Lover Review: டாக்ஸிக் காதலுக்கு எடுத்துக்காட்டு.. “லவ்வர்” படம் எப்படியிருக்கு? திரை விமர்சனம் இதோ!
Lover Tamil Movie Review In Tamil: லவ்வர் திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், இப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.
Manikandan, Sri Gouri Priya Starrer Lover Tamil Movie Review In Tamil Directed By Prabhu Ram Vyas:‘குட் நைட்’ மணிகண்டன் ஹீரோவாக நடித்துள்ள படம், லவ்வர். இந்த படத்தை புதுமுக இயக்குநர், பிரபுராம் வியாஸ் இயக்கியிருக்கிறார். டிரைலர் வெளியான போது இப்படத்திற்கு ரசிகர்கள் மீது அதீத எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்ததா இல்லையா என்பதை விமர்சனத்தில் தெரிந்து கொள்ளலாம்.
கதையின் கரு:
தனது காதலியை தன் கைக்குள் வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கும் காதலன்..அவனால் பல பிரச்சனைகளை சந்திக்கும் காதலி..இறுதியில் சேர்ந்தார்களா? இவர்களின் காதல் என்ன ஆனது? இதுவே லவ்வர் படத்தின் முன்கதை சுருக்கம்.
இன்றைய தலைமுறையினரிடையே அதிகம் பிரபலமான ஒரு வார்த்தை. ‘டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்’. காதல் என்ற பெயரில் மனித தன்மையே இல்லாத விஷயங்களையும் சகஜமானதாக மாற்றி வைத்து, அந்த உறவில் இருப்பதற்கு பெயர்தான், டாக்ஸிக் ரிலேஷன்ஷிப். அப்படி, பல இளசுகள் அல்லல்படும் இந்த டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்பில்தான் காதலனும் காதலியும் இருக்கின்றனர். இதனால் கொஞ்ச நஞ்சம் சந்தோஷமாக போய்க்கொண்டிருக்கும் அவர்களின் வாழ்க்கையும் நரகமாக மாறுகிறது. குறிப்பாக, நாயகிக்கு அதன் தாக்கம் பெரிதாக இருக்கிறது. ஒவ்வொரு முறையும் ‘இதுதான் கடைசி முறை..இதன் பிறகு மாறிவிடுவேன்’ என்று சத்தியம் செய்யும் கதாநாயகன், ஒவ்வொரு முறையும் ஒரே தப்பை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறான். இதனால் காதலை முறித்து கொள்ளலாம் என முடிவு செய்கிறாள் கதாநாயகி. அப்போ 6 வருட காதல் என்ன சும்மாவா? என்று அவளை விடாப்பிடியாக சமாதானப்படுத்த முயற்சிக்கிறான் நாயகன். இறுதியில் என்ன ஆனது? இவர்களின் காதல் ஜெயித்ததா? என்பதே மீதி கதை.
டாக்ஸிக் லவ்வர் பாயாக மணிகண்டன்:
‘குட்நைட்’ படத்தின் மணிகண்டனை மோகன் கதாப்பாத்திரத்தில் பார்த்த பல பெண்கள், தனக்கு காதலன் அமைந்தால் இது போன்று அமைய வேண்டும் என்று வேண்டிக்கொண்டனர். அதற்கு அப்படியே நேர்மறையான கதாப்பாத்திரத்தில் ‘லவ்வர்’ படத்தில் நடித்திருக்கிறார், மணி. ஆரம்பம் முதல் இறுதிவரை ‘அருண்’ என்ற கதாப்பாத்திரமாகவே வாழ்ந்து, தான் செய்யும் தவறு என்ன என்றும் புரியாமல், அதை திருத்தியும் கொள்ளாமல் ஒரு சக இளைஞனின் வாழ்க்கையை கண்முன் நிறுத்துகிறார்.
பல பெண்களின் குமுறலாக திவ்யா…
லவ்வர் படத்தில் நாயகியாக, ஸ்ரீ கெளரி பிரியா நடித்திருக்கிறார். ‘மாடர்ன் லவ்’ படத்தில் பார்த்த முகம் என்றாலும், இந்த படத்தில் தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்து கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு முறையும் காதலனால் துயரப்படும் போது இவர் அழும் நேரங்களில் நமக்கும் அழ தோன்றுகிறது. அந்த அளவிற்கு இவரது கதாப்பாத்திரத்தின் அழுத்தம் சக இளைஞிகளின் உணர்வுகளுடன் ஒன்றிப்போகிறது.
மேலும் படிக்க | விருதுகளை அள்ளி குவிக்கும் இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழு மலை' படம்!
படம் சொல்ல வரும் கருத்து..
தமிழ் சினிமாவில், பல ஆண்டுகளாக, ‘காதல்’ என்ற பெயரில் கொஞ்சம் கூட நம்ப முடியாத, வாழ்வில் நடைபெறாத விஷயங்களை நியாயப்படுத்தி வைத்திருக்கிறோம். அதையெல்லாம் உடைத்து விசிறியடிக்கும் வகையில் உள்ளது, லவ்வர் படம். உதாரணத்திற்கு மணிகண்டன் ஒரு காட்சியில் “உங்கள் காதலிக்கு ஏன் இவ்வளவு சுதந்திரம் கொடுக்கிறீர்கள்?” என்று கேட்க..அதற்கு ஒருவர், “அவளுக்கு சுதந்திரம் கொடுக்க நான் யார்? அவளது சுதந்திரம் அவளுடையது, என்னுடைய சுதந்திரம் என்னுடையது” என்று கூறுவார். இந்த ஒரு காட்சியே போதும், பெரும்பாலான இளசுகள், தங்களது காதலியை பற்றி மனதில் என்ன மாதிரியான பிம்பத்தை வைத்திருக்கிறார்கள் என தெரிந்து கொள்ள.
அதீத போதைப்பொருள் உபயோகம்..
போதைப்பொருள் உபயோகிப்பது தவறு என ‘பொறுப்பு துறப்பு’ வாக்கியத்தை உபயோகித்திருந்தாலும், இந்த படத்தில் மது, சிகரெட், போதைப்பொருள் பழக்கத்தின் உபயோகம் அதிகமாகவே உள்ளது. ஐடியில் வேலைபார்ப்பவர்கள் இப்படித்தான் செய்வார்கள் என்று தவறான படிப்பினைகளுடன் இருக்கும் விஷயங்களை மட்டும் கொஞ்சம் தவிர்த்திருக்கலாம்.
காதலை காட்டவேயில்லை..
படத்திற்கு லவ்வர் என பெயர் வைத்துவிட்டு படத்தில் காதலின் கறுப்பு பக்கத்தை மட்டுமே காண்பித்துள்ளது போன்ற உணர்வு ஏற்படுகிறது. காரணம், இதில் நாயகனும் நாயகியும் 6 வருட ரிலேஷன்ஷிப்பில் இருந்தனர் என கூறும் போது, அவ்வப்போது அவர்களுக்கான காதல் காட்சிகள் வருகின்றன. இதை ஒரு 10 நிமிட ஃப்ளேஷ் பேக்காக வைத்திருக்கலாம் என தோன்றியது. ஆனால், இது படத்தின் பெரிய குறையாக தெரியவில்லை.
மேலும் படிக்க | என்னுடைய இசை நிகழ்ச்சியில் ரசிகர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை - சந்தோஷ் நாராயணன்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ