சர்வதேச திரைப்பட விழாவில் பார்த்திபன் இயக்கிய ‘ஒத்த செருப்பு’ படத்துக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

17-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா, கடந்த 10-ந் தேதி தொடங்கியது. சென்னையில் உள்ள தேவி, தேவி பாலா, அண்ணா, கேசினோ, ரஷ்யன் கலாச்சார மையம், தாகூர் திரைப்பட மையம் ஆகிய ஆறு திரையரங்குகளில், 55 நாடுகளில் இருந்து 130-க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்பட்டன.


இதில் அர்ஜென்டினா, பெல்ஜியம், ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து 95 படங்கள் திரையிடப்பட்டன.


தமிழ் படங்களுக்கான போட்டி பிரிவில், ‘அடுத்த சாட்டை’, ‘அசுரன்’, ‘பக்ரீத்’, ‘ஹவுஸ் ஓனர்’, ‘ஜீவி’, ‘கனா’, ‘மெய்’, ‘ஒத்த செருப்பு’, ‘பிழை’, ‘சீதக்காதி’, ‘சில்லுக் கருப்பட்டி’ மற்றும் ‘தோழர் வெங்கடேசன்’ ஆகிய 12 படங்கள் தேர்வு செய்யப்பட்டன. நேற்று மாலை நடைபெற்ற இறுதி விழாவில், தேர்வு செய்யப்பட்ட படங்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. 


அதில் தமிழில், பார்த்திபன் தயாரித்து, இயக்கி, நடித்த ‘ஒத்த செருப்பு’ படம், சிறந்த படத்துக்கான முதல் பரிசை வென்றது. இரண்டாம் பரிசை ‘சில்லுக் கருப்பட்டி’ மற்றும் ‘பக்ரீத்’ ஆகிய இரண்டு படங்களும் வென்றது. 


சிறப்பு நடுவர் விருது, ‘அசுரன்’ படத்துக்கு வழங்கப்பட்டது. படத்தின் இயக்குநர் வெற்றிமாறனுக்கு 1 லட்ச ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. ‘அமிதாப் பச்சன் யூத் ஐகான் விருது’, ‘ராட்சசன்’ படத்தின் இயக்குநர் ராம்குமாருக்கு வழங்கப்பட்டது. 


பார்த்திபன் நடித்து இயக்கிய ஒத்த செருப்பு சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது. விருதை நடிகர் நாசர் வழங்க பார்த்திபன் பெற்றுக் கொண்டார். நடிகர் ரமேஷ்கன்னா, மனோபாலா உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர். நிறைவு நாளின் இறுதிப்படமாக குண்டர்மேன் திரையிடப்பட்டது.