தமிழ் ரசிகர்கள் மனதில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் படம் தான் கங்குவா. நடிகர் சூர்யா நடிப்பில், ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் இப்படம் உருவாகி உள்ளது. பல்வேறு ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்ட போதிலும், இன்று நவம்பர் 14ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. கடைசியாக 2022ம் “எதற்கும் துணிந்தவன்” படத்திற்குப் பிறகு சூர்யாவிற்கு எந்த படமும் திரையரங்குகளில் வெளியாகவில்லை. அதன் காரணமாக கங்குவா படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு கிளம்பியது. இப்படத்தில் இருந்து வெளியான டீசர், டிரெய்லர்கள் ரசிகர்களை குஷி படுத்தியது. குறிப்பாக சூர்யா தோற்றம் படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஒரு பீரியட் படமாக கங்குவா படத்தை எடுத்துள்ளார் சிறுத்தை சிவா.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | “கங்குவா படத்தில் குறையே இல்லை!” படம் பார்த்தவர் சொன்ன விமர்சனம்!


சூர்யா மாடர்ன் கதாபாத்திரத்திலும், போர் வீரன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். தமிழின் முதல் பான் இந்திய முயற்சியாக இப்படம் உருவாகியுள்ளது என்று படக்குழு புரமோஷன் செய்தது. அனிமல் படத்தின் வெற்றிக்குப் பிறகு பாபி தியோல் இந்த படத்தில் நடித்துள்ளார். மேலும் திஷா பட்டானி, நட்டி நடராஜ், கோவை சரளா, கே.எஸ். ரவிக்குமார், போஸ் வெங்கட், கருணாஸ், பிரேம் குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். கங்குவா படம் உலகமெங்கும் 10500- 11500 திரையரங்குகளில் வெளியாகி உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகள் உருவாகி உள்ளது கங்குவா. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.



1070 மற்றும் 2024 என இரண்டு காலகட்டங்களில் படம் நடக்கிறது. 2024ல் நடக்கும் கதையில் ஒரு ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து சிறுவன் தப்பித்து நேராக கோவாவில் இருக்கும் சூர்யாவை தேடி செல்கிறான். மாவீரன் படத்தில் வருவது போல அந்த சிறுவனை பார்க்கும் போதெல்லாம் சூர்யாவிற்கு பழங்காலத்தில் நடப்பது நினைவிற்கு வருகிறது. மறுபுறம் 1070ல் நடக்கும் கதையில் ஐந்தீவு என்ற இடத்தில் பெருமாச்சி, அரக்கி என 5 இன மக்கள் வாழ்ந்து வருகின்றார். அந்த இடத்தை பிடிக்க வரும் வெள்ளைக்காரர்களால் இவர்களுக்குள் பிரச்சனை ஏற்படுகிறது, இறுதியில் அது போராக மாறுகிறது. பெருமாச்சி தீவிற்கு தலைவனாக இருக்கும் கங்குவா என்ற சூர்யா இந்த போரில் இருந்து தனது மக்களை காப்பாற்றினாரா இல்லையா? இந்த கதைக்கும் நிகழ்காலத்திற்கும் என்ன தொடர்பு என்பதே கங்குவா முதல் பாகத்தின் கதை. 


கங்குவா படத்தை சூர்யா தனி ஒரு ஆளாக தூக்கி நிற்கிறார். நிகழ்காலத்தில் நடக்கும் கதையிலும், பழங்குடி வீரராகவும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இரண்டு கதைகளிலும் அவரது லுக் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. போர் சம்பந்தப்பட்ட காட்சிகளில் எழுந்து நின்று கைதட்டும் அளவிற்கு நன்றாக நடித்துள்ளார். இந்த படத்திற்கான அவரது கடின உழைப்பு திரையில் நன்றாக தெரிகிறது. படம் முழுக்க சூர்யாவுடன் நடித்திருக்கும் சிறுவனும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இவர்களை தவிர வேறு யாருடைய நடிப்பும் பெரிதாக சொல்லும் அளவிற்கு இல்லை. காரணம் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் போடப்பட்டுள்ள மேக்கப்பால் அவர்கள் யார் என்று அடையாளம் கண்டுபிடிக்கவே நேரம் எடுக்கிறது. உத்திரன் என்ற கதாபாத்திரத்தில் பாபி தியோல் மட்டும் கொஞ்சம் தனியாக தெரிகிறார். திஷா பட்டானி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி வரும் காட்சிகள் ஏமாற்றம் அளிக்கிறது. 


இப்படி ஒரு கதையை படமாக்க நினைத்ததற்கு இயக்குனர் சிறுத்தை சிவாவிற்கு தனி பாராட்டுக்கள். முழுக்க முழுக்க சிஜியை நம்பி மட்டுமே படம் உருவாகியுள்ளது, மேலும் 3d-யிலும் படத்தை மாற்றி உள்ளனர்.  ஒரு சில இடங்களில் 3d நன்றாகவே ஒர்க் ஆகி இருந்தது. இடைவெளிக்கு முன்பு வரும் சண்டைக்காட்சியும்,  கடைசி 20 நிமிடங்கள் நடக்கும் சண்டை காட்சியும் சிறப்பாக எடுக்கப்பட்டது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் தலைவனே பாடல் மட்டும் கேட்கும்படி இருந்தது. படத்தின் தொடக்கத்தில் நிகழ்காலத்தில் நடக்கும் காட்சிகள் எதுவுமே நம்பும்படியாக எடுக்கவில்லை, அங்கிருந்தே படம் நமக்கு ஒட்டாமல் இருக்கிறது. இதன் காரணமாக எந்த ஒரு கதாபாத்திரத்துடனும் நம்மால் கனெக்ட் ஆக முடியவில்லை. படம் முழுக்க நிறைய எமோஷனல் காட்சிகள் இருந்த போதிலும் அது எதுவுமே படம் பார்க்கும் நமக்கு ஒட்டவில்லை. இதுவே படத்தின் மிகப்பெரிய பிரச்சனையாக அமைகிறது. படத்தின் நீளமும் ஒரு பெரிய குறையாகவே உள்ளது.  சண்டை காட்சிகளை இன்னும் கொஞ்சம் கட் செய்து இருக்கலாம். மொத்தத்தில் கங்குவா திரையரங்கில் ரசிப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள மற்றும் ஒரு படம்.


மேலும் படிக்க | ‘‘கங்குவா படத்தைப் பார்த்தால் மிரண்டு போவீர்கள்’’- சூர்யா


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ