உயிர் உங்களுடையது தேவி... குந்தவை எனும் ஐயன் லேடி - மறக்க கூடாத சோழர் குல இளவரசி!
Ponniyin Selvan Kundhavai: ராஜ ராஜ சோழன் குறித்தும், அருண்மொழிவர்மன் குறித்தும் புகழ் மாலைகள் சூழ்ந்திருக்கும் வேளையில், அவர்களை போலவே நினைவுக்கூற தகுந்தவர் எனில், அது குந்தவை தான். மற்ற இளவரசிகளை போன்றில்லாமல், குந்தவைக்கு என்று இருக்கும் மாண்புகளால் தான் அவர் தனித்து அறியப்படுகிறார்.
Ponniyin Selvan Kundhavai: சோழ தேசத்து மணிமுடியை மதுராந்தகனுக்கு அளிக்க, கடம்பூர் மாளிகையில் பெரிய பழுவேட்டரையர் தலைமையில் சிற்றரசர்கள் கூடி, சதி(?) திட்டம் ஒன்றை தீட்டுவார்கள். இதனை பொன்னியின் செல்வன் நாவலில் படித்திருப்பீர்கள், இல்லையெனில் அந்த படத்தில் காட்சியாகவும் பார்த்திருப்பீர்கள். அந்த சதியின் நீட்சியாக, தஞ்சை கோட்டையிலும் பெரிய பழுவேட்டரையர் தலைமையில் சிற்றரசர்கள் சுரங்க பாதை மூலம் வந்து சதி ஆலோசனை செய்வார்கள்.
அந்த ஒரு காட்சி!
அப்போது, திடீரென என்ட்ரி கொடுப்பார் திரிஷா, இல்லை குந்தவை. சதி கூட்டத்தின் நடுவே நின்று, சிற்றரசர்களை தனது வலைக்குள் விழவைத்து, அந்த கூட்டத்தை தனது சகோதரர்களின் சுயம்வர பேச்சுவார்த்தைக்கானதாக மாற்றிக்காட்டுவார், குந்தவை. இந்த ஒரே ஒரு காட்சி, பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவையின் கதாபாத்திரத்தை 'நறுக்' என்று பார்வையாளர்களிடம் பதியவைத்துவிடும்.
இந்த ஒரு காட்சியில் குந்தவையின் அறிவாற்றல் மட்டுமின்றி, அரசியல் தந்திரம், அரசியல் புரிதல், அச்சமின்மை உள்ளிட்ட அனைத்தும் வெளிப்பட்டுவிடும். குறிப்பாக, ஆடை, ஆபரணங்களில் மோகமாகத்துடன் இருப்பவரா, அந்தப்புரத்தில் இளவரசனுடன் கொஞ்சி விளையாடுபவரோ அல்ல இந்த குந்தவை என்பதை பளீரென உடைத்துக்காட்டிவிடும்.
தனித்த அடையாளம்
குந்தவை தேவியின் அரசியல் சாணக்கியமும், அச்சமின்மையும் தான் சோழ பேரரசசின் பெரும் எழுச்சிக்கு வித்து என கூறினால் உங்களால் நம்ப முடியாது அல்லவா... ஆனால், அதுதான் நிதர்சனமும் கூட. வரலாற்று கதாபாத்திரமாக அறியப்படும் ஆழ்வார் பராந்தக குந்தவை நாச்சியார் எனும் இளைய பிராட்டி, ஆதித்த கரிகாலனின் இளைய சகோதரியாகவும், ராஜ ராஜ சோழன் என பெயர் பெற்ற அருண்மொழிவர்மனின் மூத்த சகோதரியாகவும் அறியப்படாமல் அவரின் தனித்த அடையாளத்துடன் அறியப்படுவராக திகழ்கிறார்.
மேலும் படிக்க | Ponniyin Selvan 2 review: பொன்னியின் செல்வன் 2 படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!
அவரை வார்த்தை போரில் வெல்ல முடியாது நந்தினி தேவி ஒரு இடத்தில் கூறுகிறாள். அந்த அளவிற்கு குந்தவை பேச்சில் வல்லவராக இருக்கிறார். ஒற்றர்களுடன் பேச்சுவார்த்தை செய்கிறார், சுற்றி நடப்பவை அனைத்தையும் குறிப்பால் புரிந்துகொள்கிறார், சோழ தேசத்தின் கோட்டையை தாங்கிப்பிடிக்கும் ஒரு தூணைப் போல செயல்படுகிறார். இதுதான் அவருக்கென ஒரு தனித்த அடையாளத்தை உருவாக்குகிறது.
ஆணாதிக்கத்தை மீறியவர் குந்தவை
தற்போதைய ஆணாதிக்க மனநிலையில் இருந்து முற்றிலும் மீறிய கதாபாத்திரமாக குந்தவை இருக்கிறார். அவர் சுதந்திரமாக சிந்திக்கிறார், செயல்படுகிறார். இவை, தான் பெண்ணியத்தின் அடிப்படையாக பார்க்கப்படுகிறது, குந்தவை 10ஆம் நூற்றாண்டில் பிறந்தவர் என்பதை நினைவில் வைக்க வேண்டும்.
ஆதித்த கரிகாலன் வடக்கு நோக்கி ரத்த பசியில் போர் புரிந்துகொண்டிருந்தபோது, அருண்மொழி வர்மன் இலங்கையில் போர் புரிய சென்றிருந்தார். அந்த நேரம், மாமன்னர் சுந்தரச்சோழனும் நோய் வாய்ப்பட்டிருக்க குந்தவை பழையாறில் இருந்துகொண்ட சோழ தேசத்தின் அத்தனை இயக்கங்களையும் கண்காணித்து, அதனை சீராக இயக்கியும் வருகிறார்.
போரும், சச்சரவும் பெண்ணால் தான், பெண்களுக்காக தான் என்பது ஆணாதிக்க உச்சம் எனலாம். அந்த உச்சத்தை முச்சந்தியில் நிறுத்தியவர் குந்தவை. பெண் வெறும் காட்சி பொருள் இல்லை, அவள் ஆட்சி செய்யும் வல்லமையும் படைத்தவள் என்பதற்கு உதாரணமாக குந்தவையை நாம் பார்க்க முடியும். அவருக்குள்ளும் காதல் இருக்கிறது, ஆசை இருக்கிறது, பகை இருக்கிறது, குரூரம் இருக்கிறது. ஆனால், அவை அனைத்தையும் அடக்கி ஆண்டு, ஒரு பரிபூரணமாக குந்தவை அந்த சோழ தேசத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்திருக்கிறார்.
Spoiler Alert
பொன்னியின் செல்வன் 2ஆம் பாகத்தின் ஒரு காட்சியில், அருண்மொழி வர்மனிடம் குந்தவை இப்படி கூறுவாள், 'இரண்டு மாபெரும் வீரர்களுக்கு இடையே வளர்ந்தவள் நான். என்னை அழவைத்து விடாதே, இப்போது சிரிக்க வை' என்று.
இந்த வசனம் குந்தவையின் ஆளுமை எப்படி அவரின் சகோதரர்களிடம் தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறது என்பதை காட்டும் விதத்தில் இருக்கும். ஆம், இந்த இரண்டு வரலாற்று போற்றும் வீரர்களின் ஆளுமையில் தவிர்க்க முடியா இடத்தை பிடித்தவர், குந்தவை. அவர் இல்லாவிட்டால் சோழ தேசம் நிமிர்ந்திருக்காது, ஆதித்தன், அருண்மொழியின் ஆளுமையும் இப்படி வளர்ந்திருக்காது என அடித்துச்சொல்லலாம். ராஜ ராஜன்களில் பெயர்கள் எப்போதும் வரலாற்றில் பொன் எழுத்துகளில் பதிக்கப்படும், ஆனால் குந்தவைகளின் பெயர் எப்போது கால ஓட்டத்தில் மறக்கடிக்கப்படும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ