`லட்சுமி`: பல எதிர்மறை, சில நேர்மறை!
மூன்று நாட்களாக இணையத்தில் `லட்சுமி` குறும்படம் பற்றி பல எதிர்மறையான, சில நேர்மறையான பதிவுகளையும் பார்க்க நேர்ந்தது. பெரும்பாலும் திட்டித்தீர்த்துக் கொண்டிருந்தார்கள்...
மூன்று நாட்களாக இணையத்தில் "லட்சுமி" குறும்படம் பற்றி பல எதிர்மறையான, சில நேர்மறையான பதிவுகளையும் பார்க்க நேர்ந்தது. பெரும்பாலும் திட்டித்தீர்த்துக் கொண்டிருந்தார்கள்...
அப்படி என்னதான் அந்த குறும்படத்தில் உள்ளது என்பதை தெரிந்து கொள்வதற்காக "லட்சுமி" குறும்படத்தை பார்த்தேன்... முதலில் இப்படியான கதைக்களத்தையும், கதை மாந்தர்களையும் தேர்ந்தெடுத்ததற்கு இயக்குனருக்கு பாராட்டுகள். குறும்படத்தின் மிகப்பெரிய பிழையாக எனக்குத் தோன்றியது ஒன்றே ஒன்று தான் அது "நம்பகத்தன்மை" இல்லாமலிருப்பது.
காட்சிகளின் வழியே லட்சுமியின் மன ஓட்டத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது ஆனால் கதிருக்கும், லட்சுமி 'க்கும் ஏற்படும் திடீர்(!) சந்திப்பும், அதன் பிறகு அவள் அவனுடன் சென்று அந்த இரவே உடலுறவில் ஈடுபடுவது என்பது நம்பும்படியாக இல்லை.
ஆனால்.,பல இடங்களில் வசனங்களும், காட்சிகளும் அருமையாக இருந்தது... உதாரணமாக, கணவனுடன் லட்சுமி உடலுறவில் ஈடுபடும் போது, அவன் மட்டும் திருப்தி அடைகிறான் அவள் திருப்தி அடையவில்லை என்று அந்த பெண்ணின் முகபாவனை வழியாக சொல்லியிருப்பது. அந்த பெண் அவ்வளவு எதார்த்தமாக நடித்துள்ளார், படம் நெடுக அவரின் முகம் ஒரு வித இறுக்கத்துடனேயே இருப்பது, கதிரை ரயிலில் பார்க்கும் போது அவளின் முகம் ஒரு வித மகிழ்ச்சியை வெளிப்டுத்தும் இடம், கதிருடன் உடலுறவில் ஈடுபட்டு முடிந்தவுடன் அவள் அதுவரை இல்லாத ஒரு புன்முறுவலோடு திரும்பி பார்க்கிற இடம், "பஸ், ட்ரெயின் எதுவும் இல்லீங்க, அம்மா வீட்ல தங்கிட்டு வர்ரேன்" என கணவனிடம் சொல்லும் போது, அவன் உடனே "அதுக்கு இப்ப என்ன பண்ண சொல்ற., நாளைக்கு பிரேக்பாஸ்ட் 'க்கு என்ன பண்றது" என கேட்டவுடன் அவள் முகத்தில் வெளிப்படும் கோப உணர்வு ... என வாய்ப்பே இல்லை அவ்வளவு நேர்த்தியான நடிப்பு... ஏறக்குறைய 18 நிமிடங்கள் ஓடக்கூடிய குறும்படத்தில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பிரதான பிரச்சனையை விவாதித்துள்ளார் இயக்குனர்.
கணவனும் மனைவியும் இணைந்து பார்க்க வேண்டும்... கணவன் தன் மனைவியின் அனைத்து விதமான உணர்வுகளையும் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்... கணவன்கள் முதலில் தன் மனைவியை வெளிப்படையாக பேச அனுமதிக்க வேண்டும், அப்போது தான் உரையாடல் தொடங்கும். அந்த உரையாடல்கள் மூலமாக தான் பெண்ணின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியும். அதை விடுத்து வேண்டா வெறுப்புக்கு புள்ளைய பெத்து காண்டமிருகம்'னு பேரு வச்ச கதையா கணவன்கள் இருக்க கூடாது.
உடலுறவிற்காக தான் லட்சுமி கதாபாத்திரம் கதிரை நாடுகிறது போன்ற விமர்சனங்கள் வைக்கப்படுகிறது, ஆனால் எனக்கு அப்படி தெரியவில்லை, அப்படி புரிந்து கொள்ளவும் கூடாது என்பது என் வாதம். காரணம், உடலுறவையும் தாண்டி அந்த பெண் எதிர்பார்ப்பது ஒரு ஆறுதலான உணர்வு, தன் வாழ்க்கையில் ஏற்பட்ட பிடிப்பற்ற தன்மையில் இருந்து விடுபட மாட்டோமா என்கிற தவிப்பு. படம் நெடுக்க அந்த பெண் அந்த உணர்வுகளோடு தான் பயணிக்கிறாள்.
விவாதத்தை கிளப்பிய வகையில் "லட்சுமி" குறும்படம் என்னை கவர்ந்துள்ளது...
நன்றி: Vetridam வலைக்காட்சி