ஜோத்பூர்: சட்ட விரோதமாக ஆயுதம் வைத்திருந்த வழக்கிலிருந்து பாலிவுட் நடிகர் சல்மான்கான் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் கடந்த 1998-ம் ஆண்டு ’ஹம் சாத் சாத் ஹெய்ன்’ என்ற படத்தின் சூட்டிங் நடந்தது. 
படப்பிடிப்பு ஓய்வு நேரத்தில் நடிகர் சல்மான்கான் ஜோத்பூர் அருகில் உள்ள கன்கனி வனப்பகுதிக்கு சென்று மான் வேட்டையில் ஈடுபட்டார். அவர் துப்பாக்கியால் சுட்டதில் அரியவகை மான் கொல்லப்பட்டன.


இதையடுத்து நடிகர் சல்மான்கான் மீது வன விலங்கு வேட்டையாடுதல் தடை சட்டத்தின் கீழ் ஜோத்பூர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதில் நடிகர் சல்மான்கான் சட்ட விரோத ஆயுதங்களை பயன்படுத்தி மான்வேட்டை நடத்தியதாக கூறப்பட்டது.


இந்த வழக்கு ஜோத்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அப்போது, அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்து அதைப்பயன்படுத்தியதாக கூறப்பட்ட குற்றச்சாட்டை மறுத்து வாதாடிய சல்மான் கான் தரப்பு வழக்கறிஞர், ஏர்கன் மட்டுமே சல்மான் கான் வைத்திருந்தார் பயர்ஆர்ம்ஸ் வைத்திருந்ததாக கூறப்படுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றார். சல்மான் கானும் தன் மீது வழக்கு திணிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். 


இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய ஜோத்பூர் நீதிமன்றம் சல்மான்கானை விடுவித்து தீர்ப்பளித்துள்ளது. அரசு தரப்பு போதிய ஆதாரங்கள் அளிக்க தவறியதால் சல்மான் கான் விடுவிக்கப்பட்டதாக சல்மான் கான் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். 


இந்த தீர்ப்பின் மூலம் 18 ஆண்டு காலமாக நடைபெற்று வந்த வழக்கில் சல்மான் கான் விடுவிக்கப்பட்டுள்ளார்.