இன்று நா.முத்துக்குமார் பிறந்த நாள். அவரது ரசிகர்கள் வாட்ஸ்அப்பில் அவரது பாடல்களையும் ,கவிதைகளையும் எழுதி நினைவுகூர்ந்து வருகின்றனர். முத்துக்குமாரைப் பற்றி எத்தனைத்தான் பேசுவது. கடல் போல் கிடக்கும் அவரது வரிகளில் இருந்து கையளவு மொண்டு சில வரிகளை அசைபோடுவதைத் தவிர வேறு என்ன இருந்துவிடப்போகிறது. ஓர் பிறந்த நாளில், ஒரு கலைஞனுக்கு நாம் செலுத்தும் வாழ்த்தல்லவா ; அஞ்சலியல்லவா அது.! சொற்களால் ஆனவனுக்கு சொற்கள்தானே ஆறுதல் ; சொற்கள்தானே சுகம் ; சொற்கள்தானே எல்லாம்.!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | தத்துவங்களால் வாழ்ந்து கொண்டிருப்பார் கருணாநிதி -வைரமுத்து


பித்துப்பிடித்த சில வரிகளை நா.முத்துக்குமார் எழுதிப் பார்த்திருக்கிறார். பரவலாக அவரது காதல் பாடல்களும், கதாநாயகன் துவக்கப் பாடல்களுமே கவனம் பெற்ற நிலையில், தத்துவார்த்தமாகவும், பித்த நிலைக் காணும் சில வரிகளையும் மெயின்ஸ்ட்ரீம் தளத்தில் முடிந்தவரை எழுதியிருக்கிறார் நா.முத்துக்குமார். 


நவநாகரிக மனிதனை, ஆதிச்சமூகத்தில் வாழ்ந்த மனிதனோடு தனது வரிகள் மூலம் நெடும் மேம்பாலத்தைக் கட்டி அழைத்துச்செல்லும் மாபெரும் சொற்களை மிக அநாவசியாக தூக்கி வீசியிருக்கிறார் முத்துக்குமார். கிட்டத்தட்ட ‘சித்தன் போக்கு சிவன் போக்கு’ என்ற மனநிலையை பல வண்ணங்களையிட்டு மாற்றி மாற்றி எழுதியிருக்கிறார். இந்த வாழ்வு ஒன்றுமேயில்லை என்பதற்குச் சான்றாக எத்தனை வரிகள், அவரது பாடல்களுக்குள் சொருகிக் கிடக்கிறது. 



நா.முத்துக்குமாருக்கு ‘காடு’ எப்போதும் திறந்திருக்கும் வாசல். திடீரென காட்டிற்குள் புகுந்து சகட்டுமேனிக்கு ஒரு உலாச் சென்றுவிட்டு அதிலிருந்து அற்புதமான வரிகளைக் கொண்டு வரும் வேட்டைக்காரன். காட்டைப் பல படிமங்களாக கவிதைகளில் முயன்று பார்த்தாலும், பாடல்களில் மிக எளிமையான மொழியில் அந்த உணர்வுகளை அடக்க அவருக்கு கைவந்திருக்கிறது. இல்லையெனில், தனிமையின் கோரமுகத்தை ‘காட்டிலே காயும் நிலவு...கண்டுகொள்ள யாருமில்லை’ என்று எழுதிவிட முடியாது. 


பிறப்பும், இறப்பும் இயற்கையின் மாபெரும் கொடையாக இருந்துவிட்ட நிலையில், அதுதொடர்பான பித்துப்பிடித்த வரிகளை பெரும்பாலும் காட்டில் இருந்தே அவர் எடுத்துக்கொண்டு வருகிறார். அந்தக் கும்மிருட்டின் மையைத் தொட்டே தனக்கான வரிகளை முத்துக்குமார் உருவாக்கியுள்ளார். புதுப்பேட்டையில் வரும் ‘ஒரே நாளில் வாழ்க்கை இங்கு எங்கும் ஓடிப்போகாது’ என்ற பாடலில் தெரியும் நா.முத்துக்குமாரைவிட, இயக்குநர் பாலாவின் ‘அவன் இவன்’ படத்தில் திரையில் வராத ‘அவனப்பத்தி நான் பாடப்போறன்’ என்ற பாடலில் தெரியும் நா.முத்துக்குமார் கொஞ்சம் தூக்கலானவர். அந்தப் பாடலில் இருந்து சில வரிகள்,


‘காட்டுக் குகையில் நாம் வாழ்ந்த காலம்
நெஞ்சில் இருந்து தீப்பந்தம் தான் ஏந்தி
எப்போதும் தணியாமல் துரத்துதுங்க!’


துணைவேந்தர்கள் யாராவது, இந்தப் பாடலை வைத்தே ஓர் மீளாய்வு செய்யும் அளவுக்கு ஆழ்ந்த தத்துவப் பார்வைக் கொண்டிருக்கிறது. 


மேலும் படிக்க | நா. முத்துக்குமார் - மழை நின்ற பிறகும் தூறிக்கொண்டிருப்பவர்


யுவனின் இசையும், நா.முத்துக்குமாரின் வரிகளும் ஒருவித கலவையில் சங்கமித்து,  இடுகாட்டில் பாடும் பட்டினத்தாரின் வாடை வீசும் அளவுக்கு வீரியமடைகின்றன. அதே பாடல்களில் வரும் அடுத்தடுத்த வரிகளைக் கவனியுங்களேன். 


‘உதிரம் உள்ளேதான் உள்ளதென்ன
வலியிருக்கும் பழியிருக்கும்
வெறியிருக்கும் 
அட வேட்டைக் குணமிருக்கும்
களவுயிருக்கும் 
உலவிருக்கும்
கொலையிருக்கும் 
கொஞ்சம் கருணையும் இருக்கும்’



வாழ்க்கையின் மீதும், நாம் ஏற்படுத்தி வைத்திருக்கும் இந்த அன்றாட பரபரப்புகளின் அபத்தங்கள் மீதும் தனது சொற்கள் மூலம் துடைத்தெறியும் சாகச வரிகளை முத்துக்குமார் இந்தப் பாடல் முழுவதிலும் தூவி விட்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் பாடலின் வரி உச்சம் தொடுகிறது. ‘The Perfume’ படத்தில் அந்த செண்ட் வாசனையை நுகர்ந்தவுடன் ஆடைகளை களைந்துவிட்டு தன்னை மறந்து லயித்து பித்தேறிய நடனத்துக்கு ஒப்பானது. Its Pure BlISS. இதோ வரிகள்...


‘மெய் எல்லாம் பொய் ஆக...பொய் எல்லாம் மெய் ஆக...
மெய்யாக மெய்பொய்யின் மர்மம் என்ன ?
மெய் எல்லாம் மெய் இல்லை... பொய் எல்லாம் பொய் இல்லை...
மெய் மெய் மெய்... பொய் பொய் பொய்... மெய்யா என்ன ?’



பாடல் முழுவதும் இதுமாதிரியான வரிகளால் ஒரு ரோலர் கோஸ்டர் அனுபவத்தை முத்துக்குமார் நமக்கு தருகிறார். கடைசியாக, மனம் இளைப்பாறி மூச்சுவிடும்படியாக வரிகள் இப்படி முடிகிறது,


‘அவனாக இருந்தாலும் இவனாக இருந்தாலும்
எவனாக இருந்தாலும் இறுதி என்ன ?
பிச்சை தான் எடுத்தாலும் பேரரசன் ஆனாலும்
புழுவுக்கு இரையாவான் வேறே என்ன!’


இயக்குநர் ராம் சொல்வது போல் நா.முத்துக்குமார் ஓர் அபூர்வம்தான். 


மேலும் படிக்க | கவியரசர் கண்ணதாசன் - காவிய தாயின் மூத்த மகன்


வெறும் காடு மட்டுமல்ல. அவர் படிமங்களாக எத்தனையோ டூல்களை எடுத்துக்கொண்டு மனித உணர்வுகளோடு பொருத்தி கையாண்டிருக்கிறார். சமையல் அறையில் உள்ள அஞ்சறைப் பெட்டி கூட, நா.முத்துக்குமாருக்கு கவிதை எழுதுவதற்கான கருவிதான். அதையே கூட படிமமாக மாற்றி ‘அஞ்சறைப் பெட்டி அறைகள் போலே நெஞ்சுக்குள் அறைகள் வெச்சிருக்கேன்... ஆசைகள் அதில வெச்சிருக்கேன்... அலை அலையா!’ என ஒரு கவிதை எழுதிவிட முடிகிறது. 



நதி மீது விழும் நிலவின் காட்சி எந்தக் கவிஞனுக்கு அலுக்கும். நா.முத்துக்குமார் அந்தக் காட்சியை கலைத்துப்போட்டு கலைத்துப்போட்டு பல பாடல்களில் விளையாடியிருக்கிறார். அவருக்கு எப்போதும் அலுக்காத பிம்பம் போல அது. உச்சமாக, காதல் கொண்டேன் படம் ஞாபகம் வருகிறது. வெறுமனே அக்காட்சியை ரொமாண்டிசைஸ் செய்யாமல், அந்தக் காட்சியை வாழ்வில் ஏதோ ஓர் முடிச்சோடு தொடர்புபடுத்தி எழுதிய வரியது. 


‘நிலவின் ஒளியில் அலைகள் எரியுமா....
அலையின் வேதனை நிலவு அறியுமா.....
வேதனைகள் நெஞ்சில் சுகமாய் எங்கும் பரவுதடி.!’


இதேபோல், மரக்கிளை, கடல், நதி, வண்ணத்துப்பூச்சி, கல்லறைப் பூக்கள், இருள், நிழல் என எத்தனைப் படிமங்கள். அதன் வழியாக எத்தனை உணர்வுகள், எத்தனைச் சொற்கள். ஓர் ரசனைச் சார்ந்த பார்வையைக் கடந்து, முறையாக நா.முத்துக்குமாரின் வரிகள் மீளாய்வு செய்யப்பட்ட வேண்டும். வெறும் பொழுதுபோக்கு பாடலாசிரியோடு முத்துக்குமாரைச் சுருக்குவது தமிழுக்கு அழகல்ல. அவரது கவிதைத் தொகுப்புகள், கட்டுரைகள், பாடல் வரிகள் ஆய்வு, உரைகள் என அனைத்தும் முறையாக தொகுக்கப்பட வேண்டும். இதுதானே முத்துக்குமாருக்கு தமிழ்ச்சமூகம் செலுத்தும் அஞ்சலி!. இது வெறும் அஞ்சலி மட்டுமல்ல. கடமையும்கூட.! 



 ஏனெனில், ‘ஒரு பார்வையில்.... ஒரு வார்த்தையில்....ஒரு தீண்டலில்.... நான் மீண்டும் பிறப்பேனே’ என்று எழுதிவைத்துச் சென்றவர் நா.முத்துக்குமார்!.


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR