வலுக்கும் பிரச்சனைகளுக்கு மத்தியில் துணை தலைவராக பார்த்திபன்!
நடிகர் விஷால் தலைமையில் நடைபெற்ற தயாரிப்பாளர் சங்க செயற்குழு கூட்டத்தில் நடிகர் பார்த்திபன் துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்!
நடிகர் விஷால் தலைமையில் நடைபெற்ற தயாரிப்பாளர் சங்க செயற்குழு கூட்டத்தில் நடிகர் பார்த்திபன் துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்!
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் சமீப காலமாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றது. அந்த வகையில் கடந்த டிசம்பர் 20-ஆம் நாள் விஷாலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தயாரிப்பாளர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டு தயாரிப்பாளர் சக்க அலுவலகங்களை பூட்டினர். பூட்டப்பட்ட அலுவலக பூட்டை உடைக்க விஷால் முயன்றார், இதன் காரணமாக இவர் கைதாகி பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் தற்போது இந்த அலுவலகங்கள் திறக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் இந்த பிரச்சினைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் அண்ணா சாலையில் உள்ள சங்க அலுவகத்தில் விஷால் தலைமையில் நேற்று நடைப்பெற்றது
தயாரிப்பாளர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் பலரும் இந்த செயற்குழு கூட்டத்தில் கலந்துக் கொண்டனர்.
கூட்டத்தில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில், சங்க துணைத்தலைவர் கவுதம் மேனனுக்கு பதிலாக பார்த்திபன் துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சங்கத்தை பூட்டு போட்ட உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஷால் தெரிவிக்கையில்... GST குறைப்பால் சினிமா டிக்கெட்டிற்கான விலை குறையும். அடுத்த செயற்குழு கூட்டத்தில் பொதுக்குழு தேதி குறித்து முடிவு செய்யப்படும். இளையராஜா நிகழ்ச்சி தொடர்பாக முதல்வரை சந்திக்க அனுமதி கோரியுள்ளோம் என தெரிவித்தார்.