தமிழ் ரசிகர்களுடனேயே ஒன்றிப்போனது பாடல்கள். துக்கமோ, மகிழ்ச்சியோ பாடல்களுக்கும், அதன் வரிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும். அதுபோல் அந்த வரிகளை எழுதியவரை எப்போதும் தன் மனதுக்குள்ளேயே வைத்துக்கொள்ளும் பழக்கமும் நம்மிடம் இருக்கிறது.
அப்படி நம் மனதில் கெட்டியாக ஒட்டிப்போன பாடலாசிரியர்களில் நா.முத்துக்குமார் எப்போதும் ஸ்பெஷலானவர். கண்ணதாசன், வாலி ஆகியோரின் பிறந்தநாளுக்கு பிறகு நா.முத்துக்குமாரின் பிறந்தநாளுக்கு மட்டும்தான் சமூக வலைதளங்களில் கொண்டாட்டமும், கவிதை வாசமும் அதீதமாக இருக்கும்.
அதற்கு ஒரே காரணம் முத்துக்குமார் மொழியை வலிந்து எடுத்து திணித்ததில்லை. நமது வீட்டிலிருந்து ஒருவர் பாடல் எழுத சென்றால் எப்படி இருக்குமோ அப்படிப்பட்டது அவரது வரிகள்.
எளிமையாக வாழ்வதும், எழுதுவதும் அவ்வளவு ஒன்றும் எளிதில்லை. அந்த எளிய நடை முத்துக்குமாரிடம் அளவுக்கு அதிகமாகவே இருந்தது. காண கிடைக்காத தருணங்களை கற்பனை குதிரையை அவிழ்த்துவிட்டு எழுதிவிடலாம். ஆனால் நம் அருகிலேயே இருக்கும்; கண்டுக்கொள்ளப்படாத தருணங்களை எழுதுவதற்கு எழுதுபவர் உன்னிப்பான கவனிப்பாளராக இருக்க வேண்டும். முத்துக்குமார் அந்த வகையை சேர்ந்தவர்.
அவரது பேனாவுக்குள் கண்ணதாசனின் ஞான புலமையும் இருக்கும், வாலியின் எளிமையும் இருக்கும். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் அந்த இருவரின் ஒற்றை உருவம் நா. முத்துக்குமார். காதலுக்கு, ஊடலுக்கு, கூடலுக்கு, நட்புக்கு, தந்தைக்கு என அத்தனைக்கும் அவரது வரிகள் இருக்கின்றன.
சினிமாவுக்குள் நுழைந்து புயலாக இருந்து கரை கடந்தவர் முத்துக்குமார். அந்தப் புயல் எந்த வித சேதத்தையும் ஏற்படுத்தியதே இல்லை. சக மனிதனை கவனிக்க மறந்து ஓடிக்கொண்டிருக்கும் இந்த சமூகத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த நா. முத்துக்குமார்தான், “சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும் மலையின் அழகோ தாங்கவில்லை” என்று எழுதினார்.
அதேபோல், ‘அஞ்சறைப் பெட்டி அறைகள் போலே நெஞ்சுக்குள் அறைகள் வெச்சிருக்கேன் ஆசைகள் அதில வெச்சிருக்கேன் அலை அலையா’ என பெண்களின் பார்வையிலிருந்து அவர்களோடு புழங்கும் ஒரு பொருளை வைத்து எழுதுவதெல்லாம் சாதாரணம் கிடையாது.
சொல்லாத காதல், சொல்லவிட துடிக்கும் மனது, பிடித்த பெண்ணை எந்த உறவு புள்ளியில் நிறுத்துவது என தடுமாறும் ஒவ்வொருவருக்காகவும் எழுதியதுதான், ‘காதல் இல்லை காமம் இல்லை இந்த உறவுக்கு உலகத்தில் பெயர் இல்லை’. இந்த வரியை ஒரு ஆணுக்கும், பெண்ணுக்குமான உறவு என்ற நிலையில் சுருக்காமல் சற்று விசால பார்வையோடு பார்த்தால் பெயர் தெரியாத உறவுகள்தான் நம்மிடம் எதையும் எதிர்பார்க்காமல் பழகும் என்பதை புரிந்துகொள்ளலாம்.
வானத்தை வளைத்துப்போட துடிக்கும் மனிதர்கள் மத்தியில் முத்துக்குமார் மட்டும்தான் வெறும் தரையில் படுத்து விண்மீன் பார்ப்பது யோகம் என்று பேசினார்.
தற்காலத்தில் பெண்ணியம் பேசுவது அதிகரித்திருப்பது ஆரோக்கியமான ஒன்றே. அந்த பெண்ணியத்தை அடுத்தவர்களிடம் மட்டும் எதிர்பார்ப்பதுதான் தவறு. தன்னுடைய பதின்ம வயதில் தந்தையை கவிதைக்குள் உலாவவிட்டு மாற்றத்தை நம்மிலிருந்து தொடங்குவோம் என்பதை தூர் கவிதையில் சொல்லியிருப்பார் முத்துக்குமார்.
வீடு மாற்றும் அனைவரும் பொருளை மறக்காமல் எடுத்துக்கொண்டும், பழகியவர்களிடம் மறக்காமல் சொல்லிவிட்டும் செல்வது வழக்கம்தான். ஆனால் முத்துக்குமாரின் சிந்தனை மட்டும்தான், ‘சோறு தேடி வீடு வரும் நாயிடம் யார் போய் சொல்வது வீடு மாற்றுவதை/ என கேள்வி எழுப்பியது. அந்தக் கேள்விக்குள் தெரியும் அவர் எவ்வளவு பெரிய பேரன்புக்காரனாக இருந்தார் என்று.
பிறந்த உயிரை, ‘பூமியிது புனிதம் இல்லை ஆயிரம் அசுத்தங்கள் உள்ளது தீயிலுமே நீந்தி வர நீ இன்று கற்றுக்கொள் நல்லது’ என அக்கறையுடன் எச்சரித்து; ‘பறிப்போமே சோள தட்ட புழுதிதான் நம்ம சட்ட’ என சிறுவர்களுடன் விளையாடி,’நாம் வயதுக்கு வந்தோம் இளைமைக்கு வந்தோம்’ என இளைஞர்களுடன் கொண்டாடியவர் அவர்.
இந்த உலகத்தில் அடையாளம்தான் பெரிய பிரச்னையாக இருக்கிறது. அந்த அடையாளம் தரும் அதிகாரம்தான் பலரை, பல தேசத்தை அடையாளம் இல்லாமல் நிர்மூலமாக்கியிருக்கிறது. அதனால்தான் அவர், “அடையாளம்தான் துறப்போம் எல்லா தேசத்திலும் போய் வசிப்போம்” என்று அனைவரையும் வாஞ்சையோடு அழைத்தார்.
ஒருவர் இருக்கும்போது ஒருவரை கொண்டாடுவது அரிது. அதுவும் கவிஞர்களுக்கு பெரும்பாலும் அந்த பாக்கியம் கிடைக்காது. ஆனால் இருந்தபோதும் சரி, இறந்தபோதும் சரி நா.முத்துக்குமாருக்கு அந்த பாக்கியம் கிடைத்தது. முத்துவின் பிறந்தநாள்தான் இன்றளவும் பலருக்கு கவிதையை ஞாபகப்படுத்துக்கிறது. அன்றைய தினம் எதாவது எழுதி விடவேண்டுமென்று சிலருக்கு தோன்ற வைக்கிறது.
உயிருடன் இருந்தபோது வெளியான அவர் பாடல்களின் எண்ணிக்கை போலவே அவர் இல்லாதபோதும் வெளியாகின. இன்னமும் ஒருநாளைக்கு நாம் கேட்கும் பாடல்களில் குறைந்தபட்சம் 3 பாடல்களாவது அவர் பேனாவிலிருந்து தூறப்பட்டதுதான்.
மேலும் படிக்க | இயக்குநர் பாலா கொடுத்த பிறந்தநாள் ட்ரீட் - வெளியானது சூர்யா 41 ஃபர்ஸ்ட் லுக்
முத்துக்குமார் ஒருவரி எழுதியிருப்பார், “மழை நின்றபோதிலும் மரக்கிளைகள் தூறுதே”. அது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ அவருக்கு பொருந்தும். ஆம், மழை நின்ற பிறகும் நா. முத்துக்குமார் தூறிக்கொண்டே இருக்கிறார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR