சிறந்த நடிகைக்கான தேசிய விருதை டெல்லியில் நடைபெற்ற விழாவில் கீர்த்தி சுரேஷ் பெற்றுக் கொண்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2019-ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது. இவ்விருதுகளை துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு வழங்கி வருகிறார். இந்த விழா விக்ஞான் பவனில் நடைபெறுகிறது. இவ்விழாவில் கூடுதல் சிறப்பு விருந்தினராக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் கலந்து கொண்டுள்ளார். 


விருதுகளை பெற்றவர்களுக்கு இன்று மாலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேநீர் விருந்து அளிக்கவுள்ளார். இந்த ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது. இன்று நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், சிறந்த நடிகைக்கான தேசிய விருதை கீர்த்தி சுரேஷ் பெற்றுக் கொண்டார். 


மகாநடி படத்தில் நடித்ததற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது. தமிழில் சிறந்த படமாக பிரியா கிருஷ்ணசாமி இயக்கிய பாரம் படம் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. 



மேலும் ‘உரி: சர்ஜிக்கல் ஸ்டிரைக்‘ படத்தில் நடித்த விக்கி கெளசால், ‘அந்தாதூன்’ படத்தில் நடித்த ஆயுஷ்மான் குரானா ஆகியோர் சிறந்த நடிகர்களுக்கான தேசிய விருதை இணைந்து பெற்றுக்கொண்டனர். ‘உரி: சர்ஜிக்கல் ஸ்டிரைக்‘ திரைப்படத்தின் இயக்குநர் ஆதித்யதர் சிறந்த இயக்குநருக்கான விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 


31 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு திரைப்பட நட்பு மாநில விருது புதிதாக நிறுவப்பட்டுள்ளது. இதில் உத்தராகண்ட் மாநிலம் விருதை தட்டிச் சென்றது.