வடமாநில நபர்கள் குழந்தைகளை கடத்திச் செல்வதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வருகிறது. இந்த வதந்தி காரணமாக அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சில நாட்களுக்கு முன்னர் குடியாத்தம் பகுதியில் வடமாநில வாலிபர் அடித்து கொல்லப்பட்டார். செய்யாறு பகுதியில் திருடன் என நினைத்து சதாசிவம் என்ற மாணவர் கல்வீசி கொல்லப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே குலதெய்வ கோவிலுக்கு காரில் சென்ற 5 பேரை குழந்தை கடத்தல்காரர்கள் என நினைத்து கிராம மக்கள் கொடூரமாக தாக்கியதில் ருக்மணி (வயது 65) என்ற மூதாட்டி இறந்துவிட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதனால், குழந்தை கடத்தல் பற்றி வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்பினால் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை எச்சரித்துள்ளது.


இந்நிலையில், இந்த வதந்தி குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:-


"வதந்திகள் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடியவையாக இருப்பது கவலையளிக்கிறது. மக்கள் விழிப்புடன் இருப்பதோடு பொறுப்புடன் இருப்பதும் முக்கியம். சட்டத்தை கைகளில் எடுத்துக்கொண்டு செயல்படுவது பொறுப்புள்ள குடிமக்களின் அடையாளமன்று. காவல்துறையிடம் தெரிவிப்பதே நமது பொறுப்பும் கடமையும் ஆகும்".