பெண் புகழ் திருவிழா நடத்துவதில் தென்னாடு ஊர் மிகவும் பிரபலம். ஆனால், அந்த ஊர்த் திருவிழாவை நடத்த முடியாமல் மிகப்பெரிய அளவில் தடைகளை ஏற்படுத்துகிறார் வடநாட்டைச் சேர்ந்த இன்பா (வினய் ராய்). இந்த இரு ஊர்களுக்கும் இடையில் பெண் கொடுத்தல், பெண் எடுத்தல் இருந்தாலும் சில பிரச்சினைகளால் இரு வருடங்களாக கொடுக்கல், வாங்கல் தடைப்படுகிறது. இந்நிலையில் வடநாட்டைச் சேர்ந்த ஆதினியை (பிரியங்கா அருள் மோகன்) தென்னாட்டைச் சேர்ந்த கண்ணபிரான் (சூர்யா) பார்த்ததும் காதல் வயப்படுகிறார். இருவருக்குள்ளும் காதல் பூக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆதினியின் தோழி திவ்யா துரைசாமிக்கு மிகப்பெரிய ஆபத்து நேர்கிறது. அதற்கு முன்னதாக சில பெண்கள் திடீரென்று தற்கொலை செய்து கொள்கிறார்கள் அல்லது விபத்தில் மரணம் அடைகிறார்கள். இது தற்செயல் விபத்து இல்லை, மர்மம் இருக்கிறது என்பதை சூர்யா உணர்கிறார். திவ்யா துரைசாமிக்கு வந்த ஆபத்திலிருந்து காப்பாற்ற முயலும்போது மேலும் சிக்கல்களைச் சந்திக்கிறார். இந்நிலையில் சூர்யா என்ன செய்கிறார், பெண்கள் பாதிக்கப்பட யார் காரணம், நீதித்துறை, காவல்துறையின் செயல்பாடுகள் எப்படி உள்ளன போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்கிறது திரைக்கதை. 


பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியதை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்துவிட முடியாது. பெண்கள் கடத்தல், கூட்டுப் பாலியல் வன்கொடுமை, அதை வீடியோவாக எடுத்து மிரட்டல் எனப் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் பெரிய அளவில் நடந்தது. இந்த உண்மைச் சம்பவத்தைத் தழுவி சமூக அக்கறை மிகுந்த கருத்தை விதைத்துள்ளார் இயக்குநர் பாண்டிராஜ். அவரின் முனைப்பும் முயற்சியும் பாராட்டுக்குரியது. ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தில் பாண்டிராஜின் ட்ரேட் மார்க் குடும்பப் பாசம், உணர்வுபூர்வ காட்சிகளும் இடம்பிடித்துள்ளன. 



எம்.கர்ணன் இயக்கத்தில் சிவகுமார், ஜெயலட்சுமி, மேஜர் சுந்தர் ராஜன், அசோகன், தேங்காய் சீனிவாசன் நடிப்பில் வெளியான படம் எதற்கும் துணிந்தவன். தந்தை நடித்த அதே படத் தலைப்பில் மகனும் நடித்துத் தந்தைக்குப் பெருமை சேர்த்துள்ளார். இன்னொரு படி மேலே போய் சிவகுமாருக்கே உரிய முருகன் இமேஜையும் சூர்யா இப்படத்தின் மூலம் தனதாக்கிக் கொண்டுள்ளார். உள்ளம் உருகுதய்யா பாடல் ரீமிக்ஸ், முருகன் வேடம், நாயகி முருக பக்தை என முருகன் ரெஃபரன்ஸ் படத்தில் அதிகம். 


சூர்யாவுக்கு நிச்சயம் இது அடுத்தகட்டப் பாய்ச்சலை அளித்துள்ள படம் என்று தாராளமாகச் சொல்லலாம். சூரரைப் போற்று, ஜெய் பீம் வரிசையில் கான்செப்ட் சினிமாவில் இறங்கி அடித்திருக்கிறார். பொறுப்பான வழக்கறிஞர், கோபமுள்ள போராளி என கண்ணபிரான் கதாபாத்திரத்துக்கு முழுமையான அளவில் நியாயம் சேர்த்துள்ளார். கௌதம் மேனன் வெர்ஷன், ஹரி வெர்ஷன் என்றே இருந்த சூர்யா இந்த மூன்றாவது வெர்ஷனில் தொடர்ந்து பயணிக்கலாம். அவருடைய நாயக பிம்பத்துக்கு வலு சேர்க்கும் வகையில் வாடா தம்பி என்ற பாடலும், அண்ணன் என்று உருகி, மருகி, பூப்போட்டு வாழ்த்தும் கூட்டமும் சேர்ந்துள்ளது. 


மேலும் படிக்க | சூர்யா வெர்ஷன் 3.0: சரிவைச் சரிசெய்துகொண்டது எப்படி?


பிரியங்கா அருள் மோகன் டூயட் பாடும் நாயகியாக இல்லாமல் கதையை நகர்த்தப் பயன்பட்டுள்ளார். பிரச்சினையைக் கண்டு துவண்டு மூலையில் முடங்கும் அவர் பின்பு தெளிவடைந்து பிறருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது நல்ல மாற்றம். அந்த அளவில் பக்குவமான நடிப்பை அளித்து ஈர்க்கிறார். 


துப்பறிவாளன், டாக்டர் படங்களில் பார்த்த அதே ஸ்டைலிஸ்ட் வினய்தான். மற்றபடி அவர் கதாபாத்திரப் படைப்பில் எந்தப் புதுமையும் இல்லை. சத்யராஜ், சரணயா பொன்வண்ணன் ஆகியோர் சூர்யாவின் பெற்றோராக வழக்கம்போல் தேர்ந்த நடிப்பைக் கொடுத்துள்ளனர். ஹரிஷ் பெராடி, மதுசூதன ராவ், வேல ராமமூர்த்தி, சுப்பு பஞ்சு, சாய் தீனா, ஜெயப்பிரகாஷ், விஜி சந்திரசேகர், சூப்பர் குட் சுப்பிரமணி, மனோஜ்குமார், தங்கதுரை, ராமர்,ஆர்.என்.ஆர். மனோகர் எனப் படத்தில் மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.


சூரி, புகழுக்குப் பெரிய அளவில் முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. தேவதர்ஷினியும், இளவரசும் அசால்ட்டாக ஸ்கோர் செய்கிறார்கள். திவ்யா துரைசாமி, சரண் சக்தி, சிபி புவன சந்திரன் ஆகியோரின் நடிப்பு கவனிக்க வைக்கிறது. 


ரத்னவேலின் ஒளிப்பதிவும், இமானின் இசையும் படத்துக்கு பெரிய அளவில் உறுதுணை புரிந்து பலம் சேர்த்துள்ளன. சிவகார்த்திகேயன் எழுதிய சுர்ருன்னு பாடலை மட்டும் எடிட்டர் ரூபன் இயக்குநர் ஒத்துழைப்புடன் கத்தரித்திருக்கலாம்.  சூர்யாவை மாஸ் ஹீரோவாகக் காட்டிய விதத்தில் இமானின் பின்னணி இசைக்கும் பெரும் பங்கு உள்ளது. சண்டைக்காட்சிகளும் தரம். 



ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கமல் நடித்த பாபநாசம் படமும் கிட்டத்தட்ட இதே மாதிரியான கதைதான். ஆனால், தவறிலிருந்து, கொலைப் பழியிலிருந்து குடும்பத்தோடு தப்பிப்பது எப்படி என்று மட்டுமே அப்படத்தின் திரைக்கதை நகரும். த்ரிஷ்யம் மலையாளப் படத்தின் ரீமேக் ஆக இருந்தாலும், மலையாளம், தமிழ், தெலுங்கு எனப் பல மொழிகளில் அப்படம் வெளிவந்தாலும் வீடியோ எடுத்த, தவறு செய்த நபர் குறித்த கேள்விகளை அதிகம் எழுப்பவில்லை. ஒருவேளை கமல், அது உன் குற்றமல்ல, அந்த இளைஞனின் குற்றம் என்று தன் மகளிடம் பேசி தைரியம் கொடுத்திருந்தால் வேறு மாதிரி இருந்திருக்கும். அதை கமல் தவறவிட்டுவிட்டார்.


ஆனால், அந்த முக்கியமான அம்சத்தை சூர்யா கச்சிதமாகக் கையிலெடுத்துக் கொண்டார். தவறாக வீடியோ எடுத்த நபர் எந்தக் குற்ற உணர்ச்சியும் அடையாமல் வெளியில் சுதந்திரமாகத் திரியும்போது பாதிக்கப்பட்டவர்கள் ஏன் கூனிக்குறுக வேண்டும், பாதிக்கப்பட்ட பெண் எப்போதும் எதற்காகவும் அவமானப்படத் தேவையில்லை, கூனிக் குறுகத் தேவையில்லை, பெண்கள் பலவீனமல்ல பலம் என்ற கருத்தை ஆழமாக சூர்யா விதைத்துள்ளார். இயக்குநர் பாண்டிராஜ் அக்கறையே இதற்கு முழு காரணம் என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆண்கள் அழக்கூடாதுன்னு சொல்றதை விட, பெண்களை அழவைக்கக் கூடாதுன்னு வளரும்போதே சொல்லுங்க என்கிறார் சூர்யா. அந்த வசனம் மிகக் கூர்மையானது. 


மேலும் படிக்க |  எப்படி உள்ளது சூர்யாவின் எதற்கும் துணிந்தவன்? திரை விமர்சனம்!


டெக்னிக்கல் அளவில் புத்திசாலியாக இருக்கும் சூர்யா ஏன் அந்த கும்பலைச் சரியாக நெருங்கவே முடியவில்லை, தடயங்களை அழிக்க முடியவில்லை என்பது லாஜிக் இடறல். ஆனாலும், அதைச் சரிசெய்ய எமோஷனலான காட்சிகள் மூலம் ரசிகர்களைக் கட்டிப்போட்டுவிடலாம் என்று நம்பியிருக்கிறார்கள். அது ஓரளவு எடுபட்டுள்ளது. காதல் காட்சிகளைக் குறைத்து, சமூக அக்கறையை முழுமையாகப் பேசியிருந்தால் எதற்கும் துணிந்தவன் படம் வேற லெவலில் பேசப்பட்டிருக்கும். 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR