இசை குயின் `லதா மங்கேஷ்கர்` பிறந்தநாள் இன்று!!
இந்திய இசைக்குயில் எனப் போற்றப்படுபவரும் பாரத ரத்னா விருது பெற்றவருமான லதா மங்கேஷ்கர் பிறந்த தினம் இன்று.
மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் 1929-ம் வருடம் பிறந்தார் லதா மங்கேஷ்கர். தந்தை, இந்துஸ்தானி சங்கீத மேதை மற்றும் நாடக நடிகர்.
தந்தையின் மேடை நாடகங்களில் நடித்தார். இனிய குரலில் பாடி அனைவரையும் அசத்தினார். அமனந்தன்கான் சாகேப்பிடம் லதா, முறையாக சங்கீதம் கற்றார்.
இவரது பதிமூன்றாவது வயதில் அவர் தனது தந்தையை இறந்தார். வருமானம் ஈட்டுவதற்காக திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். நடிப்பதோடு அவர் பாடவும் செய்தார்.
1942-ம் ஆண்டு ‘கிதி ஹசால்’ என்ற மராத்திப் பாடலை முதன் முதலாகப் பாடினார். 1948-ம் ஆண்டு இவர் பாடிய ‘மஜ்பூர்’ திரைப்படம்தான் இவருக்குத் தொடர்ந்து ‘பர்சாத்’, ‘அந்தாஸ்’, ‘துலாரி’, ‘மகால்’ உள்ளிட்ட படங்களில் பாட வாய்ப்புகளைத் தந்தது. ‘ஆயகா ஆயகா ஆனேவாலா’ பாடல் இவருக்குப் பின்னணி உலகின் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்று தந்தது.
இவர் அனில் பிஸ்வாஸ், ஷங்கர் ஜெய்கிஷண், நவ்ஷாத், எஸ்.டி.பர்மன், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் என ஏறக்குறைய அனைத்து முன்னணி இசையமைப்பாளர்கள் இசையிலும் பாடியுள்ளார்.
மெலடி குயின் எனப் போற்றவர் லதா மங்கேஷ்கர். திரைப்பட உலகில் நீண்டகாலம் முடிசூடா ராணியாக வலம் வந்தார்.
மராத்தி, குஜராத்தி, வங்காளி, பஞ்சாபி, அசாமி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் இவர் பாடியுள்ளார்.
உலகளவில் அதிகமான பாடல்களைப் பாடி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றவர் இவர். ‘ஆஜா ரே பரதேசி’, ‘கஹி தீப் ஜலே கஹி தீல்’, ‘ப்யார் கியா தோ’, ‘தியா ஜலே, குச் நா கஹோ’ உள்ளிட்ட ஏராளமான காலத்தால் அழியாத பாடல்களைப் பாடியுள்ளார்.
1989-ம் ஆண்டு தாதாசாகேப் பால்கே விருது, சிறந்த பாடகிக்கான தேசிய விருதுகள், பலமுறை ஃபிலிம் ஃபேர் விருதுகள், வாழ்நாள் சாதனையாளருக்கான விருதுகள், ராஜீவ் காந்தி விருது, பத்ம விபூஷண், சிறந்த பாடகிக்கான மில்லேனியம் விருது, நூர்ஜஹான் விருது, மகாராஷ்டிரா ரத்னா விருதுகளைப் பெற்றார். 2001-ம் ஆண்டு இவருக்கு ‘பாரத் ரத்னா’ விருது வழங்கப்பட்டது.
மீரா பஜன்கள், பகவத் கீதை ஸ்லோகங்கள், கபீரின் தோஹாக்கள், சூர்தாசின் கவிதைகள், சூஃபி பாடல்களையும், ‘வந்தே மாதரம்’, ‘சாரே ஜாஹான் சே அச்சா’, ‘யே மேரே வதன் கே லோகோ’ உள்ளிட்ட ஏராளமான தேசபக்திப் பாடல்களையும் பாடியுள்ளார்.
தமிழில் பல பாடல்களை பாடியுள்ள லதா மங்கேஷ்கர், சத்யா படத்தில் "வளையோசை கலகலவென", பாடலை பாடியுள்ளார்.
1000-க்கும் அதிகமான ஹிந்தி திரைப்படங்களில் பாடி சாதனை படைத்துள்ளார். சமூக அக்கறை கொண்ட இவர், ‘லதா ஃபவுண்டேஷன்’ என்ற அமைப்பை நிறுவி, பல நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்.
அமெரிக்க பல்கலைக்கழகம் உட்பட ஆறு பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டங்கள் வழங்கியுள்ளன.
லதா மங்கேஷ்கரின் வயது 88 இருக்கலாம். ஆனால், அவரின் பாடல்களுக்கு என்றும் 16 வயது தான்.