வெளியிடப்பட்டது. இதற்கு இசையமைத்தவர் M.ஜிப்ரான், படத்தொகுப்பு செய்தவர் மஹேஷ் நாராயணன்.
இசையமைப்பாளர்களான அனிருத், யுவன் சங்கர் ராஜா மற்றும் தேவி ஸ்ரீ பிரசாத், பாடகர்களான பம்பாய் ஜெயஸ்ரீ, சித் ஸ்ரீராம் மற்றும் ஷங்கர் மகாதேவன், நடிகர் சித்தார்த், பிக் பாஸ் புகழ் முகின் ராவ் மற்றும் ஸ்ருதி ஹாசன் ஆகியோர் இந்த பாடலின் ஒரு பகுதியாக உள்ளனர்.
டெல்லியில் மக்களை கும்பலாக நிற்கவைத்து அவர்கள் மீது கிருமிநாசினி பீய்ச்சி அடித்தது முதல் குழந்தைகளை சுமந்து கொண்டு சொந்த ஊர்களுக்கு நடைபயணம் மேற்கொண்டது வரை மனதை உலுக்கும் காட்சிகள் இப்பாடலில் இடம்பெற்றுள்ளன. கமல்ஹாசனின் வரிகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளன. இப்பாடலை அவரது ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர்.